போர்க்குற்றங்கள் தொடர்பில் கிடைத்துள்ள ஆதாரங்கள் அபூர்வமானவை – அதனை தவறவிடுவது மன்னிக்கமுடியாதது: ஜுலியன் நோவல்ஸ் (நேர்காணல்)

19

சிறீலங்கா அரசு மேற்கொண்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் கிடைத்த ஆதாரங்கள் போன்ற ஆதாரங்கள் கிடைப்பது மிகவும் அபூர்வமானது, இந்த ஆதாரங்கள் கிடைத்தபின்னரும் சிறீலங்கா அரசு விசாரணைகளைமேற்கொள்ளவில்லை என்றால் அதனை மன்னிக்க முடியாது. பிரித்தானியா அதிகாரிகளும் நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருப்பதும் மன்னிக்க முடியாததே என அனைத்துலகத்தின் பிரசிதித்திபெற்ற போர்க்குற்ற வழக்கறிஞர் ஜுலியன் நோவல்ஸ் சனல் போஃர் நிறுவனத்திற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

அந்த நேர்காணலின் முதலாம் பாகம் வருமாறு:

கேள்வி: வெளியாகியுள்ள காணொளி தொடர்பில் உங்களின் முதல் பார்வை என்ன? இந்த ஆதாரம் தொடர்பில் நாம் எதனை அறியலாம்? போர்க்குற்றம் தொடர்பில் உங்களுக்கு இந்த ஆதாரம் எதனை தெரிவிக்கின்றது?

பதில்: ஆயுதங்கள் அற்ற போரளிகள் அல்லது பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளது இதன் மூலம் தெளிவாகியுள்ளது. அவர்கள் யார் என்பது இங்கு முக்கியமல்ல, இரு தரப்பும் ஜெனீவா சட்டங்களின் அடிப்படையில் பாதுகாக்கப்பட்டவர்கள். எனவே இது ஜெனீவா சட்டங்களை மீறும் செயல் என்பதுடன், அனைத்துலக சட்டங்களின் அடிப்படையில் குற்றமாகும்.

கொல்லப்பட்டவர்கள் போராளிகளோ அல்லது பொதுமக்களோ அவர்களின் கைகள் கட்டப்பட்டுள்ளன, அவர்களின் கண்கள் கட்டப்பட்டுள்ளன. அவர்களுக்கு அருகில் ஆயுதங்கள் காணப்படவில்லை. எனவே இது ஒரு படுகொலை என்பது தெளிவானது. அனைத்துலக சட்டங்களின் அடிப்படையில் இது ஒரு போர்க்குற்றமாகும்.

கேள்வி: இந்த படுகொலைகள் எப்போது, எங்கே நடைபெற்றன என்பது தொடர்பில் நாம் தற்போது கொண்டுள்ள தகவல்கள் எதிர்கால விசாரணைகளுக்கு உதவுமா?

பதில்: நீங்கள் கொண்டுள்ள காணொளி மற்றும் காணொளியில் காணப்படும் தகவல்கள் என்பன மிக முக்கிய ஆதாரங்கள். தடயவியல் ஆய்வுகளுக்கு அது மிக முக்கியமானது. அதன் மூலம் படையினரையும், அவர்களின் படையணிகளையும் இனம்காணமுடியும்.

அந்த படையணியின் கிழ்நிலை அதிகாரிகள் முதல் உயர் நிலை அதிகாரிகள் வரை இனங்கணப்படலாம். ஏனெனில் உங்களுக்கு இடம் தெரியும் என்றால் எந்தப் படைப்பிரிவு அந்த இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் நிலைகொண்டிருந்தது என்பது தொடர்பான விடயங்கள் சிறீலங்கா அரசுக்கு தெரிந்திருக்க வேண்டும்.

எனவே குறிப்பிட்ட காலமும், இடமும் உங்களுக்கு தெரியும் என்றால் அதில் தொடர்புள்ள படையினரை சிறீலங்கா அரசுக்கு தெரிந்திருக்க வேண்டும். அதற்கு பொறுப்பானவர்கள் யார் என்பதை அவர்கள் அடையாளம் காணவேண்டும். இந்த படுகொலைக்கான உத்தரவுகளை வழங்கியவர்களையும், படுகொலைகளை மேற்கொண்ட சிப்பாய்களையும் நீதிமன்றத்தில் நிறுத்த முடியும்.

