இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ச்சியாகப் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்தும், கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், வனப்பாதுகாப்பு சட்டத்திருத்த வரைவு – 2021ஐ திரும்பப்பெற வலியுறுத்தியும் இந்திய ஒன்றிய அரசுக்கெதிராக 31.10.21 அன்று சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில், மருது மக்கள் இயக்கத் தலைவர் செ.முத்துப்பாண்டி, தமிழர் நலப்பேரியக்கத் தலைவர் சோழன் மு.களஞ்சியம், வனவேங்கைகள் கட்சியின் தலைவர் பொ.மு.இரணியன், தமிழ்த்தேசிய கிறித்துவ இயக்கத்தைச் சேர்ந்த மை.பா.சேசு ராஜ், ஆதித்தமிழர் விடுதலை இயக்கத்தலைவர் அ.வினோத், நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள், மாநில ஒருங்கிணைப்பாளர் ஹிமாயூன், மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
முழு நிகழ்வு காணொளி:
செய்தியாளர் சந்திப்பு:
https://www.youtube.com/watch?v=s9vDc_yNrAk
நிகழ்வில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் ஆற்றிய கண்டன உரையின் தொகுப்பு பின்வருமாறு,
https://www.youtube.com/watch?v=MNJEyhPSKCw
தமிழர்களின் உயிர்காக்க, உரிமை காக்க, நிலம்காக்க நடந்துகொண்டிருக்கிற இப்பேரெழுச்சியானக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருக்கிற உறவுகள் அனைவருக்கும் எனது அன்புநிறைந்த வணக்கம்!
எதற்குக் கடற்படை இராணுவம்?
நாம் இங்கு மூன்று சிக்கல்களுக்காக ஒன்றுகூடி ஆர்ப்பாட்டம் செய்துகொண்டிருக்கிறோம். தொடர்ச்சியாக நமது இன உறவுகளான மீனவச்சொந்தங்களை இலங்கைக்கடற்படை சுட்டுக்கொல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறது. அதற்கு அவர்கள் சொல்கிற காரணம், எல்லைத்தாண்டிச் செல்கிறோம் என்பதுதான். அப்படியென்றால், இந்தியக்கடல்படை இராணுவம் எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டு, ‘இத்தோடு திரும்புங்கள்’ என மீனவர்களுக்கு அறிவுறுத்தியிருக்க வேண்டியதுதானே? அதனை ஏன் செய்யவில்லை? உலகின் வலிமைமிக்க கடற்படை இராணுவங்களுள் ஒன்றான இந்தியக்கடற்படை கடலுக்குள் யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்க வேலைசெய்கிறது? சொந்த நாட்டுக்குடிகளில் 850 க்கும் மேலான மீனவர்களைச் சுட்டுக்கொன்றிருக்கிறது இலங்கைக்கடற்படை. இதுகொலை செய்தது மட்டும்தான்; படகைப் பறித்தது, அடித்துத் துரத்தியது, சித்ரவதை செய்தது, வலையைக் கிழித்தது, சிறைப்படுத்தியது இதுவெல்லாம் தனி. என்றைக்காவது சிங்களக்கடற்படை தமிழக மீனவர்களைச் சிறைபிடிக்க வரும்போது அல்லது தாக்க வரும்போது இந்தியக்கடற்படை இராணுவம் தடுத்து அவர்களைக் காப்பாற்றியது எனும் செய்தியை எவராவது கேள்விப்பட்டதுண்டா? இல்லை! அப்புறம், எதற்காகக் கடற்படை இராணுவம்? தம்பி ராஜ்கிரணுக்குத் திருமணமாகி 40 நாட்கள்தான் ஆகிறது. அவனை அடித்துக்கொலைசெய்து, அவன் மீது எரிதிரவத்தை ஊற்றியிருக்கிறார்கள். அவன் இறந்தப்பிறகும்கூட, அவனைவிடுவதற்கு சிங்களக்கடற்படையினருக்கு மனமில்லை. என்னவொரு குரூரமான மனநிலை? எவ்வளவு வன்மம்? நாங்கள் எல்லைத்தாண்டிச் செல்வதாகக் குற்றஞ்சாட்டுகிறார்கள். அருகாமையிலிருக்கும் கேரள மீனவர்கள் எல்லைத்தாண்டிச் செல்வதில்லையா? செல்கிறார்கள்! ஆனால், எல்லைத் தாண்டிச்சென்றாலும் கேரள மீனவனை சிங்கள இராணுவம் ஒருபோதும் தொடுவதில்லை; எல்லைத்தாண்டவில்லையென்றாலும், தமிழர்களைத் தாக்குகிறார்கள். காரணம், சிங்களர்களின் ஆழ்மனதிலிருக்கிற தமிழர்கள் மீதான வன்மம். எங்கள் தம்பிகள் தாங்கள் அனுபவித்தக் கொடுமைகளைக் கதை கதையாகக் கூறுவார்கள்.
