முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

அரசர்க்கரசன் அருண்மொழிச்சோழன் பிறந்தநாளையே சதய விழா ஆண்டாக கணக்கிட தமிழ்நாடு…

0

அரசர்க்கரசன் அருண்மொழிச்சோழன் பிறந்தநாளையே சதய விழா ஆண்டாக கணக்கிட தமிழ்நாடு அரசு ஆவன செய்திட வேண்டும்!

@CMOTamilnadu @mkstalin

தமிழ்ப்பேரினத்தின் பெருமைமிகு அடையாளம் அரசர்க்கரசன் அருண்மொழிச்சோழன் பிறந்த ஆண்டையே சதய விழா ஆண்டாக கணக்கிடாமல் பதவியேற்ற ஆண்டினை கணக்கிட்டு கொண்டாடி வருவது வரலாற்றுப்பிழையாகும். தமிழ்நாடு அரசே அத்தவறை தொடர்ச்சியாக செய்து வருவது மக்களிடம் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தவே வழிவகுக்கிறது.

ஏற்கனவே தமிழ் புத்தாண்டு உள்ளிட்ட தமிழின வரலாற்று பெருமைகள் பலவற்றில் இரண்டு தரவுகள் கூறப்பட்டு, இரண்டில் எதனை கடைப்பிடிப்பது என்ற குழப்பம் இன்றுவரை நீடிக்கின்றது. அதே போன்று தமிழ்நாடு தனிப்பெரும் நிலப்பரப்பாக உருப்பெற்ற நவம்பர் முதல் நாளினை தமிழ்நாடு நாள் என கொண்டாடுவதை மாற்றி, ஜூலை 18ஐ தமிழ்நாடு நாள் என கொண்டாடுமாறு தவறாகத் திணித்துள்ளது திமுக அரசு.

தமிழர் பெருமை கொள்ளும் அடையாளங்கள் ஒவ்வொரு ஒவ்வொன்றிலும் இதுபோன்ற வரலாற்றுத் திரிபுகள் திட்டமிட்டுத் திணிக்கப்படுகிறதோ என்ற ஐயமும் எழுகிறது. தமிழினத்திற்கு பின்னந்தோன்றிய பல இனங்களும், வரலாற்று தகவல்கள் ஏதும் சரிவர கிடைக்கப்பெறாத இனங்களும்கூட தங்கள் இனத்தின் பெருமையை எவ்வித குழப்பமும் இன்றி தெள்ளத்தெளிவாக கொண்டாடி வரும் நிலையில், தமிழினத்தில் மட்டுமே காணப்படும் இத்தகு குழப்பநிலை மிகுந்த மன வருத்ததை தருகிறது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) அடிப்படையில் பெறப்பட்ட தகவலின்படி, சென்னைப் பல்கலைக்கழகத்தின் பண்டைய கால வரலாறு மற்றும் தொல்லியல் துறை, தமிழ்ப்பெரும்பாட்டன் அரசர்க்கரசன் அருண்மொழிச்சோழன் என்கின்ற இராஜராஜ சோழரின் பிறந்த ஆண்டை கி.பி.947 என உறுதிப்படுத்தியுள்ளது.

அதே போன்று தொல்லியல் துறை பரிந்துரை செய்த இராசராசன் துணுக்குகள் நூறு மற்றும் Indian Council of Historical Research பதிப்பகத்தில் வெளிவந்த நீலகண்ட சாஸ்திரி எழுதிய சோழர்கள் எனும் வரலாற்று நூலிலும் மாமன்னர் அருண்மொழிச் சோழன் அரியணை ஏறிய நாள் 25 ஜூன் 985 என தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐப்பசி சதய விழாவானது அருண்மொழிச் சோழன் பிறந்த கி.பி.947ஆம் ஆண்டிலிருந்து கணக்கிட்டு, தற்போது 1078வது சதய விழா என்பதற்கு மாறாக, அவர் பேரரசராக முடி சூட்டிய 985ஆம் ஆண்டிலிருந்து கணக்கிட்டு, நடப்பாண்டு 1040வது சதய விழா என்று தவறாக கொண்டாப்பட்டு வருவது ஏற்கவியலாத வரலாற்றுத் திரிபாகும். அறியாமையால் இதுவரை நடந்துவரும் தவறைத் திருத்தி, இனியேனும் சரியான ஆண்டினை கணக்கிட்டு சதய விழா எடுப்பதே உண்மையான புகழ் வணக்கமாக இருக்க முடியும். மாறாக தவறான கணக்கீடு அப்பெருமன்னனை அவமதிப்பு செய்வதாகவே இருக்கும்.

ஐப்பசி சதயம் என்பது பெரும்பாட்டன் அரசர்க்கரசர் அருண்மொழிச்சோழன் பிறந்த நாள், ஆண்டு, நேரத்தையே குறிப்பதாகும். ஒருவேளை பேரரசராக ஐப்பசி சதயம் அன்றே முடி சூடி இருந்தாலும்கூட அதுவும் பிறந்த நாளினை அடிப்படையாகக் கொண்டே ஏற்படுத்தப்பட்ட நிகழ்வாகவே இருக்க முடியும்.

மாமன்னர் அரேந்திரச்சோழர் எடுப்பித்த திருவாரூர் கல்வெட்டு, ‘அய்யர் பிறந்து அருளிய ஐப்பிகைச் சதயத் திருவிழா வரைவுக்குத் திருமுளையட்டவும், தீர்த்தத்துக்குத் திருச்சுண்ணம் இடிக்கவும், நாம் பிறந்த ஆடித் திருவாதிரை நாளில் திருவிழா வரைவு குருமுளையட்டவும், தீர்த்தத்துக்குத் திருச்சுண்ணம் இடிக்கவும்’ என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐப்பசி சதயத்தில் அருண்மொழிச் சோழரும், ஆடித் திருவாதிரை நாளில் அவரது அருமை மகன் பேரரசன் அரசேந்திரச் சோழரும் பிறந்தவர்கள் என்பதையும், பிறந்தநாள், ஆண்டினை அடிப்படையாக வைத்தே கோயில்களில் விளக்கேற்றவும், விழாக்கள் எடுக்கவும், உரிய தானங்கள் வழங்கப்பட்டதற்கு திருவாரூர் கல்வெட்டு உறுதியான வரலாற்றுச் சான்று பகர்கிறது. எனவே ஐப்பசி சதயம் என்பது பிறந்த நாளினை குறிப்பது என ஆதாரப்பூர்வமாக நிறுவப்பட்டுள்ளது.

ஆகவே, அரசர்க்கரசன் அருண்மொழிச்சோழன் பிறந்த ஆண்டு முதலே சதய விழாவினை கணக்கிட்டு அறிவித்து, அதனையே ஆண்டுதோறும் அனைவரும் கொண்டாடிட தமிழ்நாடு அரசு ஆவன செய்திட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி – திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியைச்…
அடுத்த செய்திவீரமிகு பாட்டன்கள் மருது பாண்டியர்கள் மாவீரத்தைப் போற்றும் மாபெரும் பொதுக்கூட்டம்!