கேள்வி: கட்டளைத் தளபதிகளை பொறுத்தரையில், உயர் மட்ட அதிகாரிகளை எந்தளவுவரை இதன் மூலம் தண்டிக்க முடியும்?

பதில்: அதி உயர் பதவியில் உள்ளவர்கள் வரை தண்டிக்க முடியும். பொதுமக்களை திட்டமிட்டு படுகொலை செய்வது கீழ்நிலை அதிகாரிகளால் மட்டும் எடுக்கும் முடிவல்ல.

உயர் அதிகாரிகள் இல்லையெனில், போர் படையணிகள் மட்டத்திலும் இந்த முடிவுகள் எடுக்கப்படலாம். ஆனால் அதன் தொடர்பு என்பது சங்கிலித் தொடர் போன்றது. அது சிறீலங்கா இராணுவத்தின் உயர் மட்டம்வரை செல்லலாம். ஏனெனில் பெருமளவான படுகொலைகள், அதாவது நூற்றுக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்படுவது கிழ்நிலை அதிகாரிகளால் எடுக்கப்படும் முடிவல்லை.

பெண்களும், சிறுவர்களும் கொல்லப்படுவதும், உங்களின் காணொளியில் காணப்படுவதுபோல மிகவும் பிரபலம் பெற்ற தமிழ் பெண் கொல்லப்பட்டதும் உள்ளூர் கட்டளை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட முடிவாக இருக்காது.

கேள்வி: தண்டனை சங்கிலித் தொடர்போன்றது என்றால், பிரதம படை அதிகாரி, பாதுகாப்புச் செயலாளர், முப்படைகளின் பிரதம தளபதியான மகிந்தா ராஜபக்சா ஆகியோரை தண்டிக்க முடியுமா?

பதில்: அதற்கும் சாத்தியங்கள் உள்ளன. ஆனால் அவர் அரச தலைவராக இருப்பதால் அவரை நீதிமன்றத்திற்கு கொண்டுவருவதில் பிரச்சனைகள் இருக்கலாம். ஆனால் அவருக்கு கீழ் உள்ள அதிகாரிகளை நிட்சயமாக தண்டிக்க முடியும்.

விசாரணைகளை மேற்கொள்வதற்கு இது நல்ல ஆதாரம். விசாரணைகளின் மூலம் ஆதாரங்களை மேலும் கண்டறியலாம்.

கேள்வி: சிறீலங்கா அரசு தனது படையினரையும், கட்டளை அதிகாரிகளையும் விசாரணை செய்வதற்கு விரும்பப்போவதில்லை. எனவே அவர்களை நீதியின் முன் நிறுத்தும் சந்தர்ப்பங்கள் உண்டா?

பதில்: இந்த பிரச்சனைகளை நாம் யூகோஸ்லாவாக்கியாவிலும், சிரோலியோனிலும் சந்தித்திருந்தோம். அந்த நாடுகள் தமது நாட்டில் விசாரணைகளை மேற்கொள்ள விரும்பவில்லை. ஆனால் அனைத்துலக சமூகம் அதில் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.
இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபை அதில் தலையிடமுடியும். ஐ.நா விசாரணைக்குழு ஒன்றை நியமிக்கலாம். அது ஒரு நீதியாளர் குழுவை நியமிக்கலாம். இவ்வாறான நடவடிக்கைகள் யூகோஸ்லாவாக்கியா மற்றும் சிரோலியோனில் இடம்பெற்றுள்ளன. லெபனான் தொடர்பிலும் இவ்வாறான குழு நியமிக்கப்பட்டுள்ளது.

எனவே இது பொதுவாக மேற்கொள்ளத்தக்கது. நாம் இங்கு பார்த்துள்ள போர்க்குற்றங்களை ஐக்கிய நாடுகள் சபை தனது நடவடிக்கையில் சேர்க்க வேண்டும் என்பது தெளிவானது. இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவது நிறுத்தப்பட வேண்டும் என்பதை ஜெனீவா சட்டங்கள் 60 வருடங்களுக்கு முன்னரே தெரிவித்துள்ளன.

