மனித உரிமைப் போராளியும் சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞருமான அங்கயற்கண்ணி இலங்கை ராணுவத்தால் கைது – வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் தமிழக முதல்வர் உடனடியாகத் தலையிட வேண்டும் – சீமான்

22

மனித உரிமைப் போராளியும் சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞருமான அங்கயற்கண்ணி இலங்கை ராணுவத்தால் கைது – வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் தமிழக முதல்வர் உடனடியாகத் தலையிட வேண்டும் – சீமான்

இது குறித்து நாம் தமிழர் கட்சித் தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.

மனித உரிமைப் போரளியும் சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞரும் ஐயா பாவலேறு பெருஞ்சித்திரனாரின் பேத்தியுமான அங்கயற்கண்ணி மற்றும் அவரது உதவியாளர் திருமலை ஆகிய இருவரும் முறைப்படி சுற்றுலா விசா பெற்று இலங்கைக்குச் சென்ற பொழுது அங்குள்ள சிங்கள ராணுவ முகாமினைப் புகைப்படம் எடுத்தார்கள் என்ற பொய்யான குற்றச்சாட்டின் பேரில் நேற்று இலங்கை ராணுவத்தால் சட்டவிரோதமாகக் கைது செய்யப் பட்டு அவர்களது கட்டுப்பாட்டில் வைக்கப் பட்டுள்ளனர்.அவர்களது நிலை என்ன என்பது தற்பொழுது கேள்விக்கிடமாக உள்ளது. அவர் குறித்து கேட்கப்படும் எந்தக் கேள்விக்கும் இலங்கை அரசிடம் இருந்து உரிய பதில் எதும் கிடைக்கவில்லை. அவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதோ என்னும் அச்சம் ஏற்படுகிறது.

அங்கு கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் அங்கயற்கண்ணி உலகமெங்கும் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடுபவர், பாதிக்கப்பட்ட மக்களின் மனித உரிமைகளுக்காக நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். இங்கு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் நடத்திய பல்வேறு போராட்டங்களில் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளார். மனித உரிமைகளுக்காகப் போராடும் அவரது சட்ட விரோத கைது மிகவும் வன்மையாக்க் கண்டிக்கத்தக்கது. ஈழத்தில் வாழும் தமிழனின் உயிருக்கும் உத்தரவாதம் இல்லை, கடலில் மீன் பிடிக்கச் சென்ற தமிழனின் உயிருக்கும் பாதுகாப்பில்லை என்னும் இழிநிலை இருக்கும் பொழுது இப்பொழுது உரிய முறையில் இலங்கைக்கு விசா பெற்றுச் சென்ற தமிழர்கள் இருவரின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா,மற்றும் தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோர் உடனடியாகத் தலையிட்டு இலங்கை ராணுவத்தால் சட்ட விரோதக் காவலில் அடைக்கப்பட்டுள்ள சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் அங்கயற்கண்ணியை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முந்தைய செய்திமாவீரர் நேதாஜி பிறந்தநாளை முன்னிட்டு பெரம்பூர் பகுதி நாம் தமிழர் கட்சியினர் மரியாதை.
அடுத்த செய்திபோர் குற்றவாளி ராஜபக்சேவை கைதுசெய்யக்கோரி பிரித்தானியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் முன் ஆர்ப்பாட்டம்