நியூஸ் தமிழ் 24/7 செய்தி ஊடக நெறியாளர் தம்பி ராஜேஷ் மற்றும் நாம் தமிழர் கட்சி காரைக்குடி மண்டல பொறுப்பாளர் தம்பி மலை.இளங்கோ ஆகியோர் மீது திமுக முரடர்கள் நடத்தியுள்ள கொலைவெறித் தாக்குதல் அதிகார ஆணவத்தின் உச்சம்!

9

நியூஸ் தமிழ் 24/7 செய்தி ஊடகம் தமிழ்நாடு முழுவதும் மிகச்சிறப்பாக நடத்திவரும் ‘தேர்தல் பயணம்’ விவாத நிகழ்வின் ஒரு பகுதியாக காரைக்குடியில் நடைபெற்ற விவாத நிகழ்வின்போது திமுக அரசின் குறைகளை ஆதாரங்களோடு சுட்டிக்காட்டி கேள்விகளால் துளைத்தெடுத்த ஆருயிர் இளவல் இடும்பாவனம் கார்த்திக் அவர்களின் கேள்விக்கணைகளுக்கு பதில் சொல்ல திராணியற்ற, திமுகவின் சிவகங்கை மாவட்டத் துணைச்செயலாளர் சேங்கைமாறன், தன்னுடன் அழைத்துவந்த திமுக முரடர்களை தூண்டிவிட்டு, தம்பி இடும்பாவனம் கார்த்திக்கை பேசவிடாது தடுத்து தாக்க முயன்றதுடன், நாம் தமிழர் கட்சியின் காரைக்குடி மண்டலச்செயலாளர் அன்புத்தம்பி மலை.இளங்கோ மற்றும் நிகழ்ச்சியை நெறிபடுத்திய அன்பு இளவல் ராஜேஷ் அவர்களின் தலையை உடைத்து இரத்தம் கொட்டும் அளவிற்கு கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. குறிப்பாக திமுக மாவட்டச் செயலாளர் சேங்கைமாறன் திருப்புவனத்தில் தம்பி அஜித்குமார் காவல்துறையால் படுகொலை செய்யப்பட்டதில் கட்டப்பஞ்சாயத்து செய்து மூடி மறைக்க முயன்றது, திருப்புவனத்தில் மக்கள் நெருக்கம் உள்ள பகுதியில் மதுக்கூடம் நடத்தி வருவது, ஏனாதி, கணக்கன்குடி, கண்ணாரிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் பினாமிகள் மூலம் வளக்கொள்ளையில் ஈடுபடுவது ஆகிய மக்கள் விரோதச் செயல்களை ஆதாரங்களோடு தம்பி கார்த்திக் அம்பலப்படுத்தியதை பொறுத்துக்கொள்ள முடியாததே, திமுகவினரின் வன்முறை வெறியாட்டங்களுக்கு முழுமுதற் காரணமாகும். இரத்தம் சொட்ட சொட்ட நெறியாளர் தம்பி ராஜேஷ் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்படும் காட்சிகள் நெஞ்சைப் பதறச் செய்கிறது. நான் போட்டியிடுகின்ற காரைக்குடி தொகுதி என்பதாலேயே திமுக அரசின் கொடுமைகளை மக்களுக்கு தெரியாமல் மூடி மறைக்க எப்படியாவது நிகழ்ச்சி நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்ற தீய நோக்கத்துடன் முன்கூட்டியே திட்டமிட்டே குண்டர்களை தொண்டர்கள் என்ற பெயரில் அரங்கத்திற்குள் திமுக பொறுப்பாளர் சேங்கைமாறன் அழைத்து வந்துள்ளது நடைபெற்ற கொடுந்தாக்குதல் மூலம் தெளிவாகத் தெரிகிறது. திமுக அரசின் வன்முறை காட்டாட்சியின் ஒட்டுமொத்த அவலத்தையும் தோலுரிக்கும் ஒற்றை சாட்சிதான், நியூஸ் தமிழ் 24/7 செய்தி ஊடக நெறியாளரின் தலையையே உடைத்து நடத்திய கொலைவெறித் தாக்குதல் காட்சியாகும். கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சி முழுவதுமே திமுகவினரின் இத்தகைய வன்முறை வெறியாட்டங்கள், அதிகார அத்துமீறல்கள், கொலை, கொள்ளை, வழிப்பறி, போதை ஆசாமிகளின் தாக்குதல், பாலியல் வன்கொடுமைகள் என்று கொடுங்குற்றங்கள் நடைபெறாத நாட்களே இல்லை எனும் அளவிற்கு சட்டம் – ஒழுங்கு முற்று முழுதாக சீரழிந்து கிடந்தது. எப்படி திமுக ஆட்சியில் பாலியல் கொடுமைகளை தடுக்க வேண்டிய காவல்துறையினரே பாலியல் வன்கொடுமைகள் புரிந்தனரோ, பெண் காவலர்களே பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்களோ, பொதுமக்களை காக்க வேண்டிய காவலர்களே அப்பாவிகளை அடித்துக் கொன்றனரோ அதுபோல, திமுக காட்டாட்சியின் வன்முறைகளை நாளும் வெளியிட்டு வந்த செய்தி ஊடகத்தினரே திமுகவினரால் தாக்கப்படும் கொடூர நிகழ்வுகள் அக்கொடுமைகளின் உச்சமாகும். ஆட்சி அதிகார மமதையோடு 5 ஆண்டு காலமாக திமுக அரசு மக்களுக்கு புரிந்த கொடுமைகள் போதாதென்று, ஆட்சி முடிந்த பின்னரும் திருந்தாமல், திமுவினர் புரியும் வன்முறை வெறியாட்டங்கள் அனைத்தையும் மக்கள் பார்த்துக்கொண்டுதான் உள்ளார்கள். வருகின்ற ஏப்ரல் – 23 அன்று நடைபெறும் வாக்குப் பதிவின்போது, திமுகவிற்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். தமிழ்நாடு காவல்துறை நாம் தமிழர் கட்சியின் காரைக்குடி மண்டலச்செயலாளர் மலை.இளங்கோ, நியுஸ் தமிழ் 24/7 ஊடக நெறியாளர் தம்பி ராஜேஷ் உள்ளிட்டவர்கள் மீது தாக்குதல் நடத்திய திமுகவினர் மீது உடனடியாக கொலை முயற்சி வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டுமென்று வலியுறுத்துகிறேன். – செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திசுற்றறிக்கை: