முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

உயிர் தமிழுக்கு! நீண்ட இடைவெளிக்கு பிறகு பல்சுவை திரைப்படம்! என்னுடைய…

0

உயிர் தமிழுக்கு!
நீண்ட இடைவெளிக்கு பிறகு பல்சுவை திரைப்படம்!

என்னுடைய ஆருயிர் இளவல் அமீர் அவர்களின் நடிப்பில், அன்பிற்கினிய தம்பி ஆதம்பாவா அவர்கள் எழுதி, இயக்கி, தயாரித்துள்ள ‘உயிர் தமிழுக்கு’ திரைப்படத்தை சிறப்புக் காட்சியில் கண்டு ரசித்தேன். விறுவிறுப்பாக நகரும் திரைக்கதைக்கு, தம்பிகள் பால முரளி வர்மன் மற்றும் அஜயன் பாலா இருவரும் இணைந்து எழுதியுள்ள அழுத்தமான வசனங்கள் கூடுதல் பலம் சேர்க்கிறது.

தம்பி அமீர் அவர்கள் நடித்துள்ளார் என்று சொல்வதை விடக் கதையின் நாயகன் பாண்டியனாகவே வாழ்ந்துள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு அதகளப்படுத்தியுள்ளார். விறைப்பான தோற்றத்துடனும் கடுமையான முக பாவனைகளுடனும் திரையில் இதுவரை நான் கண்ட அமீரிலுருந்து முற்றிலும் மாறுபட்டு, வேறொரு பரிணாமத்தில் தமது நடிப்புத் திறனை வெளிப்படுத்தியுள்ளார். காதல், நகைச்சுவை, சண்டை காட்சிகள் என அனைத்திலும் ரசிக்க வைக்கும் தமிழ்த்திரையுலகின் புதிய நாயகனாக தம்பி அமீர் உருவெடுத்துள்ளது வியக்க வைக்கிறது.

கதையின் நாயகி சாந்தினி தமது வெகு இயல்பான நடிப்பினால் ஈர்க்கிறார்.

நகைச்சுவை கலந்த அரசியல் படமாக மட்டுமில்லாமல், அப்பா மணிவண்ணன் இயக்கத்தில் உருவான ‘அமைதிப்படை’ திரைப்படம் போல இத்திரைப்படமும் மக்களுக்குத் தேவையான ஆழமான செய்திகளைக் காட்சிகளின் மூலம் உணர்த்துவது பாராட்டுக்குரியது. அரசியல் திரைக்கதை என்றாலும் படம் முழுக்க நிறைந்து நிற்கும் காதல் மனதிலும் நிறைந்து ரசிக்கும்படியான காதல் காட்சிகள் காண்பவர் கண்களைக் கவர்கிறது. அண்மைக்காலங்களில் அதிரடி சண்டைக்காட்சிகள் நிறைந்த படங்களாக வெளிவந்துகொண்டிருக்கும் தமிழ்த்திரையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு காதல், அரசியல், நகைச்சுவை என பல்சுவை படமாக மிளிர்கிறது ‘உயிர் தமிழுக்கு’ திரைப்படம்.

அன்புச்சகோதரர் வித்யாசாகர் அவர்களின் வித்தியாசமான இசையும், அன்புத்தம்பிகள் கவிஞர் பா.விஜய் மற்றும் சினேகனின் பாடல் வரிகளும் மனதை வருடுகிறது. சிறப்பான படத்தொகுப்பும், ஒளிப்பதிவும் அடுத்தது என்ன என்ற ஆர்வத்தைத் தூண்டுகிறது. மறைந்த சகோதரர் மாரிமுத்து அவர்களுடன், அண்ணன் ஆனந்தராஜ், கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, மகாநதி சங்கர், ராஜ் கபூர், ரவி வெங்கட்ராமன், சுப்ரமணிய சிவா, ராஜசிம்மன், சரவண சக்தி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இத்திரைப்படம் மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெறுமென உறுதியாக நம்புகிறேன். இத்திரைப்படத்தில் பணியாற்றியுள்ள அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என்னுடைய அன்பும், வாழ்த்துகளும்!

மே-10 அன்று வெளிவரவிருக்கும் ‘உயிர் தமிழுக்கு’ திரைப்படத்தினைத் திரையரங்குகளில் கண்டு களித்து, படத்தினை மிகப்பெரிய வெற்றியடையச் செய்ய வேண்டுமென உலகெங்கும் வாழும் தமிழ்ச்சொந்தங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

@adham_bava @directorameer @Moonpictures_
@VIDYASAGARMUSIC @KavingarSnekan @poetpaavijay
@IamChandini @Dir_Rajkapoor @DirectorShiva_
@gvravindran

முந்தைய செய்திமண்ணுக்கும், மக்களுக்குமான இன விடுதலை அரசியல் பெரும்பயணத்தில் எப்போதும் என்னுடைய…
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சி – திருவாரூர் தெற்கு மாவட்டம், கோட்டூர்…