முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் 292 கெளரவ பட்டதாரி ஆசிரியர்களை உடனடியாக…

0

புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் 292 கெளரவ பட்டதாரி ஆசிரியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும்!

புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறையில் நான்கு ஆண்டு முதல் கடந்த ஆறு ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் 292 கெளரவ விரிவுரையாளர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் பாலசேவிக்கா ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய புதுச்சேரி மாநிலத்தை ஆளும் என்ஆர் காங்கிரஸ் – பாஜக கூட்டணி அரசு மறுத்து வருவது வன்மையான கண்டனத்துக்குரியது.

புதுச்சேரி மாநிலத்தில் 34 கெளரவ விரிவுரையாளர்கள், 62 கெளரவ பட்டதாரி மொழி ஆசிரியர்கள், 24 பிற பாடங்கள் கெளரவ பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 172 பாலசேவிக்கா ஆசிரியர்கள் என புதுவை கல்வித்துறையில் பணியாற்றும் 292 ஆசிரியர் பெருமக்களும், ஆட்சேர்ப்பு விதிகளின் படியும், இடஒதுக்கீடு முறை, வயது வரம்பு உள்ளிட்ட அனைத்து விதிமுறைகளின் படியும் முறைப்படி பணியமர்த்தப்பட்ட ஆசிரியர் பெருமக்களை வீதியில் போராட விடுவது வன்மையான கண்டனத்துக்குரியது.

கடந்த நான்கு ஆண்டு முதல் ஆறு ஆண்டுகளாக நேரடி நியமனத்தில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் பெருமக்களை மறுபடியும் புதியதாகத் தேர்வு எழுதினால் மட்டுமே பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று கூறும் புதுச்சேரி அரசு கூறுவது கேலிக்கூத்தானது. அப்படியென்றால் தகுதியற்றவர்களை ஆசிரியர் பணிக்குத் தேர்ந்தெடுத்ததா புதுச்சேரி அரசு. இத்தனை ஆண்டுகளாகத் தகுதியற்ற ஆசிரியர்களை வைத்துதான் மாணவர்களுக்கு பயிற்றுவித்ததா புதுச்சேரி மாநில அரசு? குறைந்த ஊதியத்தில் அவர்களின் உழைப்பினை உறிஞ்சி அடிமைகள்போல நடத்தும்போது நல்லாசிரியர்களாகத் தெரிந்தவர்கள், பணி நிரந்தரம் கேட்டுப் போராடும்போது தகுதியற்றவர்கள் ஆகிவிட்டார்களா? அரசியல் அமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள அனைவருக்கும் சம வாய்ப்பு, இட ஒதுக்கீடு முறை, முறையான ஆள் சேர்ப்பு விதிகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு, தினக்கூலியாகவோ ஒப்பந்த அடிப்படையிலோ தொடர்ந்து பணி செய்து வருபவர்களைப் பணி நிரந்தரம் செய்யலாமென்று பல்வேறு நீதிமன்றத் தீர்ப்புகளும் உறுதி செய்துள்ளது. உச்சநீதிமன்றமும் வழிகாட்டுதல் வழங்கி உள்ளது. ஆகவே, புதுச்சேரி அரசு 292 ஒப்பந்த ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய மறுப்பது சட்ட விரோதமான கொடுஞ்செயலாகும்.

புதுச்சேரி மாநில பள்ளிக் கல்வித்துறையில் கடந்த 2012 முதல் 2022 வரையிலான காலங்களில் பணி புரிந்த ஒப்பந்த ஆசிரியர்களைப் புதுச்சேரி மாநில அரசு கொள்கை முடிவெடுத்து ஐந்து முறை பணி நிரந்தரம் செய்துள்ளது. ஆனால், புதுச்சேரி அரசு கல்வித்துறை அமைச்சர் 25.03.2025 அன்று சட்டசபையில் கெளரவ ஆசிரியர்களாகப் பணிபுரியும் ஒப்பந்த ஆசிரியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று அறிவித்த நிலையில் இன்று வரையில் அதனை மட்டும் என்.ஆர்.காங்கிரஸ் அரசு நிறைவேற்ற மறுத்து வருவது பெருங்கொடுமையாகும்.

புதுச்சேரி அரசு அறிவித்தபடி 292 ஒப்பந்த ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்வது தொடர்பான எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளாத காரணத்தால், போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் பெருமக்களைப் புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் அழைத்துப்பேசி பொங்கல் விழா முடிவதற்குள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று வாக்குறுதி அளித்தார் அதையும் புதுச்சேரி அரசு நிறைவேற்றவில்லை என்பதால், தங்கள் பணி நிரந்தரம் கோரிக்கையை வலியுறுத்தி கல்வித்துறை வளாகத்தில் கடந்த பதினேழு நாட்களாகக் காத்திருப்புப் போராட்டத்தில் பங்கேற்று, வருவதோடு புதுச்சேரி சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த 05.2.2026 அன்று கூடிய புதுச்சேரி அரசின் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்பந்த ஆசிரியர்கள் பணியினை மேலும் ஆறு மாதம் ஒப்பந்த காலம் நீட்டிப்பு செய்ய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. புதுச்சேரி அரசின் இத்தகைய துரோகச் செயல்பாடுகள் மூலம் வருங்காலத் தலைமுறையினரை உருவாக்கும் அறிவார்ந்த ஆசிரியர் பெருமக்களை ஏமாற்றும் செயலில் புதுச்சேரி அரசு தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவது கொடுங்கோன்மையாகும்.

ஆகவே, புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறையில் பல ஆண்டுகளாகப் பணிபுரிந்து வரும் 292 கெளரவ விரிவுரையாளர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் பாலசேவிக்கா ஆசிரியர்களை இனியும் ஏமாற்றி, அவர்களின் குடும்பங்களை வறுமையில் வாடவிடாமல் உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

தங்களின் வாழ்வாதார உரிமைக்காகப் போராடும் ஆசிரியர் பெருமக்களுக்கு நாம் தமிழர் கட்சி துணைநின்று, போராட்ட கோரிக்கைகள் வெல்ல வலிமைச்சேர்க்கும் என்பதையும் இவ்வறிக்கையின் வாயிலாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திமாமல்லன் நீர்த்தேக்கத் திட்டத்திற்கு எதிராக மீனவ கிராமங்களின் சார்பில் இன்று…
அடுத்த செய்திஉரிமைக்காகப் போராடும் பார்வை மாற்றுத்திறனாளிகள் மீது அடக்குமுறையை ஏவும் கொடுங்கோன்மையைக்…