முறைகேடுகள் நடந்தால் தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

26

சட்டப் பேரவைத் தேர்தலில் முறைகேடுகள் நடந்தால் வாக்குப் பதிவை ரத்து செய்யவும், மறு தேர்தல் நடத்தவும் தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் எச்சரித்துள்ளார்.

வாக்காளர்களுக்கு அதிகளவில் பணம், பரிசுப் பொருட்கள் அளிக்கப்பட்ட தொகுதிகளின் நிலவரங்களை கையில் வைத்துக் கொண்டே ஆணையம் இவ்வாறு கூறியுள்ளதாகக் கருத்து நிலவுகிறது.

யார் தகவல்கள் அளிப்பார்கள்? ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்களின் செலவுக் கணக்குகளைக் கண்காணிக்க பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், பொதுப் பார்வையாளர்கள், போலீஸ் பார்வையாளர்கள் என தனித்தனியே அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தேர்தல் ஆணையத்துக்கு தகவல்களை அளித்து வருகின்றனர்.

அவர்கள் தரும் புள்ளி விவரங்களை அடிப்படையாக வைத்தும், பொதுவாக வரும் புகார்களின் தன்மையைக் கொண்டும் முறைகேடுகளின் அளவு நிர்ணயிக்கப்படும் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

புனித ஜார்ஜ் கோட்டையில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை பேசிய தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் கூறியது: சட்டப் பேரவைத் தொகுதிகளில் முறைகேடுகள் நடந்ததாகக் கருதினால், அந்தத் தொகுதியில் தேர்தலை நிறுத்த ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது. வாக்குப் பதிவு நடைபெற்று முடிந்த பிறகும்கூட அதை ரத்து செய்து விட்டு புதிதாக தேர்தலை அறிவிக்க முடியும்.

தேர்தல் பிரசாரம் முடிவுற்ற நிலையில், வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகிறதா என்பது உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. பணம், பரிசுப் பொருட்கள் அளிக்கப்பட்டதாக புகார்கள் வந்துள்ள தொகுதிகளின் விவரங்கள் ஏதும் கணக்கெடுக்கப்படவில்லை. பணப்பட்டுவாடா குறித்து சில தொகுதிகளில் அதிகளவு புகார்கள் வருகின்றன என்றார் பிரவீண் குமார்.

எவ்வளவு பணம் பறிமுதல்? தமிழகத்தில் வாகன சோதனைகள் மூலம் இதுவரை ரூ.33.11 கோடி ரொக்கமாகவும், ரூ.12.58 கோடி மதிப்புள்ள பரிசுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. உரிய ஆவணங்களைக் காட்டியதைத் தொடர்ந்து, ரூ.5.18 கோடி பணம் உரியவர்களிடம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக, 61 ஆயிரத்து 20 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. அதில், அனுமதியின்றி சுவர் விளம்பரம் செய்தது உள்ளிட்ட புகார்கள் 55 ஆயிரத்து 254. உரிய அனுமதியில்லாமல் வாகனங்களை இயக்கியதாக 2 ஆயிரத்து 850 புகார்கள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

பணம், பரிசுப் பொருட்கள் அளித்ததாக 975 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு அந்த வழக்குகளின் எண்ணிக்கை 641 ஆக இருந்தது என்றார் பிரவீண் குமார்.

வாக்களிப்பதற்காக பணம், பரிசுப் பொருட்களைப் பெற்றால் கொடுத்தவருக்கும், வாங்கியவருக்கும் ஓராண்டு சிறைத் தண்டனை கிடைக்கும் என தேர்தல் ஆணையம் ஏற்கெனவே எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.