இந்தியா அண்டை நாடா?
நாங்கள்தான் இந்தியாவை சொந்த நாடென்றும், எங்களை இந்தியக்குடிகளென்றும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், இந்நாடு அவ்வாறு கருதுகிறதா? எனும் கேள்வி நீண்ட நாட்களாகவே எழுகிறது. ஐயா அப்துல் கலாம் இந்தியாவின் குடியரசுத்தலைவர், கிரிக்கெட் அணியில் விளையாடுகிற எமது தம்பி இந்தியக்கிரிக்கெட் வீரர்; ஆனால், கடலுக்குள் செத்து விழுகிற மீனவன் மட்டும் தமிழ் மீனவன்? இத்தனை மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டப்போது, ‘இந்திய மீனவன்’ என இந்தியப்பாராளுமன்றத்திற்குள் ஒருவர் பதிவுசெய்ததுண்டா? சான்றுகாட்ட முடியுமா? இல்லை! பாராளுமன்றத்திற்குள்ளேயே தமிழ் மீனவனென்றுதான் பதிவுசெய்கிறார்கள். ஆம்! நாங்கள் தமிழர்கள்; தமிழ் மீனவர்கள்தான். இந்த எண்ணப்போக்கு என்ன செய்யும்? தமிழ்நாடு என் நாடு! இந்தியா அதன் பக்கத்து நாடு என்ற முடிவுக்குத் தள்ளிவிடும்.
இந்தியா – இலங்கை போடும் நாடகம்!
இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தமிழர்களை வைத்துக்கொண்டு ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தி, தமிழக மீனவர்கள் எல்லைத்தாண்டி வந்து அவர்களது மீன்களைப் பிடித்துச் செல்வதாகக் குற்றஞ்சாட்டுகிறார். எல்லைக்குள்ளே நுழைய முடியாது, எல்லைக்கு முன்பே எங்களைத் தாக்கி அழிக்கிறபோது எப்படி அவர்களது மீன்களை எங்களால் பிடிக்க முடியும்? இது எவ்வளவு பெரிய பொய்? இந்தியாவில், தமிழகத்தில் எவ்வளவோ அரசியல் தலைவர்கள் இருக்கிறபோது அதில் என்னை மட்டும் குறிப்பிட்டுப் பேசுகிறார். ஏனென்றால், அவருக்கு அவ்வாறாகச் சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் இங்குள்ள தமிழ் மீனவனுக்கும், இலங்கையிலுள்ள தமிழ் மீனவனுக்குமே சண்டை என்றுகாட்ட நினைக்கிறார்கள். 850க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை அங்கு வாழும் தமிழ் மீனவர்களாகக் கொன்றார்கள்? இலங்கை இராணுவம்தானே கொன்றது? ஆனால், அதனை மறைத்து திட்டமிட்டு ஒரு நாடகத்தை அரங்கேற்றுகிறது இலங்கை அரசு. அதற்கு இந்திய அரசும் முழுவதுமாகத் துணைபோகிறது. தமிழ்நாடு அரசு அதனைத் தட்டிக்கேட்காது வேடிக்கைப் பார்க்கிறது. நான் கேட்பதைக் கேட்டிருக்க வேண்டியது ஐயா ஸ்டாலின்தான்! ஆனால், அவர் கேட்கவில்லை.