இவ்வாறான சம்பவங்களை நாம் இரண்டாம் உலகப்போரில் தான் கண்டிருந்தோம், ஆனால் பெருமளவான பொதுமக்கள், ஆயுதங்கள் அற்ற போராளிகள் நூற்றுக்கணக்கில் 2010 ஆம் ஆண்டில் கூட கொல்லப்படுவது என்பதை ஐ.நா புறக்கணிக்க முடியாது.

சிறீலங்கா அரசு தனது படையினரை விசாரணை செய்ய மறுத்தால், ஐ.நாவின் பாதுகாப்புச் சபை அல்லது, ஐ.நாவின் வேறு அமைப்புக்கள் விசாரணைக்குழு ஒன்றை அமைக்க வேண்டும். அதன் மூலம் குற்றவாளிகள் கண்டறியப்பட வேண்டும். சிறீலங்கா அரசு மீது அழுத்தங்களை பிரயோகிப்பதன் மூலம் அவர்களை விசாரணைக்கு இணங்கவைக்க முடியும்.

பிரித்தானியாவின் சட்டங்களின் படி, அனைத்துலக போர்க்குற்ற நீதிமன்றம் 2001 ஆம் சரத்தின் பிரகாரம், வேறு நாடுகளில் மேற்கொள்ளப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஆதாரங்கள் இருப்பின் பிரித்தானியாவில் வழக்கு தாக்கல் செய்யமுடியும். தளபதிகள் மற்றும் சிப்பாய்கள் அடையாளம் காணப்பட்டால் அவர்கள் மீது தனிப்பட்ட ரீதியில் நடவடிக்கை மேற்கொள்ளலாம்.

பிரித்தானியாவில் பதிவு செய்யப்படும் வழக்கு தொடர்பில் அவர்களை நாடுகடத்துமாறு சிறீலங்கா அரசிடம் கோரிக்கை விடுக்கமுடியும். சிறீலங்கா அரசு விசாரணைகளை மேற்கொள்ளாதுவிட்டால், அனைத்துலக நீதிமன்றம் விசாரணைகளை மேற்கொள்ளமுடியும்.

இவ்வாறான ஆதாரங்கள் கிடைப்பது மிகவும் அபூர்வமானது, இந்த ஆதாரங்கள் கிடைத்தபின்னரும் சிறீலங்கா அரசு விசாரணைகளை மேற்கொள்ளவில்லை என்றால் அதனை மன்னிக்க முடியாது. பிரித்தானியா அதிகாரிகளும் நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருப்பதும் மன்னிக்க முடியாததே.

சிறீலங்கா அரசு மேற்கொண்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் கிடைத்த ஆதாரங்கள் விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமா என்ற கேள்விகளுக்கே இடமில்லாத மிகவும் காத்திரமான, அபூர்வமான ஆதாரங்கள். இவ்வாறான ஆதாரங்களை நான் சில தடவைகள் மட்டும்தான் கண்டுள்ளேன். யூகோஸ்லாவாக்கியாவில் இடம்பெற்ற படுகொலைகளின் சில காணொளிகளை நான் பார்த்துள்ளேன். அதன் பின்னர் இதனை தான் பார்க்கிறேன். என அனைத்துலகத்தின் பிரசிதித்திபெற்ற போர்க்குற்ற வழக்கறிஞர் ஜுலியன் நோவல்ஸ் சனல் போஃர் நிறுவனத்திற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

அந்த உரையாடலின் இரண்டாம் பாகம் (நேற்றைய தொடர்ச்சி) வருமாறு:

சனல் போஃர்: இசைப்பிரியாவும், அவருக்கு அருகில் இறந்து கிடப்பவரும் எவ்வாறு இறந்தனர் என்பது தொடர்பில் எமக்கு எதுவும் தெரியாது. அவர்கள் போரில் கொல்லப்பட்டதாக சிறீலங்கா அரசு தெரிவிக்கின்றது. ஆனால் அவரின் கைகள் பின்புறமாக கட்டப்பட்டுள்ளது. துணி ஒன்றால் சடலம் மூடப்பட்டுள்ளது. அவரின் முகத்தில் காயங்களும் உள்ளன. அவருக்கு அருகில் பல சடலங்கள் காணப்படுகின்றன. அந்த சடலங்கள் படுகொலை செய்யப்பட்டவையாகவே காட்சியளிக்கின்றன. ஆனால் அவர் எவ்வாறு இறந்தார் என எமக்கு தெரியாது.

