தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகின்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்ற தேர்வர்களின் கோரிக்கையானது மிகமிக நியாயமானது. அதனை ஏற்க மறுத்து, வலுக்கட்டாயமாகத் தேர்வினை அறிவித்த தேதியில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துவதென்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு பணிக்கான பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டிருக்கும் நிலையில், அதற்கேற்ப கால அவகாசம் வழங்க வேண்டும் என்ற தேர்வெழுதும் ஆசிரியப்பெருமக்களின் கோரிக்கை மிகமிக நியாயமானதும், அவர்களின் அடிப்படை உரிமையுமாகும். அதனை திமுக அரசு ஏற்க மறுப்பது பெருங்கொடுமையாகும். இதற்கு முன் பல அரசுப்பணி தேர்வுகளும், அதன் முடிவுகளும், பணி நியமன ஆணை வழங்குதலும் ஆண்டுக் கணக்கில் எவ்வித காரணமுமின்றி, ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், தேர்வர்களின் நியாயமான கோரிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்க மறுப்பது ஏன்? தேர்வு எழுதும் பட்டதாரி ஆசிரியர்களின் பக்கம் உள்ள நியாயத்தை திமுக அரசு உணரத் தவறியதேன்? அவசர அவசரமாக முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணி தேர்வினை நடத்தி முடிக்க திமுக அரசு திட்டமிடுவது, ஊழல் முறைகேடுகளை நிகழ்த்தும் சூழ்ச்சியோ என தோன்றுகின்றது.
ஆகவே, தேர்வு எழுதும் ஆசிரியப்பெருமக்களின் நலன் காக்கும் வகையில், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகின்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வை தேவையான கால அவகாசம் வழங்கி, நடத்த வேண்டுமெனவும், 12.10.2025 அன்று நடத்தத் திட்டமிட்டுள்ள தேர்வினை உடனடியாக ஒத்தி வைக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
https://x.com/Seeman4TN/status/1975415066683134018
– செந்தமிழன் #சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
#நாம்தமிழர்கட்சி




