கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை அருகேயுள்ள, திட்டுவிளையில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு கண்ணியமிகு தாத்தா காயிதே மில்லத் அவர்களின் பெயரை வைக்காமல், திமுக அரசு திட்டமிட்டு தவிர்த்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
இந்துத்துவ மதவெறியர்கள் கண்ணியமிகு தாத்தா காயிதே மில்லத் அவர்களை தேச விரோதி என்று அவதூறு சுமத்தி, அவருடைய பெயரைப் பேருந்து நிலையத்திற்குச் சூட்டக்கூடாது என்று போராட்டம் நடத்தியதற்கு அடிபணிந்த திமுக அரசு, தாத்தாவின் பெயரைச் சூட்டாமல் தவித்திருப்பது அப்பட்டமான பாசிசப்போக்காகும்.
இந்த நாட்டின் விடுதலைக்குப் பாடுபட்ட தாத்தா காயிதே மில்லத் தேச விரோதியா?
“நான் அல்லா என்று அழைப்பதற்கு முன்பே அம்மா என்று அழைத்தவன்; இஸ்லாம் எங்கள் வழி இன்பத்தமிழே எங்கள் மொழி” என்று இந்திய நாடாளுமன்றத்திலேயே முழங்கிய மாமனிதர் தேச விரோதியா?
இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சிகளின் தலைவராகப் பதவி வகித்து, இந்த நாட்டில் வாழ்ந்த இசுலாமியப் பெருமக்களை ஒரு குடையின் கீழ் ஒன்றுபடுத்தி, இந்திய மக்களாட்சி முறைமையின் மாபெரும் தூணாக திகழ்ந்த தாத்தா காயிதே மில்லத் தேச விரோதியா?
இந்திய அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினராக இருந்த தாத்தா காயிதே மில்லத் தேச விரோதியா?
20 ஆண்டுகள் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகவும், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவராகவும் திகழ்ந்த தாத்தா காயிதே மில்லத் தேச விரோதியா?
பாகிஸ்தான் பிரிவினையின்போது விருப்பமுள்ள இசுலாமியர்கள் பாகிஸ்தான் செல்லலாம் என்று அரசு கூறியபோது, நாங்கள் இந்த மண்ணின் மக்கள், நாங்கள் ஏன் வேறு நாட்டிற்கு செல்ல வேண்டும் என்று எதிர் கேள்வி எழுப்பிய பெருமகன், தாத்தா காயிதே மில்லத் அவர்கள் தேசிய விரோதியா?
முகமது அலி ஜின்னா உங்களுக்கு எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் என்று கூறியபோது, ‘ஜின்னா அவர்களே, எங்கள் பிரச்சினைகளை நாங்கள் தீர்த்துக் கொள்கிறோம். எங்களின் பாதுகாவலுக்கு இந்தியா என்ற நாடு உண்டு’ என்று ஜவஹர்லால் நேரு முன்னிலையிலேயே கூறிய தாத்தா காயிதே மில்லத் தேச விரோதியா?
இந்த நாடு ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு கிடந்தபோது எதிர்த்துப் போராடிய தாத்தா காயிதே மில்லத் தேச விரோதி? அதன் விடுதலைக்கு எந்த பங்களிப்பும் செய்யாத நீங்கள் தேசியவாதியா?
இந்த நாட்டின் விடுதலைக்கு போராடியவர்கள் பாகிஸ்தானிலும், பங்களாதேசிலும் கூட உள்ளனர். ஆனால், இந்த நாட்டின் விடுதலைக்கு போராடாத, எந்த பங்களிப்பும் செய்யாதவர்கள் நாடாளுமன்றத்திலும் பெரும் பதவிகளிலும் இருந்துகொண்டு மற்றவர்களுக்கு இந்நாட்டின் தேசப்பற்று குறித்து பாடமெடுப்பதும், யார் தேசியவாதி யார் தேசவிரோதி என சொல்வதும் தான் பெருங்கொடுமை.
இந்த நாட்டை மதத்தின் பெயரால் துண்டாடி ஒவ்வொரு நாளும் பிரிந்து பிளக்கும் நீங்கள் எல்லாம் தேசியவாதி, இந்த நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் தம் வாழ்நாளை ஒப்புவித்து வாழ்ந்த பெருந்தகை தேச விரோதியா? மதவாதிகளின் இத்தகைய பொய்ப்பரைப்புரைக்கு திமுக அரசு துணைபோனது ஏன்? அப்படி என்றால் தாத்தா காயிதே அவர்களை திட்டமிட்டு இழிவுபடுத்தும் மதவாதிகளின் அவதூறு பரப்புரையை திமுக அரசு ஏற்கிறதா? திமுக அரசிற்கு ஏன் இந்த இரட்டை வேடம்?
இசுலாமியர் பெருமக்கள் பெருமளவில் வாழும் திட்டுவிளைப் பகுதி பேருந்து நிலையமானது, ஏற்கனவே தாத்தா காயிதே மில்லத் அவர்களின் பெயரில் இயங்கியதுதானே? புதிதாகக் கட்டிய பேருந்து நிலையத்திற்கு அதே பெயரை வைப்பதற்கு திமுக அரசுக்கு என்ன தயக்கம்? ஆர்எஸ்எஸ் கோட்பாடுகளை அப்படியே செயல்படுத்துவதற்கு பெயர்தான் திராவிட மாடலா? இதிலிருந்தே பாஜகவின் B Team ஆக செயல்படுவது திமுகதான் என்பது மீண்டுமொருமுறை உறுதியாகிறது.
ஆகவே, கன்னியாகுமரி மாவட்டம் திட்டுவிளை புதிய பேருந்துநிலையத்திற்கு, ஏற்கனவே சூட்டப்பட்டிருந்தபடி, கண்ணியமிக்க தாத்தா காயிதே மில்லத் அவர்களின் பெயரையே மீண்டும் சூட்ட வேண்டுமென்று வலியுறுத்துகிறேன். இல்லையென்றால், மாபெரும் மக்கள் திரள் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என்றும் எச்சரிக்கின்றேன்.
https://x.com/Seeman4TN/status/1984208742905516073
– செந்தமிழன் #சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
#நாம்தமிழர்கட்சி






