இந்தியாவின் அதி உயரிய இலக்கிய விருதான, ஞானபீடம் விருதினை இவ்வாண்டு பெறுவதற்கு தமிழ்ப்பேரினத்தின் பெருமைமிகு அடையாளம், ஐயா கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செய்தியறிந்து பெருமிதமும், பெருமகிழ்ச்சியும் அடைந்தேன்.
பல்லாயிரம் ஆண்டுகால
மரபு செய்யுட்பாக்கள்
உயிர் கொள்ளும்
அடைகாப்பு..!
நூற்றாண்டு கண்ட
புதுக்கவிதைப் பூக்கள்
நடை பயிலும்
குயில் தோப்பு..!
மரபு கவிதை
விதிகள் மீறாமலும்
புதுக்கவிதை
மரபுகள் மாறாமலும்
தீந்தமிழ் திரையிசைப்
பாடல்கள் ஈன்று தரும்
இனிய யாப்பு..!
கருவாச்சிகளுக்கும் காவியம் எழுதி,
கள்ளிக்காடுகளுக்கும் இதிகாசம் எழுதி,
வடுகப்பட்டி முதல் வால்கா வரையில்
ஆயிரம் ஆயிரம் பாடல்கள் வடித்து
தமிழ் இலக்கியப் பீடத்தில்
பேரரசனாய் வீற்றிருக்கும்,
முத்தமிழ்ப் பேரறிஞர் ஐயா கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் மணிமகுடத்தில் ஒளிவீசும் வைரமாய் ஞானபீடம் விருது எந்நாளும் மின்னிட என்னுடைய நெஞ்சம் நிறைந்த அன்பும், வாழ்த்துகளும்!
@Vairamuthu



