சில்லறை வணிகர்களின் சோற்றில் மண் அள்ளிப் போடும் கொடுமையை இந்திய அரசு செய்யக் கூடாது -சீமான்

50

வணிகத்தில் ஒரே சின்னம் கொண்ட பொருள்கள் விற்பனையில் இங்கு எழுந்த கடும் எதிர்ப்பையும் மீறி 51 விழுக்காடு அன்னிய நேரடி முதலீட்டுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு இந்திய அரசு அனுமதி அளித்தது. ஆனால் இப்பொழுதோ, விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கான ஆலோசனைகள் வழங்க அரசு நியமித்த ஆய்வுக்குழுத் தலைவர் கெப்சிக் பாசு, சில்லறை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிப்பதும், விவசாயப் பொருள் கொள்முதல் சட்டத்தில் சில திருத்தங்கள் செய்வதும் விலைவாசியைக் குறைக்க உதவும் என்று கூறியுள்ளார்.இவரது பரிந்துரையைக் காரணம் காட்டி இந்திய அரசு சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீடு தொடர்பான முடிவினை விரைவில் எடுக்கும் என்று தெரிகிறது. சில்லறை வணிகத்தில நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிப்பது மிகவும் சீரழிவான ஒன்றாகும்.இதனை சிறிதும் அனுமதிக்க முடியாது.

தமிழ்நாட்டில் மூன்று லட்சத்துக்கும் அதிகமான சில்லறை வியாபாரிகள் உள்ளனர். சில்லறை வணிகத்தில் ஈடுபடுபவர்கள் அரசின் எந்த உதவியும் இன்றி தங்கள் சேமிப்பின் மூலமோ, சொத்துக்களை விற்றோ,கடன் வாங்கியோ,தங்கள் சொந்த முதலீட்டில் தாங்களே வியாபாரம் செய்கின்றனர்.இதற்காக கடுமையான உழைப்பையும் தருகின்றனர்.அவர்களின் வாழ்வில் அக்கறை செலுத்த வேண்டிய அரசுகள்,அவர்களை முன்னேற்ற உதவி செய்ய வேண்டிய வேண்டிய அரசுகள் அவர்களுக்கு உதவிகரமாக இல்லாவிட்டாலும் வெளிநாட்டு நிறுவன்ங்களை அழைத்து வந்து அவர்கள் சோற்றில் மண் அள்ளிப் போடும் கொடுமையைச் செய்யக் கூடாது.அது கடுமையான எதிர்மறை விளைவை ஏற்படுத்தி விடும்.ஏற்கனவே பெரிய நிறுவனங்களின் போட்டியைச் சமாளிக்க முடியாமல் நாடு முழுவதும் உள்ள சிறு வியாபாரிகள் திணறுகின்றனர்.கொஞ்சம் கொஞ்சமாக பொருள் இழப்பை எதிர் கொண்டு வருகின்றனர்.இந்த நிலையில் சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீடு என்பது அவர்களை இந்தத் தொழிலில் இருந்து முற்றிலும் விரட்டி விடும். இதன் விளைவாக உள்நாட்டு வணிகம், விவசாயம், நெசவு போன்ற தொழில்கள் பெருமளவு பாதிக்கப்படக் கூடும்.இதன் காரணமாக, பல லட்சம் பேர் வாழ்க்கையைத் தொலைக்க வேண்டிய அபாயம் ஏற்படும்.

சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டினால் பொருட்களின் விலை குறையும் என்பது ஏமாற்றாகும்.அவர்களுக்கு இந்த நாட்டின் மீதோ மக்களின் நலன் மீதோ சிறிதும் அக்கறை கிடையாது. அவர்கள் சொல்லும் தரம்,மலிவு,பிரஷ் என்பெதெல்லாம் மாயஜாலம்.நடைமுறையில் அவர்கள் இதனை செய்யப்போவது இல்லை.முதலில் நம் சந்தையைக் கைப்பற்றும் அன்னிய முதலீட்டாளர்கள் காலப்போக்கில் நம் வணிகர்களின் சிறு கடைகள் அழிந்தபிறகு சந்தை விலையை நிர்ணயம் செய்யும். அப்போது மக்கள் நலன் என்பது கருத்தில் கொள்ளப்படாமல் அதிக  லாபம் ஒன்றே குறிக்கோளாக இருக்கும்.இவர்களால் விலைவாசி மிகக் கடுமையாக அதிகரிக்கும்.வேறு எங்கும் பொருட்கள் வாங்க முடியாத நிலை உருவாகும்.ஏற்கனவே அரசு மொத்த வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்துள்ளது.ஆனால் இன்று வரை விலைவாசி சிறிதும் குறைய வில்லை.அப்படியானால் சில்லறை வர்த்தகத்தில் மட்டும் எப்படிக் குறையும்?

மேலும் சில்லறை வணிகம் என்பது வெறும் வியாபாரம் மட்டுமல்ல, அதில் நாட்டின் உணவு உற்பத்தி, உணவுப் பாதுகாப்பு, விவசாயிகளின் நலன்,உள்ளுர் தொழில்களின் பாதுகாப்பு,நம் மக்களின் வாழ்வாதாரம் என அனைத்தும் பின்னிப் பிணைந்துள்ளது.கோடிக்கணக்கான தொழிலாளர்களும்,சிறு வணிகர்களும்,சிறு விவசாயிகளும்,சிறு உற்பத்தியாளர்களும் தான் இந்த நாட்டை இதுவரை உருவாக்கினார்கள். காலம் காலமாக அவர்கள் அரும்பாடு பட்டு எட்டிய வளர்ச்சி நம் கண்ணுக்கு முன்னாலேயே இப்பொழுது அழிந்து வருகிறது.அதன் உச்சம் தான் சில்லறை வணிகத்தில் முழுவதும் அன்னிய முதலீட்டை அனுமதிப்பது ஆகும்.

ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்வதன் மூலமும்,அரசின் குளிர்பதன சேமிப்பு கிடங்கு கட்டமைப்பை  மேம்படுத்துவதன் மூலமும்,உணவுப் பொருள் பதுக்கலை ஒழிப்பதன் மூலமும்,பொது விநியோகத் திட்ட்த்தை சரியாகச் செயல்படுத்துவதன் மூலமும் விலைவாசி குறையவும் மக்களுக்கு புத்தம் புதிதாக பொருட்கள் கிடைப்பதற்கும் வழிவகை செய்யலாம்.அதை விடுத்து சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீடு அனுமதி என்பது அயோக்கியத்தனம் ஆகும்.ஆகவே இந்திய அரசு இதில் எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடம் கொடுக்காமல் அனுமதி மறுக்க வேண்டும்.

முந்தைய செய்திகாணொளியை உறுதிப்படுத்தியது ஐ.நா – அடுத்த கட்ட விசாரணைக்கு அழைப்பு
அடுத்த செய்திA plea from death row – A.G. PERARIVALAN