முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனை என இரு…

0

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனை என இரு பெரும் மருத்துவமனைகள் இருக்கும் பகுதிகளைச் சுற்றி, வாகனப்பந்தயத்தை நடத்தினால் அதில் எழுப்பப்படும் அதிகப்படியான ஒலியளவும், இரைச்சலும் நோயாளிகளைப் பாதிக்குமெனும் அடிப்படைப்புரிதல்கூடவா அரசுக்கு இருக்காது? அப்படியென்ன வாகனப்பந்தயத்தை நடத்தி, வளர்ச்சியை நிலைநாட்டப் போகிறீர்கள் பெருமக்களே? திருப்பெரும்புதூர் அருகேயுள்ள இருங்காட்டுக்கோட்டையில் வாகனப்பந்தயத்தை நடத்த வாய்ப்பிருந்தும், அதனைச் செய்யாது மாநகரத்துக்குள் நடத்துவதேன்? விளையாட்டுத்துறை அமைச்சர் என்பதால், தம்பி உதயநிதி மக்களின் உயிரோடு விளையாடலாமா?

மழைக்காலம் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், இப்போதுவரை மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடையவில்லை; மழையை எதிர்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை செயல்பாடுகள் முழுமைபெறவில்லை. கடந்தாண்டு போல, மீண்டும் ஒரு கனமழை வந்தால் மக்கள் பெரும் துயரத்தையும், இழப்பையும் சந்திப்பார்கள் என்பதுதான் தற்போது இருக்கக்கூடிய புறச்சூழல். அப்படியிருக்க, இதில் கவனஞ்செலுத்தி, பேரிடரிலிருந்தும், பெரும் மழையிலிருந்தும் மக்களைக் காக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அரசு, அதனைச் செய்யாமல் தனிநபர்களை மகிழ்வடையச் செய்ய பல கோடிகளைச் செலவழித்து வாகனப் பந்தயத்தை நடத்துவதென்பது மக்கள் விரோதத்தின் உச்சம் இல்லையா? வாகனப்பந்தயம் நடக்கும் தீவுத்திடலுக்கு எதிரேயுள்ள சத்தியவாணி முத்து நகரில் விளிம்பு நிலை மக்கள் இன்றும் குடிசையில் வாழ்ந்துகொண்டிருக்கும் நிலையில், அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்காத அரசு, பல கோடிகளை வீணடித்து வாகனப் பந்தயம் நடத்துவது கேலிக்கூத்தானது.

ஆட்சியாளர் பெருமக்களே! அரசாட்சி தன்வசமிருக்கும் மிதப்பிலும், பதவி தரும் மமதையிலும், அதிகாரத்திமிரிலும் மக்கள் நலனை முற்றாகப் புறந்தள்ளி, தனிப்பட்ட விருப்பங்களுக்காகவும், தன் இலாபத்திற்காகவும் அதிகாரமுறைகேடும், அட்டூழியமும் செய்து ஆட்டம் போடாதீர்கள்! பெரும் பெரும் சாம்ராஜ்யங்களே வீழ்த்தப்பட்டிருக்கின்றன; உலகின் பெரும் பேரரசுகளே சிதைந்துபோயிருக்கின்றன. சர்வாதிகாரம் கொண்டு நின்ற கொடுங்கோலர்களே இருந்த இடம்தெரியாது அழிந்துபோயிருக்கிறார்கள். அப்படியிருக்கையில், நீங்கள் எல்லாம் எம்மாத்திரம்? இன்னும் எத்தனை நாளைக்கு? எஞ்சியிருப்பது இன்னும் இரண்டே ஆண்டுகள் ஆட்சி! அது முடிந்ததும், மக்களால் தூக்கி எறியப்படுவீர்கள் என எச்சரிக்கிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

(2/2)

முந்தைய செய்தியாரை மகிழ்விக்க பார்முலா 4 வாகனப் பந்தயம்? மக்களின் வரிப்பணத்தைத்…
அடுத்த செய்திதமிழ்த்தேசியப் போராளி அண்ணன் பொன்பரப்பி தமிழரசன் அவர்களின் 37ஆம் ஆண்டு…