பொங்கல் பொருட்களில் தி.மு.க. வின் உதயசூரியன் சின்னம்-சீமான் கண்டனம்

24

பொங்கல் பொருட்களில் தி.மு.க., வின் உதயசூரியன் சின்னம்-சீமான் கண்டனம்

இது குறித்து நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.தமிழர் திருநாளையொட்டி தமிழக அரசின் சார்பில் ரேஷன் கடைகளில் மக்களுக்கு இலவச பொங்கல் பை வழங்கப்படுகின்றது.அவ்வாறு வழங்கப்படும் பையில் திமுக வின் சின்னமான உதயசூரியன் சின்னத்தை அச்சிட்டுள்ளனர்.இது மிகவும் அயோக்கியத்தனமான ஒன்றாகும்.இந்தப் பொருட்களை தமிழக அரசு  தான் வழங்குகின்றது.ஆனால் கருணாநிதி தன் கைக்காசில் இருந்து வழங்குவது போல் உதயசூரியன் சின்னத்தை அச்சிட்டுள்ளார்.அரசு சார்பில் அரசின் நிதியில் வழங்கப்படும் பொருட்களில் திருவள்ளுவர் படம் இருந்தால் போதுமானது,கருணாநிதியின் கட்சி சின்னம் எதற்கு?.இதன் மூலம் வரும் தேர்தலில் திமுக வுக்கு வாக்களிக்க தமிழ் மக்களை நிர்ப்பந்தப்படுத்துவதற்கு கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி அரசு இயந்திரத்தை தவறாகப் பயன்படுத்தியுள்ளது.

பொங்கல் பையில் உதயசூரியன் சின்னம் மட்டுமல்ல,முன் எப்பொழுதும் இல்லாத வகையில் கருணாநிதியின் ஆட்சியில் அனைத்து இடங்களிலும் கருணாநிதியின் பெயர் சூட்டப்படுகின்றது.அவரது புகைப்படம் இடம் பெறுகிறது.ஓடும் பேருந்தில் இருந்து,ரேஷன் கடையில் விற்கப்படும் மளிகைப் பொருட்கள் வரை அனைத்திலும் கருணாநிதி பெயர் தான்,அவரது புகைப்படம் தான்.நாட்டில் எங்கும் தன் படத்தையே பார்க்கும் கருணாநிதியின் இந்த சுயமோகம் தொடர்ந்து நீடித்தால் தமிழ்நாட்டின் அரசு முத்திரையில் தற்பொழுதுள்ள சின்னத்தை அகற்றிவிட்டு விரைவில் கருணாநிதி படம் வைக்கப்படும் அவலமும் நேரலாம்.மக்கள் தான் விழிப்பாக இருக்க வேண்டும்.கருணாநிதி தலைமையிலான இந்த அதிகார துஷ்பிரயோகத்திற்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.