வரலாறு காணாத மாபெரும் எழுச்சியுடன் துவங்கப்பட்டது நாம் தமிழரின் இளைஞர் பாசறை – மக்கள் வெள்ளத்தில் திணறியது நாகை

148
வரலாறு காணாத மாபெரும் எழுச்சியுடன் துவங்கப்பட்டது நாம் தமிழரின் இளைஞர் பாசறை – மக்கள் வெள்ளத்தில் திணறியது நாகை

தன் கண்ணெதிரே தொப்புள் கொடி உறவுகளான ஈழ மக்களை சிங்கள பேரினவாதம் உலக வல்லாதிக்கங்களோடு, இந்திய அரசோடு கூட்டு சேர்ந்து அழித்ததை தன்னை கொடுத்தேனும் தடுக்க கிளம்பிய தமிழின மாவீரன் முத்துக்குமாரின் 2 ஆண்டு நினைவினை போற்றும் வகையில் கடந்த 30-1-2010 அன்று நாகப்பட்டினம் வலிவலம் தேசிகர் தொழிற்நுட்ப கல்லூரி விளையாட்டு திடலில், மாவீரன் அப்துல் ரவூப் அரங்கில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இந்த வரலாற்று சிறப்பு நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் எழுச்சி மிக்க இளைஞர்களின் அமைப்பான ‘ நாம் தமிழர் இளைஞர் பாசறை ‘ துவக்கப்பட்டது. இந்த பொதுக்கூட்டத்திற்கு முன்னதாக நாகை பேருந்து நிலையம் அருகில் உள்ள அறிஞர் அண்ணா சிலையில் இருந்து மாலை 4.45 மணி அளவில் இளைஞர் பாசறை நடத்திய எழுச்சி மிக்க புலிக் கொடி பேரணி துவங்கியது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் புறப்பட்ட இப்பேரணியில் பல்லாயிரக்கணக்கான நாம் தமிழர் கட்சியினரும் ,இளைஞர் பாசறை வீரர்களும் அணிவகுத்தனர். இப்பேரணியில் கட்சியின் தலைமை பொறுப்பாளர்களில் ஒருவரான தமிழ்முழக்கம் சாகுல் அமீது உள்ளீட்ட மாநில நிர்வாகிகள் அணிவகுத்து வந்தனர். நாகப்பட்டினத்தின் வரலாற்றிலேயே இத்தகைய ஒழுங்கமைவு கொண்ட பிரம்மாண்ட பேரணி நடைப்பெற்றதில்லை என்று சொன்னால் மிகையல்ல. கிட்டத்தட்ட 1 ½ கி.மீ தூரத்தினை கடக்க ஏறத்தாழ 2 மணி நேரம் ஆனது.

பேரணி எழுச்சியுடன் நடந்துக் கொண்டிருக்கும் வேளையில் பொதுக்கூட்டம் நடைப்பெற்ற மாவீரன் அப்துல் ரவூப் அரங்கில் பாசறை பாடகர் பெருந்தமிழர் தேனிசை செல்லப்பா அவர்களின் எழுச்சி தமிழிசை விருந்து நிகழ்ந்துக் கொண்டிருந்தது. மாலை 6.30 மணி அளவில் பேரணி அரங்கை அடைந்ததும் நாம் தமிழர் கட்சியின் கலை பண்பாட்டுக் குழுவான கருப்புக்குரல் குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் துவங்கின. தமிழக மீனவர் படுகொலையை மையமாக வைத்து நிகழ்த்தப்பட்ட நாடகத்தினை கண்டு பொதுக்கூட்ட அரங்கில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் உணர்ச்சிவசமானார்கள். பறை இசை, நடனம் என மிகவும் உணர்வுப்பூர்வமாக நடந்தேறிய கலைநிகழ்ச்சிகள் முடிந்த பின்னர் மாலை 7.30 மணி அளவில் பொதுக்கூட்டம் துவங்கியது. இளைஞர் பாசறையின் மாநில அமைப்பாளர்களில் ஒருவரான வழக்கறிஞர் ராசீவ் காந்தி அக வணக்கம் மற்றும் வீரவணக்க நிகழ்வுகளையும் நிகழ்த்த , அமைப்பின் உறுதிமொழியினை இளைஞர் பாசறையின் மாநில அமைப்பாளர்களில் ஒருவரான வழக்கறிஞர் மணிசெந்தில் என்ற திலீபன் வாசிக்க அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நாம் தமிழர் கட்சியின் தலைமைப் பொறுப்பாளர்களில் ஒருவரும், இந்த பொதுக்கூட்டம் மற்றும் பேரணியை முன் நின்று நடத்திய நிகழ்ச்சிக்குழுவின் தலைவருமான தமிழ்முழக்கம் சாகுல் அமீது வரவேற்புரை ஆற்றினார்.

