முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

பன்னாட்டு அரசியல் சூழல்களில் தமிழர்கள் மீது திட்டமிட்டு சிங்கள அரசால்…

0

பன்னாட்டு அரசியல் சூழல்களில் தமிழர்கள் மீது திட்டமிட்டு சிங்கள அரசால் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கான தலையீடற்ற பன்னாட்டு விசாரணைக்கும் அனுமதி இல்லை எனும் நிலையில், அரசியல் அதிகாரமும், ஆட்சி அதிகாரமும் இல்லாத தமிழினம் போராடி போராடி சோர்ந்து கிடக்கிறது. இதன் நடுவில் இனப்படுகொலை முடிந்து 15 ஆண்டுகளை கடந்துவிட்டபிறகும் இன்னும் ஏன் அதையே பேசிக்கொண்டிருக்கிறீர்கள்? இன்னுமா ஈழ விடுதலை கிடைக்கும் என்று நம்புகிறீர்கள்? என்ற ஏளனக்குரல்கள் நம்மை நோக்கி தமிழ்நாட்டு அரசியல் பச்சோந்திகளால், இனமழித்த எதிரிகளுக்கு துணைபோகும் துரோகிகளால், தொடர்ந்து நம்மை நோக்கி எழுப்பப்பட்டு வருவதும் நமது விழிகளை சிவக்கச் செய்கிறது.

இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலையை, 2 இலட்சம் தமிழர்கள் துள்ளத் துடிக்கக் கொல்லப்பட்ட மனிதப்பேரவலத்தை மறந்து, கடந்துபோ என்பது எத்தனை
பெரிய குரூர மனப்பான்மை? மானத்தமிழ்ப்பிள்ளைகளால் இத்தனை பெரிய இனப்படுகொலையை, வலிதோய்ந்த வரலாற்று பெருந்துயரை எப்படி கடந்து போக முடியும்? தன் உடன்பிறந்த சகோதர & சகோதரிகள் சிங்களர்களால் நிர்வாணமாக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட கோரக் காட்சிகளை தமிழ் இளம் தலைமுறையினர் மறந்து கடக்க வேண்டும் என சொல்வதே எங்கள் மீது நிகழ்த்தப்படும் மிகப்பெரிய வன்முறை இல்லையா??

கடந்த 2009ல் போர் இறுகி முற்றிய சூழலில், போர்ச்சூழலில் பயன்படுத்தக்கூடாத தடை செய்யப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு, உலக நாடுகளின் துணையோடு சிங்கள அரசு திட்டமிட்டு செய்த மாபெரும் இனப்படுகொலையில் நாம் கற்றுக் கொண்ட பாடம் என்னவெனில், தமிழர்கள் எல்லோராலும் கைவிடப்பட்டு தனித்துவிடப்பட்ட எந்தவித அதிகாரமும், உரிமைகளும் இல்லாத அடிமைத் தேசிய இனமாக இருக்கிறது என்பதுதான். இந்த நிலை மாற வேண்டுமானால் ஈழத்திலும், தாயகத் தமிழகத்திலும் மற்றும் உலகம் எங்கும் சிதறிக் கிடக்கும் தமிழர்களின் மனநிலையில் மாபெரும் மாற்றம் நிகழ வேண்டும்.

வரலாற்றின் வீதிகளில் யூதர்கள் எவ்வாறு தொடர்ச்சியாக அழிக்கப்பட்டும், இடைவிடாது போராடி 2000 ஆண்டுகளுக்குப் பிறகு மாபெரும் மீளெழுச்சி கொண்டு தங்களுக்கென ஒரு நாட்டினை அடைந்தார்களோ, அதேபோல தமிழர்களாகிய நாமும் மன ஊக்கம் பெற்று, வீழ்ந்தது வீழ்ந்தே கிடக்க அல்ல, மீண்டும் பன்மடங்கு பலம் கொண்டு எழுவதற்காக என்பதை அறிந்து, இழந்தது அழுவதற்காக அல்ல, வலிமை கொண்டு எழுவதற்காக என்பதை உணர்ந்து, வரலாற்றின் பாதையில் ஒரு மீள் எழுச்சி கொள்ள வேண்டிய ஒரு
தேசிய இனமாக இருக்கிறோம்.