ஜுலியன் நோவல்ஸ்: அதில் காணப்படும் ஆண்களின் சடலங்களுடன் ஒப்பிடும்போது இசைப்பிரியாவின் தலையில் காயத்தை தெளிவாக காணமுடியவில்லை. ஆண்கள் தலையில் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளது தெளிவாக உள்ளது. எனக்கு இரு கருத்துக்கள் தெரிகின்றன. ஒன்று அவர் போரில் கொல்லப்பட்டிருந்தால் கைகள் எவ்வாறு பின்புறமாக கட்டப்பட்டிருக்கும்? இரண்டாவது, அவருக்கு அருகில் ஆயுதங்கள் எவையும் காணப்படவில்லை.

மேலும் போரில் கொல்லப்படுபவர்கள் வீழ்ந்துகிடப்பது போலல்லாது, சடலங்கள் அடுக்கப்பட்டுள்ளன. போரில் இறப்பவர்கள் இவ்வாறு காணப்படுவதில்லை. எனவே இது ஒரு படுகொலை என்பதை தவிர வேறு எதனையும் அனுமானிக்க முடியவில்லை.

புகைப்படங்களில் உள்ள சடலங்களில் முன்புறமாக சுடப்பட்ட அடையாளங்கள் காணப்படவில்லை. எனவே அவர்கள் பின்புறம் இருந்தே சுடப்பட்டுள்ளனர்.

சனல் போஃர்: இசைப்பிரியா போரில் காயமடைந்திருக்கலாம் அல்லவா?

ஜுலியன் நோவல்ஸ்: போரில் காயமடைந்தவர்களை கைகள் கட்டப்பட்ட நிலையில் மரணமடைய விடுவதும் போர்க்குற்றமே. போர்க்குற்றம் என்பது பொதுமக்களை படுகொலை செய்வது மட்டுமல்ல, அவர்களை தவறாக நடத்துவதுமாகும்.

காயமடைந்தவர்களை சரியாக பராமரிக்காது விடுவதும், அவர்களை கைகள் கட்டப்பட்ட நிலையில் மரணமடைய விடுவதும் தவறான நடவடிக்கைகள் என்பதை பெரும்பாலான மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். இது பொதுமக்களுக்கும், ஆயுதங்கள் அற்ற போராளிகளுக்கும் பொருந்தும்.

சனல் போஃர்: நாம் அவரின் கைகள் கட்டப்பட்ட வயர்களை காணாதபோதும் இது சாத்தியமா?

ஜுலியன் நோவல்ஸ்: அதனை காண்பது கடினமானது. ஆனால் புகைப்படத்தில் காணப்படும் இரு சடலங்களின் கைகள் ஒரே நிலையில் பின்புறம் நோக்கி காணப்படுவது, அவர்களின் கைகள் பின்புறம் கட்டப்பட்டுள்ளதையே காட்டுகின்றது. இது ஒரு முக்கிய ஆதாரம். நாம் கட்டப்பட்ட கயிற்றை காணாதுவிட்டாலும், கைகள் கட்டப்பட்டுள்ளது இதன்மூலம் தெளிவானது.

மற்றுமொரு முக்கிய காரணம் என்னவெனில் அங்கு போர் நடைபெற்றதற்கான தடையங்களை காணவில்லை. அண்மையில் கூட சமர் நடைபெற்றதற்கான சத்தங்களோ அல்லது தடையங்களோ காணப்படவில்லை.

அதாவது இறுதிநேரத்தில் படையினர் மேற்கொண்ட துப்பரவாக்கும் நடவடிக்கைகள் என்பது, சரணடைய முற்பட்ட போராளிகளை அல்லது பொதுமக்களை பெருமளவில் படுகொலை செய்ததாகவே உள்ளது. அதனை தான் என்னால் உறுதிப்படுத்த முடியும்.

