படகுவிபத்தில் காணாமல்போன 11 கன்னியாகுமரி மீனவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

206

படகுவிபத்தில் காணாமல்போன 11 கன்னியாகுமரி மீனவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய் பட்டணம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த ஏப்ரல் 9 அன்று ஆழ்கடல் மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற விசைப்படகு விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த வள்ளவிளை கிராமத்தைச் சேர்ந்த 11 மீனவர்கள் காணமல் போயினர் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.

விசைப்படகுடனான தொலைத்தொடர்பு ஏப்ரல் 23 அன்று மாலை முதல் துண்டிக்கப்பட்டு, அடுத்த நாள் விசைப்படகு நடுக்கடலில் இரண்டாக உடைந்தது கண்டறியப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத கப்பல் மோதியதில் விசைப்படகு விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என்று மீனவர்கள் சந்தேகிக்கின்றனர். இதனால், படகிலிருந்த 11 மீனவர்களின் நிலை இதுவரை என்னவென்று தெரியவில்லை. அவர்களது குடும்பத்தினர் செய்வதறியாது கலங்கித் தவித்து வருகின்றனர். இதுகுறித்து மீனவளத்துறை அதிகாரிகளைத் தொடர்புகொண்டபோது அவர்கள் உரிய விளக்கம் அளிக்காததால் மீனவர்களும், குடும்பத்தினரும் பெரும் அச்சத்திலும், கவலையிலும் உறைந்துபோயிள்ளனர்.

ஆகவே, தமிழக அரசு உடனடியாக மத்திய அரசுடனும், கேரள அரசுடனும் இவ்விவகாரம் குறித்துக் கலந்துப்பேசி, காணாமல் போன 11 மீனவர்களை விரைந்து மீட்பதற்கான தேடுதல் நடவடிக்கைகளை உடனடியாக விரைந்து எடுக்க வேண்டும் எனவும், மீனவர்களின் விலைமதிப்பற்ற உயிர்களை மீட்க, விமானப்படை விமானங்கள் மூலம் மீனவர்களைத் தேடும் முயற்சியை மேற்கொள்ளவும், பதினொரு மீனவர்களின் நிலை குறித்த தகவல்களை அவ்வப்போது அவர்களது குடும்பத்தினருக்குத் தெரியப்படுத்தவும் வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். மேலும், அடையாளம் தெரியாத கப்பல் விசைப்படகில் மோதி விபத்துக்குள்ளானது குறித்து உரிய விசாரணையும் நடத்த வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாகத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதமிழுக்கும், தமிழர்களுக்குமெதிரான ஆயிரம் ஆண்டுகால ஆரிய வன்மம் தீர்க்க தமிழைப் புறக்கணிப்புச் செய்து, தமிழர்களை அவமதிப்பதா? – சீமான் கண்டனம்
அடுத்த செய்திஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முற்பட்டால் தமிழகம் போர்க்களமாக மாறும்; சட்டம் ஒழுங்கு சிக்கல் ஏற்படும் – சீமான் எச்சரிக்கை