எதிர்க்கட்சியாக இருக்கும்போது மீனவர் படுகொலைக்காக ஐயா ஸ்டாலின் விடுத்த அறிக்கை இருக்கிறது. ‘மீனவர்களைத் திட்டமிட்டுத் தாக்கி அழித்திருக்கிறார்கள்; இந்திய அரசு அழுத்தம் கொடுத்து இலங்கை அரசிடமிருந்து இறந்துபோன மீனவர்களின் குடும்பத்திற்கு தலா 5 கோடியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்’ என ஐயா ஸ்டாலின் கூறியதற்கான சான்றுகள் இருக்கிறது. இப்போது, “இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களின் படகினை விரட்டிவரும்போது எதிர்பாராதவிதமாக மூழ்கிவிட்டது” என்கிறார் ஐயா ஸ்டாலின். சிங்கள இராணுவம்கூட இவ்வாறு கூறவில்லை. எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்காலமென்றால் திட்டமிட்டு நடந்துவிட்டது எனக்கூறுவது, திமுக ஆட்சிக்காலமென்றால் எதிர்பாராது நடந்துவிட்டது எனக்கூறுவது; எல்லாம் நாடகம்! 39 பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்திருக்கிற திமுக, “என்னோடு தொலைபேசியில் பேசுவார் பிரதமர் மோடி” என்கிற ஐயா ஸ்டாலின், அழைப்பெடுத்து அவரிடம் பேச வேண்டியதுதானே? அதனையெல்லாம் ஏன் செய்யவில்லை? இப்படுகொலைக்கு முதன்மை அமைச்சர் நரேந்திரமோடி, வெளியுறவுத்துறை அமைச்சர், பாதுகாப்புத்துறை அமைச்சர் என எவரும் கண்டனமோ, வருத்தமோ தெரிவிக்கவில்லையே! எங்கள் வரிப்பணத்தில்தான் இந்திய இராணுவத்தினருக்குப் பயிற்சியும், ஊதியமும் அளிக்கப்படுகிறது. அந்த இராணுவம் எங்களைப் பாதுகாக்காதென்றால் இந்நாட்டின் மீது எங்களுக்கென்ன பற்று இருக்கும்? ராஜ்கிரண் படுகொலையில் காங்கிரசு கட்சியின் நிலைப்பாடு என்ன? பாஜகவின் கண்டனம் என்ன? அதிமுக முன்னாள் அமைச்சர்களின் நிலைப்பாடு என்ன? ஒன்றுமில்லையே! இவர்களுக்கெல்லாம் நமது உயிர் ஒரு வாக்கு அவ்வளவுதான். அவர்களுக்கு நமது வாக்கு முக்கியம்; உயிர் முக்கியமில்லை. இதனையுணர்ந்து தெளிந்து, விழிப்புணர்வு அடைந்து என்றைக்கு எழுச்சிகொள்கிறோமோ அன்றைக்குத்தான் பாதுகாப்பாக வாழத்தொடங்குவோம்.
நெய்தல் படை கட்டுவோம்!
‘நெய்தல் அமைப்பேன்’ எனக்கூறுவதால் இந்திய இராணுவத்தை நான் அவமதிப்பதாகக் கூறுகிறார்கள். இந்திய இராணுவத்தை நாங்கள் அவமதிக்கவில்லை. அதுதான் தனது பணியைச் செய்யாது எங்களையும், இந்நாட்டையும் அவமதிக்கிறது. நாங்கள் முன்வைத்த நெய்தல் படையைப் போலவே ஒரு படையை மதிப்பிற்குரிய ஐயா பினராயி விஜயன் அவர்கள் கேரளாவில் அமைத்துவிட்டார். அதுவும், நாங்கள் கூறிய வண்ணத்திலேயே அப்படைக்கு உடையளித்து, நாட்டுக்கு அர்ப்பணித்திருக்கிறார். அவர் அதனை உருவாக்கியதற்கான நோக்கம் வேறு! நான் உருவாக்க நினைக்கும் நோக்கம் வேறு! ஒரு காலம் வரும். என் தம்பி ராஜ்கிரண் கடலில் செத்து மிதந்தது போல, சிங்களனும் நடுக்கடலில் செத்து மிதக்கிற நிலை வரும். அது நடக்கும்.
அணுக்கழிவு மையம் எனும் பேராபத்து!
