முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

இந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற பெருங்கவியைத் தன் கருப்பையில் சுமந்த…

0

இந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற பெருங்கவியைத் தன் கருப்பையில் சுமந்த தாய்..!

தமிழுக்கும் தமிழர்க்கும் அரும்பாடாற்ற எங்களின் முத்தமிழ் கவிப்பேரரசைப்
பெற்றெடுத்த பெருமாட்டி..!

தமிழினத்தின் பெருமைக்குரிய அடையாளம் ஐயா கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பாசத்திற்குரிய அம்மா அங்கம்மாள் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

ஊனும், உயிரும், உணவும், உணர்வும் தந்து பேணி வளர்த்த அன்புத்தாயின் இழப்பை எவராலும் ஈடு செய்ய முடியாது.

"பொன்னையாத் தேவன்
பெத்த பொன்னே! குலமகளே!
என்னைப் புறந்தள்ள
இடுப்புவலி பொறுத்தவளே!

வைரமுத்து பிறப்பான்னு
வயித்தில்நீ சுமந்ததில்ல
வயித்தில்நீ சுமந்த ஒண்ணு
வைரமுத்து ஆயிருச்சு

கண்ணுகாது மூக்கோட
கறுப்பா ஒருபிண்டம்
இடப்பக்கம் கெடக்கையில
என்னென்ன நெனச்சிருப்ப?

கத்தி எடுப்பவனோ?
களவாடப் பிறந்தவனோ?
தரணிஆள வந்திருக்கும்
தாசில்தார் இவந்தானோ?

இந்த வெவரங்க
ஏதொண்ணும் அறியாம
நெஞ்சூட்டி வளத்தஒன்ன
நெனச்சா அழுகவரும்

கதகதன்னு களி(க்) கிண்டி
களிக்குள்ள குழிவெட்டி
கருப்பட்டி நல்லெண்ண
கலந்து தருவாயே

தொண்டையில் அதுஎறங்கும்
சொகமான எளஞ்சூடு
மண்டையில இன்னும்
மசமன்னு நிக்கிதம்மா

கொத்தமல்லி வறுத்துவச்சுக்
குறுமொளகா ரெண்டுவச்சு
சீரகமும் சிறுமொளகும்
சேத்துவச்சு நீர்தெளிச்சு

கும்மி அரச்சு நீ
கொழகொழன்னு வழிக்கையிலே
அம்மி மணக்கும்
அடுத்ததெரு மணமணக்கும்

தித்திக்கச் சமச்சாலும்
திட்டிக்கிட்டே சமச்சாலும்
கத்திரிக்கா நெய்வடியும்
கருவாடு தேனொழுகும்

கோழிக் கொழம்புமேல
குட்டிக்குட்டியா மெதக்கும்
தேங்காச் சில்லுக்கு
தேகமெல்லாம் எச்சிஊறும்

வறுமையில நாமபட்ட
வலிதாங்க மாட்டாம
பேனா எடுத்தேன்
பிரபஞ்சம் பிச்செறிஞ்சேன்!

பாசமுள்ள வேளையில
காசுபணம் கூடலையே!
காசுவந்த வேளையிலே
பாசம்வந்து சேரலையே!

பாசம் கண்ணீரு
பழையகதை எல்லாமே
வெறிச்சோடி போன
வேதாந்த மாயிருச்சே!

வைகையில ஊர்முழுக
வல்லூறும் சேர்ந்தழுக
கைப்பிடியாக் கூட்டிவந்து
கரைசேத்து விட்டவளே!

எனக்கொண்ணு ஆனதுன்னா
ஒனக்குவேற பிள்ளையுண்டு
ஒனக்கேதும் ஆனதுன்னா
எனக்குவேற தாயிருக்கா?

என அம்மா அங்கம்மாள் பற்றி ஐயா வைரமுத்து அவர்கள் எழுதிய வரிகளை நினைவுகூர்ந்து, எல்லோருக்கும் தன் நிகரில்லா செந்தமிழ்க் கவி வரிகளால் ஆறுதலும் தேறுதலும் தந்த ஐயா வைரமுத்து அவர்களைக் கையறு நிலையிலிருந்து அன்னைத்தமிழே கரை சேர்க்க வேண்டும்!

அன்புத்தாயை இழந்துவாடும் ஐயா வைரமுத்து அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.

வடுகப்பட்டி தமிழ் நெருப்பைச் சுமந்த கருப்பை
அம்மா அங்கம்மாள் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

@Vairamuthu

முந்தைய செய்திஅன்னையர் நாள் நல் வாழ்த்துகள்! சித்திரை 28 | 11.05.2025…
அடுத்த செய்திமுத்தமிழ்ப்பேரறிஞர் கவிப்பேரரசு ஐயா வைரமுத்து அவர்களின் தாயார் அம்மா அங்கம்மாள்…