தமிழ் மீனவர் சுட்டுப்படுகொலை: மீனவர்கள் போராட்டத்தில் சீமான் [புகைப்படங்கள்]

363

10-03-2017: தமிழ் மீனவர் சுட்டுப்படுகொலை: தங்கச்சிமடம் மீனவர்கள் போராட்டத்தில் சீமான் பங்கேற்பு
========================================

கடந்த 06-03-2017 அன்று, கச்சத்தீவு அருகே மீன் பிடித்தபோது, இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இராமேசுவரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த பிரிட்சோ என்ற தமிழக மீனவர் படுகொலை செய்யப்பட்டார். இதே தாக்குதலில் செரோன் என்ற தமிழக மீனவர் படுகாயமடைந்தார். இதனையடுத்து, தமிழக மீனவரைச் சுட்டுக்கொன்ற இலங்கை கடற்படை மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மீனவர் பிரிட்சோவின் உடலை வாங்க மறுத்து, தங்கச்சிமடத்தில் அப்பகுதி மீனவர்கள் கடந்த 4 நாட்களாக அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மீனவர் செரோனை நேற்று 10-03-2017 மதியம் 1 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து அவரிடம் கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து சீமான் தங்கச்சிமடத்திற்கு சென்று மீனவர்களின் அறப்போராட்டத்தில் பங்கேற்று, கொலையுண்ட மீனவர் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் சீமான் பேசுகையில்,

இந்தியக் கடல் எல்லையில் இந்தியக் கப்பற்படையும், இலங்கைக் கடற்படையும்தான் நிற்கிறது. அப்படியென்றால், தமிழ் மீனவனை சுட்டது யார்? இவர்கள் இருவரில் ஒருவர்தானே? சீனாதான் சுட்டது என்றால் இந்தியக் கடல் எல்லையில் சீனாவிற்கு என்ன வேலை? ஏன் அதற்கு மத்திய அரசு விசாரணை செய்ய முன்வரவில்லை? ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை? மீனவர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டது யாருக்கு அவமானம்? ஒட்டுமொத்த இந்தியப் பெருநாட்டிற்கும்தானே அவமானம்!

இந்நாட்டு மீனவனின் பல இலட்ச ரூபாய் மதிப்புள்ள படகுகளைப் பறித்துக்கொண்டு, அரசுடைமையாக்கிக் கொள்கிறது இலங்கை. அந்தப் படகுகளைத் திருப்பிப் பெற்றுத் தராத இந்தியா எதற்காக இலங்கைக்குப் போர்க்கப்பலை பரிசளிக்கிறது? எதற்காக அந்நாட்டின் இராணுவத்திற்குத் தரமேம்பாட்டு பயிற்சி அளிக்கிறது?

பாகிஸ்தானிலிருந்து எல்லைத் தாண்டி தீவிரவாதி வந்துவிட்டால் அதனை எல்லைத்தாண்டிய பயங்கரவாதம் என்கிறார்கள். ஆனால், இந்தியக் கடல் எல்லைக்குள் வந்து தமிழ் மீனவனைச் சுட்டுக்கொலை செய்வதை ஏன் எல்லைத் தாண்டியப் பயங்கரவாதம் என அறிவிக்க மறுக்கிறார்கள்?

வலிமைமிக்கக் கடற்படை இராணுவத்தைக் கொண்டுள்ள நாடு இந்தியா. நம்நாட்டின் கப்பற்படை யாரைப் பாதுகாக்க கடல் எல்லையில் நிற்கிறது? தமிழ் மீனவர்களை இலங்கை இராணுவம் தாக்க முற்படும்போது ஒருமுறையாவது இந்தியக் கடற்படை இராணுவம் தடுத்து நிறுத்தியிருக்கிறதா? தமிழகத்தின் முதல்வர் இந்தியப் பிரதமரிடம் நேரில் சென்று வலியுறுத்திய பிறகுதான் நடவடிக்கை எடுப்பார்கள் என்று பாஜக சொல்கிறார்கள்.

தன் நாட்டு மீனவனை இன்னொரு நாட்டின் இராணுவம் சுட்டுக்கொன்று விட்டது என பிரதமர் மோடிக்குத் தெரியுமா? தெரியாதா? தெரியாதென்றால் எதற்காக பிரதமர் பதவி வகிக்கிறார்? தெரியுமென்றால் எதற்காக இதுவரையிலும் கண்டிக்காமல் இருக்கிறார்? எல்லாவற்றுக்கும் போராடித்தான் பெற வேண்டுமென்றால் அரசு எதற்கு?

எங்கள் தலைவன் பிரபாகரன் ஈழ நிலத்தில் நின்றபோது சிங்கள இராணுவம் தமிழ் மீனவர்கள் மீது கை வைத்ததா? இல்லையே! இன்றைக்குக் கேட்க நாதியில்லை என்றதும் அடிக்கிறார்கள். இது எல்லாம் மாறும். எங்களது பெற்றோர்கள் சிந்துகிற கண்ணீருக்குச் சிங்களன் பதில் சொல்கிற காலம் உருவாகும். அன்றைக்குப் பஞ்சாயத்து எல்லாம் எமது மண்ணில்தான் நடக்கும். எல்லா நாடுகளும் எங்களிடம்தான் பேசும். அந்தக் காலத்தை உருவாக்காமல் ஓய மாட்டோம்.

இவ்வாறு சீமான் பேசினார்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திநாம் தமிழர் பிரான்சு – சமகால அரசியல் சந்திப்பு 11.03.2017
அடுத்த செய்திதொடரும் மீனவர் படுகொலை: இலங்கைத் தூதரகம் முற்றுகைப் போராட்டம் – சீமான் கைது