மே18 இனப் பேரெழுச்சி நாள்!
வரலாற்றின் மூத்த இனமான தமிழர் என்ற தேசிய இனம் பல்வேறு பெருமைகளை கொண்ட தனித்துவமான பேரினம். இலக்கிய இலக்கண செழுமைகளைக் கொண்ட முதுபெரும் செம்மொழி தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்ட தமிழர்கள் உலகம் முழுக்க வாழ்ந்தாலும் அவர்களுக்கு உள்ளங்கை அளவு நாடில்லையே என்ற கனவு நீண்ட நெடு நாட்களாக இருந்து வந்த நிலையில், தமிழர்களின் பூர்வீக நிலமான
தமிழீழத்தில் அதற்கான அரசியல் சூழ்நிலை சிங்கள இனவாத அரசால் வலுக்கட்டாயமாக ஏற்பட்டபோது, ஒப்பற்ற பெருந்தலைவன் நம் தேசியத் தலைவர் என்னுயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் தலைமையில் மண்ணின் பூர்வ குடிமக்கள் பெரும் படையாகக் கட்டி எழுந்து வல்லாதிக்கப் போருக்கு முகம் கொடுத்து நின்றார்கள்.
வீரம் செறிந்த தமிழர்களின் மரபார்ந்த போர் ஆற்றலை எதிர்கொள்ள முடியாமல் சிங்களன் உலகம் முழுக்க ஓடிச்சென்று உதவிகளைப் பெற்றுக் கொண்டு தன் சொந்த நாட்டு குடிமக்களின் மீது கொத்துக் குண்டுகளை வீசி இனப்படுகொலை செய்தனர்.
கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் இதே நாட்களில், ஏறக்குறைய 2 இலட்சம் தமிழர்கள் சிங்கள இனவெறி இலங்கை அரசால் தமிழர்கள் என்ற ஒரே காரணத்தால் துடிக்கத்துடிக்க கொலை செய்யப்பட்டனர். இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலைக்கு தமிழினம் இலக்காகி 15 ஆண்டுகள் உருண்டோடி விட்ட நிலையில், இதுநாள் வரை இறுக்கமாக காட்டப்படும் உலக அரங்கின் மௌனம் உலகத்தின் தொன்மையான ஒரு தேசிய இனத்தையே ஒட்டுமொத்தமாக இழிவுப்படுத்துகிற கொடுஞ்செயல்!
எந்த உன்னத நோக்கத்திற்காக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்கள் தங்கள் உயிரையே ஆயுதமாக ஏந்தி 30 ஆண்டுகாலம் அறம் பாராட்டி, மறப்போர் நிகழ்த்தி, தங்கள் இன்னுயிரை இழந்தனரோ, அந்த புனிதக்கனவான ஈழத்தாயக விடுதலையை இன்றுவரை அடைய முடியவில்லை என்பது வரலாற்றுப் பெருந்துயரம் மட்டுமல்ல, ஒவ்வொரு தமிழரின் ஆன்மாவிலும் உறைந்து கிடக்கிற தணியாத தாகம்.
பிழைக்க வந்த சிங்களன் பூர்வகுடி மக்களான தமிழர்களை இனப்படுகொலை செய்து தமிழரின் இறையாண்மையை, உரிமைகளை, தாயக நிலத்தை பறித்து சொந்த நிலத்திலேயே தமிழர்கள் மூன்றாம் தர குடிமக்களாக மாற்றப்பட்ட கொடுமையை பன்னாட்டு அமைப்புகள் ஒவ்வொன்றின் வாசலிலும் நின்று நாம் முறையிட்டும்கூட, இன்றுவரை நம் இனத்தின் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கான சுதந்திரமான நீதிவிசாரணை பொறிமுறையை ஏற்படுத்த மனிதநேயத்தைப் புறக்கணிக்கும் வல்லாதிக்க உலக ஒழுங்கு தடையாக இருக்கிறது. ஈழத்தாயக விடுதலையைத்தான் பெற முடியவில்லை; குறைந்தபட்சம் இனப்படுகொலைக்கான நீதியைக்கூட நம்மால் பெற முடியாத அளவிற்கு தமிழ்ப்பேரினம் அதிகார வலிமையற்று, அரசியல் வலிமையற்று தமிழினம் தாழ்ந்து வீழ்ந்து கிடக்கிறது.
விடுதலைப்போராட்டம் மௌனிக்கப்பட்டு, இனப்படுகொலையும் நடைபெற்று முடிந்த இந்த
15 ஆண்டுகளில், ஈழப் பெருநிலத்தில் இன்றும் எந்த அடிப்படை உரிமையும் வசதியும் இல்லாமல்
இறுக்கமான கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் ஈழத்தமிழ்ச்சொந்தங்கள் எதிர்கொண்டு வரும் சிக்கல்கள் பன்மடங்காகப் பெருகியுள்ளது. வடக்கு, கிழக்கு முழுவதும் இராணுவமயமாக்கலாலும்,
திட்டமிடப்பட்ட சிங்களக் குடியேற்றங்களாலும், பௌத்தமயமாக்கலாலும் தமிழர்களின் தாயகம் முற்றாகச் சிதைக்கப்பட்டுவிட்டது.
தமிழர்களின் அடையாளம், பண்பாடு மற்றும் சுதந்திரமான வாழ்வியலை வீழ்த்தி இன அழிப்புக்கு நிகரான பண்பாட்டு அடையாள அழிப்பை சிங்கள வல்லாதிக்கம் நிகழ்த்தி இருக்கிறது. இனப்படுகொலைக்கான நீதி இதுநாள் வரை கிடைக்கவில்லை என்கிற துயரம் நமது உள்ளத்தை ரணமாக்க, அதைவிட மாபெரும் வலியாக போர் நடந்த காலகட்டத்தில் அதற்குப் பிறகான காலத்தில் விசாரணை என்ற பெயரில் வெள்ளை வேன்கள் மற்றும் பல்வேறு வாகனங்களில் சிங்கள ராணுவம் மற்றும் சிங்களக் காவல்துறையால் அழைத்துச் செல்லப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது நிலையும் இதுநாள் என்னவென்று தெரியவில்லை. காணாமல் போன தங்களது உறவுகள் உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என்ற தவிப்பிலும், ஒருவேளை சிங்கள ராணுவத்தால் அவர்கள் கொல்லப்பட்டிருந்தால், அதுகூட அவர்களது உற்றார் உறவினர் பெற்றோர்களுக்குக்கூட அறிவிக்கப்படாமல், அவர்களுக்கான இறுதிச்சடங்குகூட செய்ய வாய்ப்பில்லாத கொடுமையிலும் எங்களது தாய்மார்களும் உறவுகளும் வீதிகளில் நின்று இன்று வரை போராடிக் கொண்டிருப்பது வேறு எந்த இனத்திற்கும் நடக்கக்கூடாத மாபெரும் கொடுமை.
(1/3)


