ராமேசுவரத்தில் இருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்களிடம் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து அத்துமீறி பிரச்சினை செய்து வருகின்றனர். ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே நடுக்கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு சிறிய கப்பல்களில் இலங்கை கடற்படையினர் வேகமாக வந்தனர்.
உடனே மீனவர்கள் தாங்கள் கடலுக்குள் விரித்து வைத்திருந்த வலைகளை அவசர அவசரமாக எடுக்க முயன்றனர். அதற்குள் இலங்கை கடற்படையினர் மின்னல் வேகத்தில் அவர்களை நெருங்கி மீனவர்களின் படகுகளுக்குள் அத்து மீறி இறங்கினர். அவ்வாறு இறங்கிய கடற்படையினர் படகில் இருந்த டீசல் கேன்களை கடலில் தூக்கி வீசினர். மேலும் கடலில் விரித்த வலைகளையும் படகில் இருந்து துண்டித்து பிடித்து வைத்திருந்த மீன்களையும் கடலுக்குள் வீசினர்.சுமார் 20 படகுகளுக்குள் இறங்கி இலங்கை கடற்படையினர் இவ்வாறு அட்டூழியத்தில் ஈடுபட்டனர்.
அதன்பின், “இங்கு வராதீர்கள்” என விரட்டி அடித்தனர். அதிக மீன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சென்ற மீனவர்கள் உயிருக்கு பயந்தவாறு குறைந்த அளவு மீன்களுடன் அங்கிருந்து புறப்பட்டனர். நேற்று அதிகாலை அவர்கள் சோகத்துடன் கரை திரும்பினர். இந்திய கடல் எல்லையோரம் மீன்பிடித்த காரைக்கால் மீனவர்கள் மீதும் அவர்களின் படகு, வலை, இஞ்சினையும் இலங்கை ராணுவத்தினர் சேதப்படுத்தினர். மேலும், மீனவர்கள் பிடித்து வைத்திருந்த 20 ஆயிரம் ரூபாய் மதிப்பு மீன்களையும் எடுத்துக் சென்றுள்ளனர். இலங்கை ராணுவத்தின் எச்சரிக்கையை அடுத்து காரைக்கால் மீனவர்கள், மீன் பிடிக்காமல் கரைக்குத் திரும்பினர்.