அணுக்கழிவு மையத்தை இடிந்தகரையிலேயே வைக்கலாம் என இந்திய ஒன்றிய அரசு கூறிவிட்டது. நாம் தமிழர் கட்சியைத் தவிர்த்து எந்தக்கட்சி அதனை எதிர்த்துக்களத்தில் நிற்கிறது? எடியூரப்பா ஆட்சியின்போது, அணுக்கழிவு மையத்தை கோலார் தங்கவயலில் வைக்கலாம் என ஒரு செய்தி கசிந்தபோது, அதனையெதிர்த்து அம்மாநிலத்தின் எல்லாக் கட்சிகளும் திரண்டு, கன்னட மாநிலத்தின் ஒற்றைக்கொடியை ஏந்திப் போராட்டம் செய்து அதனைத் தடுத்து நிறுத்தியது. அணுக்கழிவு மையம் அமைக்கப்படுவது குறித்தான திமுகவின் நிலைப்பாடென்ன? திமுகவின் சுற்றுச்சூழல் அணி என்ன செய்கிறது? எதுவும் பேசவில்லை!
யார் பொறுப்பேற்பார்கள்?
போர் நடந்து, நான் ஏதிலியாக இடம்பெயர்ந்தால்கூட ஒரு காலம் வரும்போது எனது தாயகத்திற்குத் திரும்ப முடியும்; ஈழத்தில் மீண்டும் குடியேற எனக்கு ஒரு வாய்ப்பிருக்கிறது. ஆனால், அணு உலை வெடித்தால் எந்தக் காலத்திலும் என் தாய் நிலத்திற்குத் திரும்ப முடியாது. நிலம் முழுவதுமாக நஞ்சாகிவிடும். 1986ல் செர்னோபிலில் அணு உலை வெடித்தது. 1988ல் ரஷ்யாவிடமிருந்து அணு உலையை இறக்குமதி செய்ய ஒப்பந்தமிட்டார் ஐயா ராஜீவ்காந்தி. அதன்பிறகு, ஜப்பானின் புகுஷிமாவில் அணு உலை வெடித்தது. அதுகுறித்து ஒரு தாய் பதிவுசெய்கிறாள். “முன்பெல்லாம் எங்கள் வீட்டின் சன்னலைத் திறந்தால், காற்று மகரந்த வாசனையைக் கொண்டு வரும். இப்போது சீசியமும், கந்தக வாசனையும் எங்களை வந்தடைகிறது” என்கிறார். குலாம் நபி ஆசாத் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருக்கும்போது ஆணுறைகளை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்கிறார்கள். அதுகுறித்துக் கேள்வியெழுப்பியபோது, “ஆணுறையைப் பாதுக்காப்பாகத் தயாரிப்பதற்கான தொழில்நுட்பம் இந்தியாவிலில்லை” என்றார். அற்ப ஆணுறையைத் தயாரிக்கிற தொழில்நுட்பம்கூட இல்லாத இவர்கள்தான், அணு உலை பாதுகாப்பானது என்கிறார்கள். ஒருவேளை, செர்னோபில் போல அணு உலை விபத்து ஏற்பட்டால் அதற்கான இழப்பீட்டை யார் தருவது? கால்செருப்புக்கும், கைக்கடிகாரத்திற்கும் உறுதி தருகிற இந்நாட்டிலே அணு உலைக்கு நாங்கள்தான் பொறுப்பு என அரசும் கூறவில்லை; அணு உலையைத் தந்த ரஷிய தேசமும் கூறவில்லை.
வீரியம் குறையாத கதிர்வீச்சு!
