திரைப்பட நடிகரும், கராத்தே பயிற்சியாளருமான அன்புச்சகோதரர் ஷிஹான் ஹுசைனி அவர்கள் உடல்நலக்குறைவால் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
கராத்தே மட்டுமன்றி வில்வித்தையிலும் சிறந்து விளங்கிய சகோதரர் ஹுசைனி அவர்கள் ஏழை குழந்தைகளுக்கு இலவச பயிற்சிக் கூடங்களை நடத்தி, தற்காப்புக்கலையில் சிறந்து விளங்கும் தமிழிளம் தலைமுறையை உருவாக்கிய பெருந்தகையாவார். அதுமட்டுமின்றி, சிற்பத்திலும் வல்லவரான சகோதரர் ஹுசைனி அவர்கள் முள்ளி வாய்க்கால் முற்றத்தில் சிலைகளை இனமான உணர்வுடன் வடிவமைத்துத் தந்த புகழுக்குரியவர்.
நோய் காரணமாகத் தாம் இறக்கப்போகிறோம் என்பதை அறிந்தவுடன், தனது உடல் உறுப்புகளை மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்குக் கொடையளிப்பதாக அறிவித்து, முன்மாதிரியாகத் திகழ்ந்துள்ள அவருடைய மாந்தநேயம் போற்றுதலுக்குரியது.
தமிழ்ப்பேரினத்தின் மீதும், நாம் தமிழர் கட்சியின் மீதும் பெரும் பற்றிக்கொண்டிருந்ததோடு, என் மீது பேரன்புகொண்டிருந்த சகோதரர் ஹுசைனி அவர்களின் மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.
தற்காப்புக் கலை வல்லுநர், ஓவியர், சிற்பி, நடிகர், வில்வித்தை வீரர் என்று பன்முகத்திறன் கொண்ட கலைஞராகத் திகழ்ந்த சகோதரர் ஷிஹான் ஹுசைனி அவர்களின் மறைவால் துயருற்றுள்ள, அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும், அவரது மாணவர்களுக்கும், ரசிகர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவிப்பதுடன், துயரிலும் பங்குகொள்கிறேன்.
அன்புச்சகோதரர் ஷிஹான் ஹுசைனி அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!