அங்கு போர் டாங்கிகள் காணப்படவில்லை, எறிகணைகள் வெடித்த அடையாளங்களும் இல்லை, மொத்தத்தில் போர் நடைபெற்றதற்கான தடையங்கள் இல்லை. இது ஒரு திட்டமிட்ட படுகொலை என்பது மறுக்கமுடியாத உண்மை. தடையவியல் ஆய்வின் (கழசநளெiஉ) மூலம் இந்தப் பெண்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர், போரில் கொல்லப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த முடியும்.

இந்தக் காணொளி பொய்யானது என சிறலங்கா அரசு தெரிவிக்கலாம் அல்லது அதற்கு வேறு காரணங்களை அது கொண்டுவரலாம். ஆனால் அங்கு உண்மையில் என்ன நடைபெற்றது என்பதை கண்டறிய வேண்டுமெனில் சுயாதீன விசாரணைகள் அவசியம். விசாரணைகள் தான் இங்கு முக்கியமானது. சிறீலங்கா அரசு மீண்டும் விசாரணைகளுக்கு மறுப்பு தெரிவிக்குமனால், இந்த மிக முக்கிய ஆதாரத்தை கண்டு அது அச்சமடைகின்றது என்பதே பொருள். உண்மைகள் வெளிவருவதை அது விரும்பவில்லை.

சனல் போஃர்: ஐக்கிய நாடுகள் சபை ஆலோசனைக்குழு ஒன்றை அமைத்துள்ளது. அதற்கு ஆதாரங்களை சமர்ப்பிக்கும் காலஎல்லை எதிர்வரும் 16 ஆம் நாளுடன் முடிவடைகின்றது. நாம் இந்த காணொளிகளை அங்கு அனுப்பியுள்ளோம். தற்போது இசைப்பிரியா தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களையும் அனுப்பவுள்ளோம்.

ஜுலியன் நோவல்ஸ்: விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமா என்ற கேள்விகளுக்கே இடமில்லாத மிகவும் காத்திரமான அபூர்வமான ஆதாரம் இது. இவ்வாறான ஆதாரங்களை நான் சில தடவைகள் மட்டும்தான் கண்டுள்ளேன். யூகோஸ்லாவாக்கியாவில் இடம்பெற்ற படுகொலைகளின் சில காணொளிகளை நான் பார்த்துள்ளேன். அதன் பின்னர் இதனைத் தான் பார்க்கிறேன்.

இந்த ஆதாரம் மிக முக்கியமானது. இது கிடைத்தபின்னரும் விசாரணைகள் நடத்துவதா என்று ஆலோசிப்பது வேண்டத்தகாதது. இந்த ஆதாரம் எமக்கு பிரதானமாக ஒன்றை தெரிவிக்கின்றது. அதாவது முழுமையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதுடன், அதில் தொடர்புள்ளவர்கள் தண்டிக்கப்படவும் வேண்டும் என்பதே அதுவாகும்.

சனல் போஃர்: மே 18 ஆம் நாள் துப்பரவாக்கும் பணிகள் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. விடுதலைப்புலிகளின் தலைவரை தேடி அது நடத்தப்பட்டது. மே 19 ஆம் நாள் வரை அவரை கண்டறிய முடியவில்லை.

ஜுலியன் நோவல்ஸ்: உண்மையாக அது துப்பரவாக்கும் நடவடிக்கையாக இருக்கலாம். ஆனால் உண்மையான படை நடவடிக்கைக்கும், சரணடைபவர்களை படுகொலை செய்வதற்கும் ஒரு நூலிழை வேறுபாடுதான் உள்ளது.

என்னைப்பொறுத்தவரையில் ஒன்றை தெளிவாக கூறமுடியும் அதாவது, அந்த துப்பரவாக்கும் நடவடிக்கை என்பது, சரணடைந்தவர்களை கூட்டமாக படுகொலை செய்யும் நிகழ்வாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முற்றும்.

தமிழாக்கம்: www.eelamenews.com

முந்தைய செய்திபிரான்சு தமிழீழ மக்கள் பேரவை நடாத்தும் தொடர் எதிர்ப்புப்போராட்டம்
அடுத்த செய்தி[புகைப்படங்கள் 2 இணைப்பு] சிறையிலிருந்து சீறிப்பாய்ந்த சீமான் தலைமை அலுவலகத்தில்…