அடுத்து செந்தமிழன் சீமான் தமிழக மீனவர்களின் படுகொலையை தட்டிக்கேட்ட காரணத்திற்காக ஆளும் அரசு தொடுத்த வழக்கில்  தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட போது, அதை எதிர்த்து சிறை புகுந்த நாகை மாவட்ட கள வீரர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. பிறகு நாம் தமிழர் கட்சியின் எழுச்சி மிக்க இளைஞர் அமைப்பான ‘ நாம் தமிழர் இளைஞர் பாசறை’ தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களால் முறைப்படி துவக்கப்பட்டது. இளைஞர் பாசறை முறைப்படி துவக்கப்பட்டதன் அடையாளமாக நாம் தமிழர் இளைஞர் பாசறையின் மாநில அமைப்பாளர்கள் வழக்கறிஞர் மணிசெந்தில் என்ற திலீபன், வழக்கறிஞர் ராசீவ் காந்தி, பேராசிரியர் கல்யாணசுந்தரம் ஆகியோர் கரங்களில் நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடியினை செந்தமிழன் சீமான் அவர்களும், தூக்குத்தண்டனை சிறையாளர் பேரறிவாளன் அவர்களின் தாயார் அற்புதம் குயில்தாசன் அவர்களும் எடுத்து வழங்க புலிக்கொடி அசைந்து களம் காண புறப்பட்டது நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை. நாம் தமிழர் இளைஞர் பாசறை துவக்கப்பட்ட்ட வரலாற்று மிக்க சிறப்பு தருணம் அங்கே கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் முன்னால் மிக உணர்வாக நிகழ்ந்தேறியது.

இளைஞர் பாசறையின் துவக்க உரையினை இளைஞர் பாசறையின் மாநில அமைப்பாளர்களில் ஒருவரான வழக்கறிஞர் மணிசெந்தில் என்ற திலீபன் நிகழ்த்தினார். பின்னர் தொடர்ந்து நடந்த மாவீரன் முத்துக்குமார் வீரவணக்கப் பொதுக்கூட்டத்தில் வழக்கறிஞர் கயல்விழி, அமுதா நம்பி, ரேவதி நாகராஜன், கோட்டைக்குமார் ,ஈரோடு தமிழ்நெறியன் ,அன்புத்தென்னரசு,தலைமை நிலைய பேச்சாளர்கள் ஜெயசீலன், திலீபன் ஆகியோர் வீரவணக்க உரையினை நிகழ்த்தினர். இக்கூட்டத்தில் மதுரையில் நடைப்பெற்ற இன எழுச்சி அரசியல் மாநாட்டின் விழா மலரும், சேலம்,அம்பத்தூர், மதுரை மாநாட்டு குறுந்தகடுகளும் வெளியிடப்பட்டது. கூட்டத்தில் மனித உரிமை ஆர்வலர் பால்நியூமேன் அவர்கள் கலந்துக் கொண்டு புள்ளி விபரங்களுடன் ஆற்றிய உரை அனைவரையும் ஈர்த்தது. கூட்ட தீர்மானங்களை மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் நல்லதுரை வாசித்தார். நாம் தமிழர் கட்சியின் கொள்கை பேராசன் அய்யா பேராசிரியர் தீரன் அவர்கள் வீர வணக்க உரை நிகழ்த்தினார் .இளைஞர் பாசறை சார்பாக மாநில அமைப்பாளர்களில் ஒருவரான பேராசிரியர் கல்யாணசுந்தரம் எழுச்சி உரை ஆற்றினார்.

