பசுமை மின்சாரம் என்கிற பெயரில் இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதை அரசு வேடிக்கைப் பார்ப்பதா? கல்லத்திகுளம் சூரிய மின் ஆற்றல் திட்டத்தை உடனடியாகத் தடுத்து நிறுத்தி வளப்பாதிப்பில்லா வேறு இடத்தில் நிறைவேற்ற ஒன்றிய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
@mkstalin @TThenarasu @MRKPanneer @supriyasahuias @Chief_Secy_TN @narendramodi @AmitShah @moefcc @byadavbjp
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் வட்டம், மாறாந்தை ஊராட்சி, கல்லத்திகுளம் கிராமத்தில் VC Green Energy Pvt. Ltd. மற்றும் அதன் துணை நிறுவனங்களால் திட்டமிடப்பட்டுள்ளப் பெரிய அளவிலான சூரிய மின் உற்பத்தித் திட்டம், மரங்களின் கொடூர அழிப்பாக மாறியுள்ளது. 264 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் 10 லட்சம் மரங்களை வெட்டி அழிக்கும் இந்தத் திட்டம், அங்கிருக்கக்கூடிய பொதுமக்கள் மற்றும் வேளாண் குடிகளின் வாழ்வாதாரத்தைச் சிதைத்து, சுற்றுச்சூழலை அழித்து, உயிரினங்களை அழிவுக்குத் தள்ளுகிறது. இது தனியார் சொத்து என்ற போர்வையில் நடைபெறும் சட்டவிரோதச் செயலாகும். இப்பகுதி மலைப்புறப் பகுதியாக வரையறுக்கப்பட்டுள்ள நிலையில் இத்தனை மரங்களைக் கொண்ட இந்நிலத்தை மறுவகைப்படுத்துதலுக்கு அனுமதி அளித்ததே தவறாகும்.
மா, பலா, சப்போட்டா, முந்திரி போன்ற பழ மரங்கள் 10 லட்சம் ஒரே நேரத்தில் அழிக்கப்படுவதால், இப்பகுதியில் சூழலியல் மாற்றம் தீவிரமாகும். இங்கு வாழும் மான், காட்டுப்பன்றி, மயில், உடும்பு போன்ற உயிரினங்கள் வாழிடத்தை இழக்கின்றன. ஒவ்வொரு மெகாவாட் சோலார் திட்டத்துக்கும் நாள் ஒன்றுக்கு 5000 லிட்டர் நீர்த்தேவை உள்ளது. இதனால் நிலத்தடி நீர் அளவு குறைந்து சுற்றுப்புறங்களில் இருக்கும் வேளாண் குடி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். பசுமை ஆற்றல் என்ற பெயரில் மரங்கள் அழிக்கப்படுவதால் வெளியாகும் கார்பன், மாற்று மின் உற்பத்தித் திட்டத்தின் பயனை நீர்த்துப்போக செய்யும். மேலும், சூரிய மின்னாற்றல் தகடுகளால் உயர் வெப்பம் ஏற்படும்.
இதுபோன்ற பெரிய அளவிலான திட்ட அனுமதிக்கு (10 லட்சம் மரங்கள் போன்றவை), 2006ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிப்பின் கீழ் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) செய்யப்படவேண்டும். ஒரு திட்டமானது 20 ஹெக்டேருக்கு மேல் இருந்தால் அல்லது B வகையின் கீழ் வந்தால் (5 மெகாவாட்டிற்கு மேல் சூரிய மின் ஆற்றல் திட்டங்களுக்குப் பெரும்பாலும் மாநில அளவிலான அனுமதி தேவைப்படும்.) இத்திட்டத்திற்கு இதுவரை மதிப்பீடு நடத்தப்படவில்லை என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மாற்று மின் திட்டங்களைப் பின்பற்ற வேண்டும் என்றாலும் தரிசு நிலங்களுக்குப் பதிலாக பல்லாயிரக்கணக்கான மரங்கள் இருக்கக்கூடிய நிலங்களை அழிப்பது எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல. தமிழ்நாடு அரசு உடனடியாக இச்சிக்கலில் தலையிட்டு மாற்று இடத்தில் இத்திட்டம் முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும் என்றும் தற்போது முன்னெடுக்கப்படும் நிலத்தில் இதுவரை அழிக்கப்பட்ட மரங்களுக்கு ஈடாக புதிய மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பதை உறுதி செய்திட வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகின்றேன்.