அணு உலையை தண்ணீரைக்கொண்டு குளிர்விக்க வேண்டும். அதனால்தான், அதனைக் கடலருகே அமைக்கிறார்கள். குளிர்விக்கிற தண்ணீரைத் திரும்பக் கடலிலேயே கலக்கச்செய்கிறார்கள். அந்நீரில் கதிர்வீச்சுகள் இருக்கும். அதில் பாதிக்கப்பட்டு 90 திமிங்கிலங்கள் செத்து கரை ஒதுங்கியது. அடையாறில் பல்லாயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தது. அதுகுறித்து யாரும் இங்கு பேசவில்லை; எந்த விவாதமும் செய்யவில்லை. கதிர்வீச்சு கொண்ட நீரின் மூலம் முளைக்கிற புல்லை மாடுதின்று, அம்மாட்டிலிருந்து பாலைக் கறந்து, பாலிலிருந்து வெண்ணெயோ, நெய்யோ எடுத்து அதனை ஒரு கண்ணாடிப்போத்தலில் அடைத்து, ஒரு இருட்டறையில் அப்போத்தலை வைத்தால் அது பகல்போல பளிச்சென்று எரியும் என்கிறார்கள். புல், மாடு, பால், வெண்ணெய், நெய் எனப்பல்வேறு நிலைகளுக்கு மாறியப்பிறகும்கூட, அக்கதிர்வீச்சின் வீரியம் கொஞ்சமும் குறையாதிருக்கிறது.
எனதருமைத் தம்பி, தங்கைகளே!
அணு குண்டின் மீது ஒருவர் அமர்ந்திருப்பதும், அணு உலைக்கருகே ஒருவர் குடியிருப்பதும் ஒன்றுதான். உலகில் பாதுகாப்பான அணு என்றவொன்றே இல்லை. இதனை நான் கூறவில்லை; விஞ்ஞானிகளே கூறுகிறார்கள். எங்களுக்கு அணு உலை மூலம் பெறப்படுகிற மின்சாரம் வேண்டாம். நாங்கள் வெளிச்சத்தில் வாழ்வதைவிட உயிரோடு வாழ்வது மிக முதன்மையானது. மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டது அணு உலையிலிருந்தும் அல்ல; அணு உலைகள் கண்டுபிடிக்கப்பட்டது மின்சார உற்பத்திக்காகவும் அல்ல என்பதனைப் புரிந்துகொள்ள வேண்டும். 1986ல் செர்னோபிலில் அணு உலை வெடிக்கிறது. பேரழிவு நிகழ்கிறது. “ரஷ்ய தேசத்திற்கு மட்டுமல்லாது உலகத்திற்கே ஏற்பட்டப் பேரிழப்பு. இந்த விஞ்ஞானிகள் ஆபத்பாண்டவர்கள், ரட்சகர்கள்; இவர்கள் நம்மைக் காப்பார்கள்; மீட்பார்கள் என நம்பினோம். ஏமாந்தோம்” என்றார் அந்நாட்டின் அதிபர் கோபர்சேவ். கடைசியில், மிகப்பெரிய இரும்புவேலிக்கம்பியை அமைத்து, பல இலட்சக்கணக்கான ஆண்டுகள் இதன் பக்கத்தில் வராதீர்கள் என எழுதி வைத்துவிட்டுச் சென்றுவிட்டார்கள்.
மாற்று வாய்ப்பில்லையா?
அணு உலையைப் பேராபத்து என்கிறோம். அணு உலை இல்லையென்றால், மின்சாரத்திற்கு வாய்ப்பில்லையா? இருக்கிறது. அணு உலையை ஆதரித்துப் பேசிய ஐயா அப்துல் கலாம் அவர்களே, “சூரிய ஒளி மின்சாரமும், காற்றாலை மின்சாரமுமே சூழலியலுக்குப் பாதுகாப்பானது” எனக்கூறிவிட்டார். ஜப்பான், துபாய் போன்ற நாடுகள் கடலலையில் சிறு பந்துகளை இட்டு, அதன் மூலம் மின்சாரத்தைத் தயாரிக்கின்றன. கடற்கரைக்கு அருகே காற்றாலைகளை அமைத்து மின்சாரத்தைத் தயாரிக்கிறது பிரிட்டன். 