தேர்தல் கண்காணிப்பு குழு மேற்கொண்ட வாகன சோதனையில் மதுரையில் ரூ.பத்து இலட்சம் பறிமுதல்.

21
தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்கவிருப்பதையடுத்து மதுரை மாவட்டத்தில் தேர்தல் அதிகாரிகள் மற்றும்  பறக்கும்படையினர் தேர்தல் விதிமுறைகளை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இதனால் கடந்த 10 நாட்களாக வாகன சோதனையில் ஈடுபட்டு பணம் மற்றும் வாக்காளர்களுக்கான அன்பளிப்பு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். இதுவரை தமிழகத்தின் பல்வேறு பகுதியில் நடைபெற்ற  வாகன சோதனையில் கடந்த ஒரு வார காலத்தில் ரூ.5 கோடி வரை சிக்கியுள்ளது.
இந்த நிலையில் நேற்று மாலை மதுரை விமான நிலையம் அருகே ஹைவே ரோந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் திருமங்கலம் டி.எஸ்.பி. மனோகரன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது விமான நிலையத்தில் இருந்து சிவகாசியை நோக்கி சென்ற காரை மறித்து சோதனையிட்டனர். அதில் கட்டு கட்டாக ரூ.10 லட்சம் ரொக்கம் இருந்தது தெரியவந்தது. அந்த காரை பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஜெயதேவ் (வயது40) என்பவர் ஓட்டி வந்தார். அவரிடம் பணம் குறித்து விசாரித்த போது முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார்.எனவே இது குறித்து திருமங்கலம் தேர்தல் அதிகாரி சண்முகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு  விரைந்து வந்த தேர்தல் அதிகாரி  பிடிபட்ட ஜெயதேவிடம் விசாரணை நடத்தினார். ஆனால் ரூ.10 லட்சத்துக்கான ஆவணம் இல்லாததால் அப்பணத்தை பறிமுதல் செய்து கருவூலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.