இறுதியாக செந்தமிழன் சீமான்  இன எழுச்சி உரை ஆற்றினார். உணர்வும், அறிவும் ,ஆதங்கமும் நிரம்பிய அவரது உரை அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களை உசுப்பேற்றியது. செந்தமிழன் சீமானை கொலை செய்ய இன எதிரிகளும், துரோகிகளும் இணைந்து திட்டமிட்டுள்ளதாக பத்திரிக்கைகளில் தொடர்ந்து வெளியாகி வரும் செய்தியை பற்றி செந்தமிழன் சீமான் குறிப்பிடும் போது இன விடுதலைக்கான போரில் தன் உயிரே போனாலும் கவலை இல்லை என்றும், ஒரு சீமான் போனால் ஒரு லட்சம் சீமான்கள் இந்த மண்ணில் உருவாவார்கள் என்றும் முழங்கினார். தேசியத் தலைவர் பிரபாகரனின் தம்பியான தன்னை உயிர்ப் பயம் காட்டி எவனாலும் அச்சுறுத்த இயலாது என்றும், விமர்சிப்பவர்களை பற்றி தனக்கு கவலை இல்லை எனவும், நேர்மையும் அர்ப்பணிப்பும் ,தெளிவும் கொண்ட தன்னை எந்த விமர்சனமும் பாதிக்காது எனவும், எம் இனத்தினை அழிக்க சிங்கள பேரினவாதத்தோடு கைக்கோர்த்து செயல்பட்ட காங்கிரசை  காங்கிரசை என்ன விலை கொடுத்தேனும் தேர்தல் களத்தில் வீழ்த்தி தமிழக மண்ணில்  அழித்து முடிப்பதுதான் தன்னுடைய தலையாய பணி என்றும்  அழுத்தமாக முழங்கினார். காங்கிரசை அழிப்பது என்பது தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கார், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஆகியோரின் கனவு என்றும், அதை தான் நிறைவேற்றுவேன் என்றும் முழங்கினார். சீறிய துவக்கில் இருந்து பாய்ந்த தோட்டாக்கள் என வெடித்து சிதறிய சீமானின் சொற்களிலும், கூடிய மக்கள் வெள்ளத்திலும் நாகப்பட்டினம் மிரண்டது என்றால் மிகைஅல்ல .

இறுதியாக  நாகை மாவட்ட அமைப்பாளர்களில் ஒருவரான தங்கநிறை செல்வம் நன்றியுரை ஆற்றினார்.  பிரம்மாண்டமாக நடைப்பெற்ற இக்கூட்டத்திற்காக நாகப்பட்டினம் நகரம் முழுக்க அமைக்கப்பட்டிருந்த இருந்த நெகிழிப்பதாகைகளும், பட்டொளி வீசி பறந்த புலிக் கொடிகளும்  மிகப் பெரிய அளவில் பிரம்மாண்டத்தினை கூட்டின. இந்த நிகழ்வில் மாவீரன் முத்துக்குமாரின் தந்தை அப்பா குமரேசனார், முத்துக்குமாரின் தங்கை,அவரது கணவர்  மற்றும் மீனவ மக்கள் வாழ்வுரிமை இயக்க தலைவி சமுத்திரகுமாரி,வழக்கறிஞர்கள் தடா சந்திரசேகர்,பரசுராமன், கட்சியின் தலைமை நிலைய செயலாளர் தடா. ஆசி ராசா ,மாநில ஒருங்கிணைப்பாளர்கள் வெற்றிக்குமரன்,கார்வண்ணன், அன்புத்தென்னரசு,நாகை மாவட்ட அமைப்பாளர்கள் ராசுகுமார்,ஜீலி,மாறன்,அந்தோணி,மற்றும் நாகை மாவட்ட கிளை பொறுப்பாளர்கள் உள்ளீட்ட மாநில,மாவட்ட,ஒன்றிய,நகர,கிளை நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர். நிகழ்வினை இளைஞர் பாசறையின் மாநில அமைப்பாளர்களுள் ஒருவரான வழக்கறிஞர் ராசீவ் காந்தி தொகுத்து வழங்கினார்.

நாகை மாவட்ட வீரவணக்க பொதுக்கூட்டத்தின் படங்களை காண

http://naamtamilar.org/gallery/#/content/002_tamilnadu%20and%20other%20states/025_Nagapattinam/999_ilainyar_%20pasarai_30_1_2011/

முந்தைய செய்திவடசென்னை மாவட்டம், ஆர்.கே.நகர் பகுதி நடத்தும் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுகூட்டம்.
அடுத்த செய்திநாகை இளைஞர் அணி பாசறை அறிமுக விழாவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்.