முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மாமல்லன் நீர்த்தேக்கத் திட்டத்திற்கு எதிராக மீனவ கிராமங்களின் சார்பில் இன்று…

0

மாமல்லன் நீர்த்தேக்கத் திட்டத்திற்கு எதிராக மீனவ கிராமங்களின் சார்பில் இன்று (09.02.2026) நடைபெற்ற போராட்டத்தினை ஏற்று தமிழ்நாடு அரசு உடனடியாக இத்திட்டத்தினைக் கைவிட வேண்டும்.

@mkstalin @TThenarasu @supriyasahuias @ARROffice @katpadidmk @thamoanbarasan

சென்னையின் குடிநீர் தேவையை நிறைவேற்ற மற்றும் வெள்ளத் தடுப்பு ஆகிய காரணங்களைக் கூறி, செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் மற்றும் திருக்கழுக்குன்றம் வட்டங்களில் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலை இடையிலுள்ள கோவளம் உப்பங்கழிப் பகுதியில் ஒரு புதிய நன்னீர் தேக்கத்தை அமைக்கத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஏறக்குறைய 471 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 4,375 ஏக்கர் பரப்பளவில் அமையவிருக்கும் இந்தத் திட்டத்திற்கான கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளின் (CRZ) அனுமதி கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி வழங்கப்பட்ட நிலையில், சென்ற 19.01.2026 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களால் இத்திட்டம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது.

இத்திட்டம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து இதன் சூழலியல் மற்றும் மீனவர் வாழ்வாதார சிக்கல்களை சுட்டிக்காட்டி இதனை சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், பொதுமக்களும் எதிர்த்து வருகின்றனர். கடந்த 18.01.2026 அன்று நாம் வெளியிட்ட அறிக்கை முதல், இத்திட்டத்திற்கு எதிராக போராடும் பொதுமக்களுக்கு நாம் தமிழர் கட்சி தனது முழுமையான ஆதரவை வழங்கி வருகிறது. இந்நிலையில் இன்று 09.02.2026, கானத்தூர் ரெட்டிக்குப்பம் முதல் கொக்கிலிமேடு வரையிலான 16 மீனவக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் வாழ்வாதாரப் பாதிப்புகளை சுட்டிக்காட்டி தமிழ்நாடு அரசுக்கு எதிராகவும், மீன்வளத்துறையைக் கண்டித்தும், மாமல்லன் நீர்த்தேக்க திட்டத்தை கைவிட வலியுறுத்தி கோவளம் உப்பங்கழியில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.

காலம் காலமாக உப்பங்கழிகளை நம்பி மீன்பிடித் தொழில் செய்து வரும் மீனவர்களின் மரபுவழி "பாாடு" உரிமைகளை இந்தத் திட்டம் முற்றிலுமாகப் பறிக்கும் வகையில் அமைந்துள்ளது. அரசு தனது திட்ட அறிக்கையில் இந்த இடங்களை "வெற்று நிலம்" என்று குறிப்பிட்டிருப்பது மீனவ சமூகத்தை வஞ்சிக்கும் செயலாகும். இயற்கை வளங்களையும் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தையும் பலிகொடுத்து உருவாக்கப்படும் இந்தத் திட்டத்தை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். மக்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்காமல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது மக்களாட்சிக்கு எதிரான செயலாகும். இதுவரை அளித்துவரும் ஆதரவின் நீட்சியாக, மீனவகுடி பெருமக்களின் இன்றையப் போராட்டத்திலும் நாம் தமிழர் கட்சியின் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ஐயா அம்பேத் ராஜன் அவர்கள் தலைமையில் கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் பங்கெடுப்பார்கள் எனவும், இத்திட்டம் நடைமுறைக்கு வராமல் தடுப்பதற்கான அனைத்து அறவழி போராட்ட வடிவங்களையும் நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என்றும் அறிவிக்கிறேன். மீனவ மக்களின் அறப்போராட்டம் வெற்றியடையட்டும்.

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி – திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த…
அடுத்த செய்திபுதுச்சேரி பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் 292 கெளரவ பட்டதாரி ஆசிரியர்களை உடனடியாக…