சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா நிபுணர்குழு வெளியிட்டுள்ள அறிக்கைக்கு சுவிஸ் அரசும் தனது ஆதரவுகளை தெரிவித்துள்ளதாக சிறீலங்காவுக்கான சுவிஸ் தூதரகத்தின் அதிகாரி பிரான்ஸ் செனிட்டர் தெரிவித்துள்ளார்.
ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பில் சிறீலங்கா வெளிவிவகார அமைச்சருக்கும், சிறீலங்காவுக்கான சுவிற்சலாந்து தூதுவர் லிற்செருக்கும் இடையில் உத்தியோகபூர்வமற்ற சந்திப்பொன்று அண்மையில் நடைபெற்றிருந்தது.
ஐ.நாவின் கருத்துக்களை சுவிஸ் அரசு வரவேற்கின்றது. பொதுமக்களை பாதுகாப்பது எவ்வாறு என்பது தொடர்பில் ஐ.நா பாதுகாப்புச்சபை ஆராய்ந்துவருகின்றது. போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் காத்திரமான விசாரணைகளை மேற்கொள்வதும் பொதுமக்களை பாதுகாப்பதற்கான வழியாகும்.
2009 ஆம் ஆண்டு சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா நிபுணர் குழு வெளியிட்டுள்ள அறிக்கைக்கு சுவிற்சலாந்தும் தனது ஆதரவை வழங்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. ஜெனீவாவில் நடைபெறும் இந்த கூட்டத்தை சுவிஸ் அரசும், கனடாவும் இணைந்து மேற்கொள்ளத்திட்டமிட்டுள்ளதாக சிறீலங்கா அரசு குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த கூட்டத்திற்கு சிறீலங்காவை சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர்களும் அழைக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் இது நட்புரீதியற்றது எனவும் சிறீலங்கா அரசு தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. கொழும்பில் உள்ள கனேடியத் தூதுவர் புறூஸ் லெவி மற்றும் சுவிஸ் தூதுவது தோமஸ் லிற்சர் ஆகியோரை அழைத்த சிறீலங்கா வெளிவிவகார அமைச்சகம் தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
ஓட்டாவா மற்றும் பேர்ன் பகுதிகளில் உள்ள சிறீலங்கா தூதரகங்களும் இந்த கூட்டத்தை நிறுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
எனினும், ஜெனீவாவில் நடைபெறும் கூட்டம் வழமையாக நடைபெறும் கூட்டம் எனவும், அதில் பல விடயங்கள் கலந்துரையாடப்படுவதாகவும் லெவி தெரிவித்துள்ளார்.
நன்றி
ஈழம் இ நியூஸ்