தலைமை அறிவிப்பு – மக்கள் உயிர் காக்க குருதிக்கொடையளித்து இனமான பணியாற்றிடுவோம்!

8

நாள்: 10.11.2025

மக்கள் உயிர் காக்க குருதிக்கொடையளித்து
இனமான பணியாற்றிடுவோம்!

அன்பின் உறவுகளுக்கு,
வணக்கம்!

தமிழ்த் தேசிய இனத்தின் முகமாக முகவரியாக விளங்கும் தன்னிகரில்லா தமிழ்த்தேசியத் தலைவர், என்னுயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 71ஆம் ஆண்டு பிறந்தநாளான 26-11-2025 அன்று, உலகெங்கும் பரவி வாழும் தாய்த்தமிழ் உறவுகள் அந்நாளைச் சிறப்பாகக் கொண்டாடத் தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில், நாம் தமிழர் கட்சி சார்பாகச் சிறப்பான முன்னெடுப்புகளை எப்போதும் போலத் தொடங்கியிருக்கிறோம்.

தலைவர் பிறந்த நாளினை, தமிழர் எழுச்சி நாளாகப் போற்றி, இன விடுதலைக்குச் சூளுரைக்க உறுதியேற்கும் விதமாக, நாம் தமிழர் கட்சி சார்பாக வருகின்ற கார்த்திகை 10ஆம் நாள் 26-11-2025 அன்று இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ள ஏபிசா திருமண மண்டபத்தில் கொண்டாடப்படவிருக்கும் தமிழர் எழுச்சி நாள் விழாவில், குருதிக்கொடைப் பாசறை சார்பில் மாபெரும் குருதிக்கொடை முகாம் முன்னெடுக்கப்படவிருக்கிறது.

அதேபோன்று, குருதிக்கொடைப் பாசறை ஒவ்வொரு ஆண்டும் தமிழகமெங்கும் முன்னெடுத்துவரும் குருதிக்கொடை வழங்கும் முகாம்களில் இவ்வாண்டும் நாம் தமிழர் உறவுகள் பெருந்திரளாக உணர்வெழுச்சியுடன் பங்கேற்க வேண்டுமென அழைப்பு விடுக்கிறேன்.

அதேபோன்று, தமிழ்த்தேசிய இன விடுதலைக்காக, குருதி சிந்தி காத்திட்ட மாவீரர்களின் ஈகத்தைப் போற்றும் மாவீரர் நாளன்று (27-11-2025) முன்னெடுக்கப்படும் குருதிக்கொடை முகாம்களிலும், நம் குருதியைக் கொடையாகத் தந்து மக்கள் உயிர் காத்து, நம் இனத்தின் மீதான பற்றுறுதியை இந்த உலகத்திற்கு எடுத்துக்காட்டிட வேண்டும் என உரிமையோடு அழைக்கின்றேன்.

மாவீரர் சிந்திய குருதி! ஈழம் வெல்வது உறுதி! 


சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – மக்கள் உயிர் காக்க குருதிக்கொடையளித்து இனமான பணியாற்றிடுவோம்!
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி மற்றும் ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான மேலதிகப் பொறுப்பாளர்