கடந்த 2009ற்குப் பிறகு உலக அரசுகளின் அரசியல் போக்குகள் நம்பிக்கை தரக்கூடிய வகையில் இன்று நிறைய மாற்றம் கண்டிருக்கின்றன. இன்றைக்கு கனடா தேசம் ஈழத்தில் நடைபெற்றது இனப்படுகொலைதான் என்பதை ஏற்று, இனப்படுகொலை நாள் நினைவு தூண் அமைத்து, ஈழத்தாயக விடுதலைக்கு ஆதரவாக துணைநிற்பது உலகத்தமிழர்களின் நெஞ்சத்தில் புதிய நம்பிக்கை ஒளிக்கீற்றினை தோற்றுவிக்கிறது. இதேபோல் நமது நியாயத்தை புரிந்து கொள்கிற உலக ஒழுங்கை தொடர்ச்சியான நமது செயல்பாடுகள் மூலமாக ஏற்படுத்தி, மாறிவரும் உலகச் சூழல்களுக்கு ஏற்றதுபோல் தமிழர்கள் தங்களது அரசியல் செயல்பாடுகளை வகுத்துக் கொள்ள வேண்டும். தெற்கு சூடான், கிழக்கு தைமூர், பாலஸ்தீனம் என்றெல்லாம் புதிய நாடுகள் தோன்றிய வரலாறு நம் கண் முன்னால் பாடங்களாக இருக்கின்றன. பெரும் நம்பிக்கையோடு, திட்டமிடலுடன் கூடிய அறிவார்ந்த முறைமையில் ஒன்றிணைந்து செயல்பட்டால் தமிழர்களுக்கென இந்தப் பூமிப்பந்தில் இறையாண்மையுடன் கூடிய ஒரு தேசம் பிறக்கும் என்பது உறுதி.
விடுதலைக் கனவை நோக்கிய நமது பாதையில் தங்களையே விதையாகத் தந்த நமது மாவீரர் தெய்வங்கள் ஒளிதரும் விளக்குகளாகச் சுடர்விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இறக்கும் கடைசி நொடியிலும்கூட தாய் மண்ணை ஒரு கையில் பிடித்துக்கொண்டு இதயத்தோடு அணைத்துக் கொண்டு சாவைத் தழுவி சரித்திரமான அவர்கள் சுவாசித்த மூச்சுக்காற்றைத்தான் அவர்களது உடன்பிறந்தவர்களாகிய நாமும் சுவாசிக்கிறோம் என்கின்ற உணர்வு மீண்டெழுவதற்கான ஆற்றலை நம் ஒவ்வொருவருக்கும் உருவாக்கும்‌ மாவீரர்கள் எந்தக் கனவிற்காகத் தங்கள் உயிரையும் விலையாக அளித்துப் போராடினார்களோ அந்தக் கனவு தேசத்தை, அழித்தொழிக்கப்பட்ட நமது தாய் நிலமான தமிழீழ நாட்டினை கட்டி எழுப்ப வேண்டிய ஒரு மாபெரும் கடமை உலகத் தமிழின இளையோர் தோள்களுக்கு மாற்றப்பட்டிருக்கிறது. தமிழினத்தின் ஒற்றை அடையாளம், தமிழினத்தின் தேசியத் தலைவர் என்னுயிர் அண்ணன் மேதகு வே பிரபாகரன் அவர்கள் சொன்னதுபோல இளம் தலைமுறையினர் இந்த வரலாற்றின் அழைப்பிலிருந்து, எப்போதும் விலகிப்போகக்கூடாது என்பதே இந்த இனப்படுகொலை நாளில் நாம் எடுக்க வேண்டிய உறுதி.

(2/3)

முந்தைய செய்திமே18 இனப் பேரெழுச்சி நாள்! வரலாற்றின் மூத்த இனமான தமிழர்…
அடுத்த செய்திகடந்த காலங்களில் தவறாக கட்டமைக்கப்பட்ட இந்திய நாட்டின் பிழையான வெளியுறவு…