தமிழர் புத்தாண்டு வேண்டுதல் – பேரறிவாளனின் தந்தை குயில்தாசன்

83

அய்யா!
என் மகனை கண்டீர்களா?
அம்மா!
நீங்கள் கண்டீர்களா?
பத்தொன்பது வயது சிறுவன்
இருபதாண்டுகளாகக் காணவில்லை
தேடித் தேடிச் சோர்ந்து போனேன்.
முதுமையால் இயலவில்லை
நீங்கள் உதவி செய்வீரா ?
கண்கள் பஞ்சடைத்து போயின.
உங்களை எனக்கு தெரியவில்லை
நீங்கள் மனிதர்தானே?
நான் அனைவரையும் வேண்டுகிறேன்.

உங்கள் பிள்ளைகளெல்லாம்
மகிழ்ந்து விளையாடுமிடத்தில்
உடன் விளையாடுகிறானா ?
சிறிதே பார்த்துச் சொல்லுங்கள்.

குடும்பத்தோடு நீங்கள்
கொண்டாடும்போது
பிள்ளைகளின் இலையில்
பலகாரங்களை
அள்ளி வைக்கும்போது
என் மகனையும்
நினைவு வந்தால்
சற்றுத் தேடுவீரா ?

இரண்டகத்தாரும்,
இனப்பகைவரும்
எம்மகனை
இருட்டில் மறைத்தாரோ!

எப்போதும்
புன்னகையுடன் இருப்பான்
அழுதாலும்
நகைப்பதுபோல் தோன்றும்.

பிறர் துயர் உணர்ந்து
பிழியும் கண்கள்.
முடிந்ததை உதவ முனைவான்,
பழகிய எவரும்
பிரிய நேர்ந்தால்
தமிழை விடுத்து
இசை தனித்தல்போல்
கலங்குவான்.

ஆண்ட பரம்பரையின்
அடலேறின் தோற்றம்.
காலை பிறக்கும் கதிரவன் வண்ணம்.
செவ்வரி விழிகள்
சொல்லும் கொள்கைகள்
திருக்குறள் தந்த
நல்லற உரைகள்.
தொலைநோக்குக் கணக்கில்
பெரியாரின் தீர்ப்பு.
இவை அவனின் அடையாளங்கள்.
அவன் பெயர் பேரறிவாளன்.

மானுட இனத்தோரே!
காலம் எம்மைத் தேய்ப்பதால்
கரைந்துவரும்
எம் உயிரைக் காப்பாற்ற
மீட்டுத்தர இறைஞ்சுகின்றேன்.


நன்றி,

உதவி வேண்டிடும்
குயில்தாசன்

(ராஜீவ் கொலை வழக்கில் சிக்கி 20 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன் தந்தை குயில்தாசன் எழுதிய கவிதை)

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சியின் முயற்சியையடுத்து தந்தை பெரியாரின் நினைவு தூணை சுற்றி இருந்த ஆக்கிரமப்புகள் அகற்றப்பட்டது.
அடுத்த செய்தி[படங்கள் இணைப்பு]தமிழக மீனவர் ஜெயக்குமார் படுகொலையை கண்டித்து திருச்சி மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.