மின்வாரிய தொழிற்சங்கங்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றித் தரவேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

87

மின்வாரிய தொழிற்சங்கங்களின் நியாயமான கோரிக்கைகளைத் தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றித் தரவேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

தமிழக அரசின் மின்வாரிய ஊழியர்கள் ஊதிய உயர்வு, ஊக்கத்தொகை, காலி பணியிடங்களை நிரப்புதல், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நீண்ட நாட்களாகப் போராடிவரும் நிலையில் அரசு அவர்களது கோரிக்கைகளைக் கண்டுகொள்ளாது அலட்சியம் செய்துவருவது வன்மையான கண்டனத்திற்குரியது.

புயல், மழை, வெள்ளம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் ஏற்பட்ட காலங்களிலும், தற்போதைய கொரோனா பெருந்தொற்றுக் காலத்திலும், இரவுப்பகல் கண் துஞ்சாது, கடமை தவறாது அர்ப்பணிப்பு உணர்வோடு மக்கள் பணியாற்றிய மின்வாரிய ஊழியர்கள் தங்களின் அடிப்படை உரிமைகளுக்காக அரசிடம் கையேந்தி நிற்பது மிகுந்த மனவேதனையை அளிக்கிறது.

மின்சாரத்துறை முற்று முழுதாகத் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டுவிடுமோ என்ற மின்சார வாரிய ஊழியர்களின் அச்சம் மிகமிக நியாயமானது. உப்பூர், உடன்குடி, எண்ணூர் உள்ளிட்ட புதிய மின் உற்பத்தித் திட்டங்களில் பணியாற்றி வந்த பொறியாளர்கள் மற்றும் பணியாளர்களை இடமாற்றம் செய்துவிட்டு அந்தப் பதவி இடங்கள் நீக்கப்பட்டுள்ளன. துணை மின் நிலையங்களை, ஓய்வுபெற்ற மின்வாரியப் பணியாளர்களைப் கொண்டு இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கள்ளக்குறிச்சி, மதுரை, சென்னை உள்ளிட்ட நகரங்களில் 3 இடங்களில் துணை மின் நிலையங்களை இயக்கவும், பராமரிக்கவும் 2 ஆண்டுகளுக்குத் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி உயர்அழுத்த மின் பாதையைப் பராமரிக்கத் தனியாரிடம் ஒப்பந்தப் புள்ளிக் கோரவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவை யாவுமே மின்சாரத்துறையை மெல்ல மெல்ல தனியாருக்குத் தாரைவார்ப்பதற்கான முன்முயற்சியாகும். பலகோடி மதிப்புள்ள துணை மின் நிலையங்களைத் தனியாரிடம் ஒப்படைப்பது அரசுத்துறைகளில் புதிய வேலைவாய்ப்புகள் பறிபோக வாய்பளிப்பதுடன், கட்டுப்பாடற்ற மின்கட்டண உயர்வுக்கும் வழிவகுக்கும்.

எனவே மின்வாரிய தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து முன்வைக்ககூடிய கோரிக்கைகளான தமிழக அரசின் மின் உற்பத்தித் திட்டங்கள், மின் பகிர்மானம் மற்றும் பராமரிப்பில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவதை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்.
மேலும் மின்வாரியத்தில் காலியாக உள்ள 42000 பணியிடங்களை உடனடியாக நிரப்ப ஆவணச் செய்ய வேண்டும் எனவும், மின்வாரிய ஊழியர்களுக்கு நீண்ட காலமாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள பணிக்கால அடிப்படையிலான ஊதிய உயர்வு, பதவி உயர்வு, இடமாற்றம், விடுமுறை நாட்களுக்கான ஊதியம் ஆகியவற்றை இனியும் காலதாமதம் செய்யாமல் உடனடியாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

இத்தோடு, தமிழகம் முழுவதும் மின்வாரியத்தில் களப்பணியாளர்களாகப் பணிபுரிந்து வரும் ஏறக்குறைய 10000 ஒப்பந்த தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும், அவர்களுக்கு ஏற்கனவே அரசு ஒப்புதல் அளித்தபடி ஒருநாள் ஊதியமாக ரூ.350-ம், விழாக்கால ஊக்கத்தொகையையும் முறையாக வழங்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

– சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திபெரியகுளம் சட்டமன்றத் தொகுதி -தொகுதி கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திகாட்டுமன்னார்கோயில் தொகுதி -கொடியேற்றும் விழா