365 நாட்களில் 300 நாட்களுக்கு மேல் பாலைவனத்தில் சூரிய ஒளியைப் பெற முடியும் எனும்போது அங்கு சூரிய ஒளி மின்பூங்கா அமைத்து மின்சாரம் தயாரிக்க முடியாதா? முடியும்! எங்கள் ஊர் கமுதியில் 5,000 ஏக்கர் பரப்பில் 4,000 கோடி ரூபாய் முதலீட்டில் சூரிய ஒளி மின் பூங்கா அமைத்திருக்கிறார் அதானி. அந்த 4,000 கோடி ரூபாய் அரசிடமில்லையா? இருக்கிறது! ஏன் அதனைச் செய்யவில்லை? இரு கட்சிகளும் இந்தத் தேர்தலுக்கு மட்டுமே 5,000 கோடி செலவழித்திருக்கின்றன. மாற்று மின்பெருக்கத்திற்கான வாய்ப்புகள் இருக்கிறது. மின்னுற்பத்தியில் நம்மால் தன்னிறைவு அடைய முடியும். நமது ஆட்சியின் செயற்பாட்டு வரைவிலேயே அதற்கான வழிவகைகளைக் கொடுத்திருக்கிறோம். சாலையின் இருபுறமும் காற்றாடிகளை வைத்து மின்சாரத்தைத் தயாரிக்கிற தொழில்நுட்பமே இருக்கிறது. ஆனால், அதனை இவர்கள் செய்வதில்லை. இவர்கள் உற்பத்தியில் முதலீடு செய்வதில்லை. மாறாக, வாங்குவதில்தான் முதலீடு செய்கிறார்கள். அதானி போன்ற பிற மாநில முதலாளிகளிடம் பல்லாயிரம் கோடிகளை முதலீடு செய்கிறார்கள். ஆனால், உற்பத்தியில் முதலீடு செய்வதில்லை. உற்பத்தியில் முதலீடு செய்தால் அது நிரந்தரத் தீர்வாகிவிடும். மின்சாரத்தை வாங்குவதில் முதலீடு செய்தால், ஒரு அலகு மின்சாரத்திற்கு 50 காசுகள் என வைத்துக்கொண்டாலும் அதன்மூலம் பலகோடி ரூபாய் கிடைக்கும்.
அணு உலைப்பூங்கா அமைத்தால் என்னவாகும்?
அணுக்கழிவுகளை அணு உலையிலிருந்து தொலைதூரத்தில் புதைக்க வேண்டும். இல்லையென்றால், அதே இடத்திலேயே ஆழக்குழிதோண்டிப் புதைக்க வேண்டும். அவ்வாறு சேமிக்கும் அணுக்கழிவுகளைப் பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பாதுகாப்பாகச் சேமிக்க வேண்டும் என்கிறார்கள். நன்கு கட்டப்பட்ட கான்கிரீட் சுவரை அணுக்கதிர் வீச்சு இலட்சம் கிலோமீட்டர் வேகத்தில் ஊடுருவிச்செல்லும் என்கிறார்கள். கான்கிரீட் சுவரிலேயே அவ்வாறு ஊடுருவுமென்றால், மனிதத்தசையை எவ்வாறு ஊடுருவிச்செல்லும்? எனச்சிந்திக்க வேண்டும். இந்தக் கொடுமைகளுக்கு எதிராகப் போராடவில்லையென்றாலும், நம்மைப் போராடயாவது அரசு அனுமதிக்க வேண்டும். அதனையும் செய்வதில்லை. அணுக்கழிவு மையம் குறிப்பது குறித்து திமுக அரசு என்ன நிலைப்பாடு எடுத்திருக்கிறது? அணுக்கழிவுகளை ஒருபோதும் தமிழர் தாயகத்திற்குள் அனுமதிக்கக்கூடாது. 1,2 அணு உலைகள் தற்போதிருக்கிறது. 3,4,5,6 அணு உலைகளை அமைக்கப்போகிறார்கள். ஆண்டொன்றுக்கு 6,000 மெகாவாட் மின்னுற்பத்திக்கு 4,200 கிலோ அணுக்கழிவுகள் வெளியாகும் என்கிறார்கள். அதனைப் பத்திரப்படுத்தி பாதுகாக்க வேண்டும். அவர்களது நோக்கம் அணு உலையல்ல; அணு உலை பூங்கா அமைப்பதுதான். மொத்தமாக, 10,000 ஏக்கர் நிலத்தைக் கையப்படுத்தத் திட்டமிடுகிறார்கள். அதற்காகத் துணை இராணுவத்தைக் குவிப்பார்கள். அதற்கெதிராகக் கிளர்ச்சி செய்ய முடியாது. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரிப் போராடியதற்கே தமிழக அரசு, 14 பேரை சுட்டுக்கொலை செய்கிறதென்றால், அணு உலையை மூடக்கூறி போராடினால் என்னவாகும்? என்பதனைச் சிந்திக்க வேண்டும். அப்பேராபத்தைத் தடுப்பதற்கே களத்தில் நின்று போராடுகிறோம்.
