முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மனித வடிவில் தெய்வமாய் வாழ்ந்துகொண்டிருக்கும் மருத்துவர் பெருமக்கள் அனைவருக்கும் இனிய…

0

மனித வடிவில் தெய்வமாய் வாழ்ந்துகொண்டிருக்கும் மருத்துவர் பெருமக்கள் அனைவருக்கும் இனிய மருத்துவர் நாள் நல்வாழ்த்துகள்!

மருத்துவர்களின் ஈகம் போற்றும் இந்நாளில், அவர்களின் நீண்டநாள் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும்!

உலகில் மானுட சமூகம் மட்டுமின்றிப் பிற உயிர்கள் எதிர்கொள்ளும் நோய்களுக்கும், காயங்களுக்கும் மருத்துவச் சிகிச்சையளித்து உயிர்காக்கும் உன்னதப் பெரும் பணியில் ஈடுபட்டு வருவதாலேயே கடவுளுக்கு நிகராக மருத்துவர்களை உலகம் போற்றி வருகின்றது.

மருத்துவப் பெருமக்கள்தான் இவ்வுலகில் ஏற்பட்ட பல கொடுந்தொற்று நோய்களிலிருந்து கோடிக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றி வருகின்றனர் என்பது மானுட சமூகத்தால் என்றென்றும் நன்றியுடன் போற்றத்தக்கதாகும்.

அவ்வகையில், இந்தியா முழுவதும் மருத்துவர்கள் நாளாகக் கொண்டாடப்படுகின்ற இன்று ( சூலை 1), தங்கள் உடலையும், உயிரையும் துச்சமெனக் கருதி, மக்கள் உயிர்காக்கவும், நோய்த்தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவரவும் அரும்பாடாற்றிவரும் மருத்துவர் பெருந்தகைகள் அனைவருக்கும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்!

அதேவேளையில், மக்களின் உயிர் காக்க நாள்தோறும் போராடிவரும் மருத்துவர்கள் தங்கள் உரிமைகளைக் காக்க ஆண்டுக்கணக்கில் போராடிவரும் துயரம் தொடர்வது மிகுந்த வேதனையளிக்கிறது.

ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பதுபோல மருத்துவப்பெருமக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம் என்று வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு, நான்கரை ஆண்டுகளாகியும் அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற மறுப்பது, மருத்துவர்களின் ஈகத்தை அவமதிக்கும் கொடுஞ்செயலாகும்.

மருத்துவர்களின் நீண்டநாள் கோரிக்கைகளான ஒன்றிய அரசின் மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்படவேண்டும், தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தவாறு அரசாணை 354-ன் படி, அரசு மருத்துவர்களுக்கு 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்பி பணிச்சுமையை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.

@CMOTamilnadu
@mkstalin

உயிர்காக்கும் உன்னதப் பணிபுரியும் மருத்துவர் பெருமக்கள் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

#DoctorsDay2025

முந்தைய செய்திதிருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதி, முத்துப்பேட்டை ஒன்றியம், தொண்டியக்காடு ஊராட்சியின் செயலாளர்…
அடுத்த செய்திPasamailaram Reactor Blast! – Seeman Shares his Grief!