தமிழக மீனவர் ஜெயகுமார் இலங்கை இனவெறி கடற்படையால் படுகொலை

16

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம், புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஜெயக்குமார் (வயது 28 த/பெ. நாகப்பன்) மற்றும் இருவர், 22 1 2011 காலை ஜெயக்குமாரின் அண்ணன் திலகன் என்பவருக்குச் சொந்தமான படகு ஒன்றில் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.

22.01.2011 இரவு 11 00 மணியளவில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கைக் கடற்படையினர் அவர்களை இடைமறித்துத் தாக்கியதில் ஜெயக்குமார் இறந்து விட்டதாகவும், மற்றும் இருவர் தாக்குதலில் இருந்து தப்பித்து கரை சேர்ந்திருப்பதாகவும் தெரிகிறது.

இலங்கை சிங்கள இனவெறி கடற்படையால் கோடியக்கரை அருகே மீனவர் ஒருவர் சுருக்குக் கயிறால் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

தமிழக மீனவர்களைக் குறிபார்த்து இலங்கைக் கடற்படை நிகழ்த்தும் வெறிச்செயல் தொடர்ந்துகொண்டுதான் உள்ளது என்பதைக் காட்டும் வகையில், வேதாரண்யம் – கோடியக்கரை அருகே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆனால் இந்த முறை துப்பாக்கிச் சூடோ வலை அறுப்போ நிகழவில்லை. மாறாக குரல்வளையை சுருக்குக் கயிறால் கட்டி கடலுக்குள் போட்டுள்ளனர். மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்களின் படகில் ஏறிய இலங்கைக் கடற்படை வீரர்கள், அவர்களை அதில் இருந்து கடலுக்குள் குதித்துவிடுமாறு மிரட்டியுள்ளனர். ஆனால் மீனவர் ஜெயக்குமார் சுனாமியில் தனது விரல்களை இழந்தவர். அவரால் கடலில் நீந்த முடியாது. அதனால் ஆத்திரம் அடைந்த இலங்கைக் கடற்படையினர், சுருக்குக் கயிறால் அந்த மீனவரின் கழுத்தில் கட்டி கடலுக்குள் தூக்கி வீசியுள்ளார்.

தொடரும் இலங்கைக் கடற்படையின் இதுபோன்ற சம்பவங்கள், மீனவர்களிடையே கடும் அச்சத்தையும் நெருக்கடியையும் தோற்றுவித்துள்ளது.கடந்த 12ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டிணத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற பாண்டியன் என்ற மீனவரை இலங்கை கடற்படை சுட்டுக்கொன்றது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் குறித்து முதல்வர் கருணாநிதி பிரதமருக்கு அவசர கடிதம் எழுதி தமது கடமையை நிறைவேற்றினார். இதையடுத்து இந்திய அரசு சார்பில் இலங்கைக்கு கடனுக்கு கண்டனம் தெரிவித்து தனது தமிழின விரோதபோக்கை கடைபிடித்து வருகிறது சோனியாவின் காங்கிரஸ் அரசு.

நேற்று கருணாநிதி அவர்கள் கிழக்கு பிராந்திய கடலோர பாதுகாப்புப் படை தளபதி எஸ்.பி சர்மா அவர்களோடு தமிழக மீனவர் பாதுகாப்பு பற்றி முக்கிய ஆலோசனை நடத்திவிட்டதாக விளம்பரப்படுத்தினார்.  இந்நிகழ்ச்சி வெறும் கண்துடைப்பு என்று அடுத்தநாளே தெரிந்துவிட்டது.

கிழக்கு பிராந்திய கடலோர பாதுகாப்புப் படை தளபதி எஸ்.பி சர்மா நேற்று தெரிவித்ததாவது -“இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது நடத்தும் தாக்குதல் சம்பவங்கள் குறித்து முதல்வருடன் விவாதித்தேன். இந்த தாக்குதல் சம்பவங்களை நிறுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் கடலோர காவற்படையால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழக மீனவர்கள் மீது இனிமேல் எந்த விதமான தாக்குதல் சம்பவங்களும் நடைபெறாது என முதல்வரிடம் உறுதியளித்துள்ளேன். தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் பிரச்சனை குறித்து இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பற்றி கடலோரக் காவற்படையின் உயரதிகாரிகளும் மத்திய அரசு உயரதிகாரிளும் ஆலோசனை நடத்தி உள்ளனர்” என்றார்.

கருணாநிதி அவர்களோ 5 லட்சம் ருபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று கூறிவிட்டு கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறார்.