சீமான் விடுதலை – பெரியார் திராவிடர் கழகம் வாழ்த்து

473

சீமான் விடுதலையானார்
‘பொடா’ – அ.இ.அ.தி.மு.க. பயன்படுத்திய அடக்குமுறை ஆயுதம்; தேசிய பாதுகாப்பு சட்டம் – தி.மு.க. பயன்படுத்தும் அடக்கு முறை ஆயுதம்.  ஜெயலலிதா – அடக்குமுறை சட்டத்தைப் பயன்படுத்தினால், கலைஞர் கருணாநிதி – மனித உரிமை முழக்கமிடுவார். அவரே அதிகாரத்துக்கு வந்து விட்டால், அடக்குமுறைச் சட்டத்தை கையில் எடுத்துக்கொள்வார்.
வேலூர் சிறையில் 5 மாதங்கள் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சீமான் சிறைபடுத்தப்பட்டார். அவர் செய்த குற்றம் என்ன? தேசத்தைக் காட்டிக் கொடுத்தாரா? லஞ்சம் வாங்கினாரா? கிரிமினல் குற்றம் இழைத்தாரா? இல்லை; தமிழ்நாட்டு மீனவர்களின் உரிமைக்குக் குரல் கொடுத்தார். அதைவிடப் பெரும் குற்றம் சிங்களர்களுக்கு எதிராகக் குரல் கொடுத்தார். எப்படிப் பொறுப்பார்கள், “தமிழர் தலைவர்”கள்?
தமிழினப் படுகொலையை நடத்தி முடித்த போர்க் குற்றவாளி ராஜபக்சேவுக்கு உலகம் முழுதும் எதிர்ப்பு வலுக்கிறது. தமிழர்கள் மீது நடத்திய இனப் படுகொலை காட்சிகளை சர்வதேச தொலைக்காட்சிகள் ஆதாரங் களுடன் வெளிப்படுத்தி வருகின்றன. இங்கிலாந்து பிரதமர் ராஜபக்சேயின் போர்க் குற்றங்களை விசாரிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிவிக்கிறார். அய்.நா.வின் மனித உரிமைக் குழு, ராஜபக்சேவின் மனித உரிமை மீறல்களை விசாரிக்கும் முயற்சிகளில் இறங்கி யுள்ளது. சர்வதேசப் புகழ் வாய்ந்த டப்ளின் தீர்ப்பாயம், ராஜபக்சே போர்க் குற்றவாளி என்று அறிவித்துள்ளது.
ராஜபக்சே மோசமான இனப் படுகொலைகளை நடத்தினார் என்று இயங்கையின் அமெரிக்க தூதர், அமெரிக்காவுக்கு அனுப்பிய ரகசிய தகவல்களை, உலகையே வியப்பில் ஆழ்த்தி வரும் ‘விக்கி லீக்ஸ்’ இணைய தளம் அம்பலப்படுத்தியிருக்கிறது.
இவ்வளவுக்கும் பிறகு ராஜபக்சேயின் மனித உரிமை மீறல்களையோ, போர்க் குற்றத்தையோ, இனப் படுகொலைகளையோ கண்டித்து ஒரு வார்த்தையாவது தி.மு.க. ஆட்சியோ, அதன் முதலமைச்சரோ கூறியது உண்டா? பெரியார், அண்ணாவின் கைப்பிடித்து வந்ததாகக் கூறிக் கொள்வதன் வெளிப்பாடு இது தானா?
தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஒழித்து விட்டதாக ராஜபக்சே அறிவித்த பிறகும், அந்த இயக்கத்தின் மீதான தடையை நீடிக்க வேண்டும் என்று நடுவர்மன்றத்தின் முன் ‘சுப்ரமணிய சாமி’யின் குரலை அப்படியே உள்வாங்கி ஒலித்தது தானே தி.மு.க. ஆட்சி! எனவேதான் இந்த ஆட்சியின் பார்வையில் ஈழத் தமிழர்களுக்கு குரல் கொடுப்பவர்கள் எல்லாம் ‘தேசத் துரோகிகளாகவே’ தெரிகிறார்கள்.
தேசத் துரோகிகள் யார்? தேச பக்தர்கள் யார்? என்பதை வரலாறு தீர்மானிக்கும். 8 மாத காலம், இந்த ஆட்சியில் சிறைப்படுத்தப்பட்டதால், தமக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சீமான் வருந்தத் தேவை இல்லை என்பதே நமது கருத்து. அவரது இந்த சிறைவாசம் எதிர்காலத் தமிழினத்தின் விடுதலைக்கான முதலீடாகவே நாம் கருதுகிறோம்.
புடம் போட்ட தங்கமாக சீமான் கொள்கை உறுதியோடு வெளியே வந்திருக்கிறார். சமூகத் தளத்தில் சாதி, தீண்டாமை, பார்ப்பனியம், மூடநம்பிக்கைகள் என்ற பாம்புகள் படமெடுத்தாடுகின்றன. தமிழனின் நதி நீர் உரிமைகள் பறிக்கப்படுகின்றன.
பன்னாட்டு பனியா சுரண்டல்கள், தமிழனை ஓட்டாண்டியாக்கி வருகின்றன. பெரியார் எடுத்துக் கொடுத்த கொள்கைச் சுடரை ஏந்தி, மக்களை சந்திக்க வேண்டிய லட்சியக் கடமை – சீமான் முன் நிற்கிறது. அதைத் தான் எழுச்சியுற்ற தமிழின இளைஞர்களும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்! சிறைச்சாலை – இந்த துடிப்புள்ள இளைஞனை கூர் தீட்டியிருப்பதாகவே நாம் கருதுகிறோம்.
இந்தக் கைதும் தமிழினத்தின் நன்மைக்கே என்று வரவேற்று சீமானை வாழ்த்துகிறோம்!

முந்தைய செய்திஅனைத்து விமான சேவைகளிலும் தமிழில் அறிவிப்பு இல்லையெனில் ஆர்ப்பாட்டம் – சீமான் எச்சரிக்கை.
அடுத்த செய்திஅமெரிக்க தலைநகர் நியூயார்க்கில் சிறீலங்காவில் தயாரான ஆடைகளை புறக்கணிக்க கோரி தமிழர்கள் ஆர்ப்பாட்டம்.