காடுகளுக்கு விளையும் பேராபத்து!
வனப்பாதுகாப்புச் சட்டத்திருத்தம் கொண்டு வருகிறார்கள். 1980ல் வனம்சாரா திட்டங்களை நிறைவேற்றுதல், மரங்களை வெட்டுதல் போன்றவற்றை முறைப்படுத்த வனப்பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டம் முறைப்படுத்துகிறதோ இல்லையோ, வெட்டப்பட்ட மரங்களுக்கு இணையாக மரங்களை நடுவதற்கு வலியுறுத்தியது. இப்போது கொண்டு வரப்பட்டத் திருத்தத்தில் அது நீக்கப்பட்டிருக்கிறது. தனிநபர் காடுகளுக்கு விலக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. 1980க்கு முன்பாக நெடுஞ்சாலைத்துறை, தொடர்வண்டித்துறை தங்களது தேவைக்காக கையப்படுத்தியிருக்கிற நிலங்களில் காடுகள் இருந்தாலும் அதனை அவர்கள் எவ்வாறு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என இச்சட்டம் கூறுகிறது. காடுகளைத் தனியாருக்குக் குத்தகை விடும்போது அனுமதி அவசியமில்லை எனவும் கூறுகிறது. இவர்கள் நியூட்ரினோ திட்டம், சாகர்மாலா போன்றவற்றிற்கு நிலங்களைக் கையகப்படுத்தவும், காடுகளை அழிக்கவும் தடையிருக்கக்கூடாது என நினைக்கிறார்கள். பன்னெடுங்காலமாகக் காடுகளிலேயே வாழ்கிற பழங்குடி மக்களின் வாழ்வாதாரம் குறித்து இச்சட்டத்தில் எதுவுமில்லை. அவர்களைக் காடுகளுக்கெதிரானவர்கள் எனக்கூறிவிட்டு, பெருமுதலாளிகள் தங்கும் விடுதிகளும், மாளிகைகளும் அமைக்கவே இது வழிவகை செய்கிறது. காடுகளில் வளத்தை எடுப்பதற்கு ஆய்வுசெய்ய அனுமதி தேவையில்லை எனவும்கூறி இச்சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு வனப்பாதுகாப்புச்சட்டத்திருத்தத்தைக் கொண்டு நம்மை ஏமாற்றி வளங்களை அபகரிக்க முயல்கிறார்கள். இதுகுறித்து ஆளும் திமுக அரசின் நிலைப்பாடு என்ன? எதிர்க்கட்சியின் கருத்தென்ன? எதுவும் தெரியவில்லை! இக்கொடுமைகளுக்கெதிராக ஒற்றைக்கட்சியாக நாம் தமிழர் கட்சி மட்டும்தான் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறது. என் தம்பி, தங்கைகளுக்குச் சொல்வேன்! என் உடன்பிறந்தார்களுக்குச் சொல்வேன். நம்மை விமர்சிப்பவர்கள், விமர்சிக்காதவர்கள், நம்மை விரும்புபவர்கள், வெறுப்பவர்கள், நம்மை ஆதரிப்பவர்கள், ஆதரிக்காதவர்கள் என எல்லோருக்கும் சேர்த்துதான் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். நம்பிக்கையோடு களத்தில் நில்லுங்கள்! தற்சோர்வு இல்லாது இருங்கள்! தொடர்ச்சியாகப் போராடுவோம்! நம் தாய் நிலத்தைக் காக்கும் இப்போராட்டத்தில் உறுதியாக நாம் வெல்வோம்!
உங்கள் அனைவருக்கும் எனது புரட்சிகரமான வாழ்த்துகளும், வணக்கமும்!
நாளை நமது போராட்ட வெற்றி அதனைச் சொல்லும்!
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை!
இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்!
நாம் தமிழர்!