அரசு மருத்துவமனைகளில் மருந்துகளை முறையான வழிகாட்டுக் குறிப்புகளுடன் தனித்தனி உறைகளில் வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

119

அரசு மருத்துவமனைகளில் மருந்துகளை முறையான வழிகாட்டுக் குறிப்புகளுடன் தனித்தனி உறைகளில் வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகள் வழிகாட்டுக் குறிப்புகளோ, மாத்திரைகளுக்கான உறைகளோ ஏதுமின்றி தரப்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருவது மிகுந்த வருத்தமளிக்கிறது. ஏற்கனவே தமிழ்நாட்டு மருத்துவமனைகளில் கடுமையான மருந்து பற்றாக்குறை நிலவிவரும் சூழலில், வழங்கப்படும் மருந்துகளும் எவ்வித குறிப்புகளும் இன்றி வழங்கப்படுவது வன்மையான கண்டனத்திற்குரியது.

அரசு மருத்துவமனை மருத்துவர்களால் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்து குறிப்புகள் துண்டுச்சீட்டில் கிறுக்கல் கையெழுத்துடன் எழுதித் தரப்படுவதால் ஏழை எளிய பாமர நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும், மருந்து மாத்திரைகளை எந்தெந்த வேளைகளில் உண்பது, காலையா? இரவா? உணவிற்கு முன்பா? பின்பா? என்பது குறித்த எவ்வித தகவலுமின்றி தனித்தனி உறைகளும் இன்றி வழங்கப்படுவதால் நோயாளிகள் குழப்பத்திற்கு ஆளாகி மருந்துகளை மாற்றிச் சாப்பிடும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதனால் நோய் குணமாகாததுடன், பக்க விளைவுகளுக்கு ஆளாகும் பேராபத்தான சூழலும் உண்டாகிறது. ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் மதுரை உயர்நீதிமன்றம் அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் முறையாக வழங்கப்படாதது குறித்துக் கேள்வி எழுப்பிய பிறகும், தொடர்ந்து அரசு மருத்துவமனைகளில் மிக அலட்சியத்துடன் மருந்துகள் வழங்கப்படுவது ஏழை மக்களின் உயிரோடு விளையாடும் கொடுஞ்செயலாகும்.

ஆகவே, இதற்கு மேலாவது அரசு மருத்துவமனைகளை நம்பி மருத்துவம் பெறுவதற்கு வரும் நோயாளிகளுக்கு முழுமையான வழிகாட்டல் குறிப்புகளுடன் மருந்துகளை தனித்தனி உறைகளில் இட்டு முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திகாஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – ஐயா.பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் புகழ்வணக்க நிகழ்வு
அடுத்த செய்திபுதுச்சேரி மின் துறை தனியார் மயமாக்குதல் கண்டித்து ஆர்ப்பாட்டம்