அன்பு இளவல் சதீஷ் செல்வகுமார் எழுதி இயக்கி, அன்புத்தம்பி சித்து குமார் இசையமைப்பில், அன்புத்தம்பி அசோக்செல்வன் மற்றும் தங்கை மிர்னா ஆகியோரின் உணர்வுப்பூர்வமான நடிப்பில் வெளியாகியுள்ள தாரணா 18 மைல்ஸ் ( Tharana – 18 miles) பாடல் காணொளியை வலையொளியில் கண்டு நெகிழ்ந்தேன்.
பாடலின் ஒவ்வொரு காட்சியும்
மிகச்சிறப்பாக அமைந்துள்ளது.
ஓர் இனம் சுமந்து வரும் நூற்றாண்டு வலியை 15 நிமிடங்களுக்குள் பார்க்கும் மனிதர்களுக்குள் கடத்தி அவர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்திவிட முடியும் என்பதை சாதித்துள்ளதன் மூலம் திரைக்கலையும், இசையும் எத்தனை அளப்பரிய ஆற்றல் உடையது என்பதை இப்பாடல் காணொளி நிறுவியுள்ளது.
உலக அரசியலை ஒற்றை வரியில் குறிப்பிடும் 'இங்க நிலம்தான் அரசியல்' என்பது உள்ளிட்ட இடையிடையே வரும் அழுத்தமான உரையாடல்கள் இதயத்தை தைக்கிறது. ' இந்த நாட்டில் சட்டவிரோத குடியேறியா நீ வாழ்றத விட, எங்கோ தூர தேசத்தில் சுதந்திரமா, எல்லா உரிமையும் பெற்று உன் வலியை உலகிற்கு உரத்து சொல்லு' என்ற பாடலின் இறுதி வசனம் அடங்கிய படைப்புகள் ஏற்படுத்திய தாக்கம்தான், இன்றைக்கு இந்திய அரசே 2015க்கு முன் குடியேறிய ஈழத்தமிழ் மக்கள் சட்டவிரோத குடியேறிகள் அல்ல என்று அறிவிக்கும் அளவிற்கு மாற்றத்தை ஏற்படுத்த முதன்மைக் காரணமாகும்.
ஒரு முழு நீள திரைப்படமாக விரிவதற்கான அத்தனை தகுதியும் உடைய அழுத்தமான கதைக்கருவினை சில நிமிடங்களில் சொல்லியுள்ளதோடு, அதேயளவு தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது இப்பாடல் காணொளியின் மிகப்பெரிய வெற்றியாக நான் கருதுகிறேன்.
உலகெங்கும் வாழும் தாய்த்தமிழ்ச் சொந்தங்கள் அனைவரும் 'தாரணா 18 மைல்ஸ்' பாடல் காணொளியை
வலையொளியில் கண்டு ஆதரிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். அப்போதுதான்
இனத்தின் வலியை உலகிற்கு உரைக்கும் இதுபோன்ற கலைப்படைப்புகள் இன்னும் நிறைய வெளிவர வாய்ப்பாக அமையும்.
தாரணா 18 மைல்ஸ் ( Tharana – 18 miles) பாடல் ஆக்கத்தில் பங்கெடுத்த அனைவருக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த அன்பும், வாழ்த்துகளும்!



