முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

பரந்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைப்பதனை எதிர்த்துத் தொடர்ந்து 1000ஆவது…

0

பரந்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைப்பதனை எதிர்த்துத் தொடர்ந்து 1000ஆவது நாளினை எட்டியுள்ள பரந்தூர் – ஏகனாபுரம் கிராமப் பொதுமக்களின் போராட்டத்தினைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு உடனடியாக இத்திட்டத்தினை கைவிட வேண்டும்.

@mkstalin @CMOTamilnadu @KanchiCollector @TRBRajaa @MRKPanneer @supriyasahuias @TThenarasu @Chief_Secy_TN

4971 ஏக்கர் வளமான வேளாண் நிலங்களை அழித்து 1000க்கும் மேற்பட்டக் குடும்பங்களை இடம்பெயரச் செய்து, தலைமுறைத் தலைமுறையாக சமூகங்களை நிலைநிறுத்தி வந்த வாழ்வாதாரங்களை சிதைத்து, ஆயிரக்கணக்கான ஏக்கர் ஈரநிலங்களை சீரழித்துத் திமுக – பாஜக அரசுகளால் "முன்னேற்றம்" என்ற பெயரில் திணிக்கப்படும், இத்திட்டத்தினைத் தொடர்ச்சியாக எதிர்த்து 1000ஆவது நாளினை எட்டியுள்ள பரந்தூர் ஏகனாபுரம் பொதுமக்களின் உறுதியான போராட்ட உணர்வானது தமிழர் வரலாற்றில் இடம்பெறும் புரட்சிகர எடுத்துக்காட்டாகும். அதே நேரத்தில் 1000 நாட்கள் கடந்தும் மக்கள் போராடி வரும் நிலையில் ஒருமுறை கூட அவர்களை நேரில் சென்று சந்திக்காத ஆட்சியாளர்களின் செயல்பாடு, மக்களைப் பற்றித் துளியும் அக்கறை கொள்ளாத வெறுக்கத்தக்க ஆட்சியின் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.

ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் அனைத்துவித சூழலியல் அழிவுத் திட்டங்களையும் எதிர்ப்பது போல மக்களை ஏமாற்றி, எட்டுவழிச் சாலை போன்ற திட்டங்களை எதிர்த்துப் பொதுமக்கள் போராடிக் கண்ட வெற்றியின் பலன்களைத் தன்வசப்படுத்தி, ஆட்சி அதிகாரத்தை அடைந்த திமுக அரசானது அதற்கு ஈடான அழிவுத் திட்டங்களைத் தாமே முன்னெடுத்து மக்களின் குரல்களை நசுக்கி வாழ்வாதாரங்களை சிதைத்து, செயல்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வது மக்களுக்கு இழைக்கும் பச்சைத் துரோகமாகும்.

இத்திட்டத்தை அமைக்கும் நிலைப்பாடெல்லாம் ஒருபுறம் இருக்க, தொடர்ச்சியாகப் போராடி வரும் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து அவற்றைக் கருத்தில் கொண்டாவது செயல்பட வேண்டும் என்கின்ற அடிப்படை மக்களாட்சி மாண்பைக் கூடக் கடைப்பிடிக்காமல், போராடிவரும் பொதுமக்களின் மீது அதிகாரப் போக்கினைக் கட்டவிழ்த்துக் காவல்துறையின் அடக்குமுறையை ஏவி, பாஜக அரசுக்கு எவ்விதத்திலும் சளைக்காத எதேச்சதிகாரப் போக்கினைத் திமுக அரசு முழுமையாகக் கையில் எடுத்துள்ளது. பாஜக அரசினைப் பார்த்துத் திமுக வைக்கக்கூடிய அத்தனை பாசிச முழக்கங்களும் திமுக அரசுக்கும் பொருந்தும் என்பதை சுட்டிக்காட்டக் கடமைப்பட்டுள்ளேன்.

இவ்வளவு இன்னல்கள் நிறைந்த சூழ்நிலையிலும், ஏகனாபுரம் – பரந்தூர், சுற்றுவட்டாரக் கிராம்ப் பொதுமக்கள் மற்றும் போராட்டக் குழுவினரின் சூழலியல் நலன் குறித்தப் புரிதலும், பூர்வகுடி நிலங்களைப் பாதுகாக்கப் போராடும் திடமான புரட்சிகர உணர்வும், நம்மை நெகிழச்செய்கிறது. பரந்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைப்பதை எதிர்த்துவரும் பொதுமக்களின் தொடர் போராட்டம் வெற்றியடைய வாழ்த்துகளைத் தெரிவிப்பதோடு, இதுநாள் வரை பொதுமக்களுக்குத் துணையாகப் போராட்டத்தில் பங்கெடுத்த நாம் தமிழர் கட்சி, தொடர்ந்து இறுதிவரை மக்கள் போராட்டத்திற்கான ஆதரவினை அனைத்துத் தளங்களிலும் அளித்து, துணைநின்று போராடும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். மக்களின் இந்தப் போராட்ட உணர்வே பாசிச ஆட்சியாளர்களுக்கு முடிவுரை எழுதட்டும்.

முந்தைய செய்திமன்னார்குடி பெருந்தலைவர் காமராசர் பேருந்து நிலையம், ஆடுதுறை காயிதே மில்லத்…
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி மருத்துவர் இரா.ரமேஷ்…