நாம் தமிழர் – காங்கிரசார் நேரடி மோதல் – பரபரக்கிறது பாபநாசம்.

40

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியினரின் தீவிரமான பிரச்சாரத்தினால் விறுவிறுப்பும், பரபரப்பும் கூடியுள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கும்பகோணம் ஒன்றிய அமைப்பாளர்களில் ஒருவரான அ. தமிழ்ச்செல்வன் சுயேட்சை வேட்பாளராக களம் இறக்கப்பட்டார். அவருடைய வேட்புமனுவும் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்ட நிலையில் கடந்த 30-03-2011 அன்று காலை 10 மணி அளவில் கட்சியின் மாநில இளைஞர் பாசறை அமைப்பாளர் வழக்கறிஞர் மணி செந்தில் என்ற திலீபன் தலைமையில் பாபநாசம் அண்ணாசிலை அருகில் இருந்து தாயக விடுதலைப்போரில் விதையாகி விழுந்த மாவீரர்களுக்கும், ஈழப்போரில் சிங்கள பேரினவாதத்தினால் இறந்த தமிழர்களுக்கும்,முத்துக்குமார் உள்ளிட்ட வீரத்தமிழ் மறவர்களுக்கும் அக வணக்கம் செலுத்தி விட்டு…இனம் காக்க போராடிய மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தி விட்டு, என்ன விலை கொடுத்தேனும் காங்கிரசினை வீழ்த்தியாக வேண்டும் என உறுதி மொழி எடுத்துக் கொண்டு நாம் தமிழர் கட்சி செயல் வீரர்கள் பிரச்சாரத்திற்காக புறப்பட்டனர்,.

பொதுமக்கள் இந்நிகழ்வினை திரளாக நின்று பார்த்தனர். பாபநாசம் உழவர் சந்தை, பாபநாசம் கடை வீதி என தெருமுனைப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட செயல் வீரர்கள் பாபநாசம் பேருந்து நிலையத்திலும் பரப்புரையை மேற்கொண்டனர். துண்டறிக்கைகள் வழங்கி மக்களிடையே தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர்களை பாபநாசம் காங்கிரசு நகரப் பொறுப்பாளர் பூபதிராசா, எஸெம்மெஸ் சரவணன் ஆகியோர் தலைமையில் 10க்கும் மேற்பட்ட ரவுடிக் கும்பல் தடுத்து  நிறுத்தி தாக்க முயன்றது. மேலும் தேர்தல் ஆணையத்தின் அனுமதிப் பெற்ற கட்சி வாகனங்களில் கட்டப்பட்டிருந்த கொடியையும் அறுத்துக் எறிந்து அராஜகத்தில் ஈடுபட்ட அக்கும்பலை நாம் தமிழர் கட்சியின் செயல் வீரர்கள் தீரத்துடன் எதிர்க் கொண்டனர். கலவரத்தினை தடுக்க அங்கு விரைந்து வந்த காவல்துறையை கண்டவுடன் காங்கிரசு ரவுடிக்கும்பல் தப்பித்து ஓடியது.

இச்சம்பவம் குறித்து வழக்கறிஞர். மணி செந்தில் காவல் நிலையத்தில் புகார் செய்ததன் அடிப்படையில் மேற்கண்ட பூபதிராசா,சரவணன் ஆகியோர் மீது பிணையில் வர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மேற்கண்ட நபர்களும் கைது செய்யப்பட்டார்கள். எந்த இடத்தில் காங்கிரசு ரவுடிக்கும்பல் நாம் தமிழர் கட்சியினரை தடுத்தனரோ மீண்டும் அதே இடத்தில் இன்னும் வலுவாக காங்கிரசினை எதிர்த்து பிரச்சாரம் செய்த பின்னரே செயல் வீரர்கள் அடுத்தப் பகுதிக்கு சென்றார்கள். சுந்தரப்பெருமாள் கோவில் பகுதியில் மின்சாரம் தடைப்பட்ட நேரத்தினை பயன்படுத்திக் கொண்டு ஆளும் கட்சியினை சேர்ந்த சிலர் கட்சியின் பிரச்சாரப் பயணத்தினை தடுக்க முயன்ற போது மாநில ஒருங்கிணைப்பாளர் அ.நல்லதுரை அதே இடத்தில் ஒரு மணி நேரம் காங்கிரசு கட்சியின் இன விரோத போக்கினையும், திமுகவின் துரோகத்தனத்தினையும் விரிவாக உரத்த குரலில் முழங்கினார்.

அவரது வீரம் செறிந்த உரையை கேட்ட பொதுமக்கள் அனைவரும் தகராறு செய்தவர்களை அடித்து விரட்டினார்கள். 31-03-2010 அன்று காலை 10 மணிக்கு துவங்கிய நாம் தமிழர் கட்சியினரின் பிரச்சாரம் அம்மாப்பேட்டை, சாலியமங்கலம்,மெலட்டூர்,பூண்டி, இருங்களூர், அய்யம்பேட்டை, வழுத்தூர்,ராஜகிரி, பண்டாரவடை ஆகிய பகுதிகளில் நீடித்து இரவு 8 மணிக்கு முடிந்தது. இப்பிரச்சார பயணத்திற்கு மாநில இளைஞர் பாசறை அமைப்பாளர் மணி செந்தில் தலைமையேற்றார்.மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் வீரக்குமரன் முன்னிலை வகித்தார். 100க்கும் மேற்பட்ட கட்சியின் செயல் வீரர்கள் பாபநாசம் தொகுதியில் காங்கிரசினை வீழ்த்த பணியாற்றி வருகின்றார்கள்.

இந்நிலையில் 1-04-2011 அன்று மாலை 7 மணி அளவில் பாபநாசம் உழவர் சந்தை அருகில் நடைபெறும் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன். சீமான் பங்கேற்று  எழுச்சி உரையாற்ற உள்ளார். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தஞ்சை மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் உற்சாகமாக செய்து வருகின்றனர். தொடரும் பரபரப்புகளால் பாபநாசம் தேர்தல் களம் விறுவிறுப்பு அடைந்துள்ளது.

முந்தைய செய்திகாங்கிரசுக்கு எதிரான தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள செந்தமிழன் சீமான் உட்பட கட்சியினர் மீது கொலை மிரட்டல் வழக்கு.
அடுத்த செய்தி[படங்கள் இணைப்பு] வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் செயல்வீரகள் கூட்டம்.