சேலம் மாவட்டம், வில்லியம்பட்டியில் சட்டவிரோதமாக செம்மண் கடத்தப்படுவதைப் படம்பிடிக்கச் சென்ற நியூஸ் தமிழ் தொலைக்காட்சியின் செய்தியாளர் சிலம்பரசன் மற்றும் குழுவினர் மணல் கடத்தல் கும்பலால் தாக்குதலுக்கும், அச்சுறுத்தலுக்கும் உள்ளான செய்தியானது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. நாடறியப்பட்ட ஒரு தொலைக்காட்சியின் நேரலையில் பேசிக் கொண்டிருக்கும்போதே மக்களின் கண்முன்னே செய்தியாளர் தாக்குதலுக்கு உள்ளாகிறாரென்றால், இம்மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு என்ற ஒன்று இருக்கிறதா? எனும் கேள்விதான் எழுகிறது. உத்திரப்பிரதேசம் போன்ற வடமாநிலங்களில் நடைபெற்று வந்த இக்கொடுங்கோல் காட்சிகள் தமிழ்நாட்டிலும் அரங்கேறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
கருத்துரிமை, சனநாயகம், மக்களாட்சி என்றெல்லாம் நாளும் பேசி வாய்ப்பந்தல் போடும் திமுக அரசு, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை ஒட்டுமொத்தமாகச் சந்திச் சிரிக்கவிட்டு, கூலிப்படையினரையும், வளக்கொள்ளையர்களையும், சமூக விரோதிகளையும் ஆட்டம் போடவிட்டு வேடிக்கைப் பார்ப்பது வெட்கக்கேடானது. மாநிலம் முழுமைக்கும் அதிகார வர்க்கத்தின் துணையோடு, கொடிகட்டிப் பறக்கும் வரம்பற்ற வளக்கொள்ளையையும், அத்துமீறி அடாவடித்தனம் செய்யும் வளக்கொள்ளையர்களையும் தடுக்க வக்கற்ற ஆளும் திமுக அரசின் இழிநிலையே இதற்கு முழுமுதற் காரணமாகும்.
ஜகபர் அலியையும், ஜாகீர் உசேனையும், லூர்து பிரான்சிசையும் சமூக விரோதக் கும்பலுக்குக் காவுகொடுத்த திமுக அரசு, இனியும் திருந்தவில்லையென்றால் நடப்பது மக்களாட்சியா? வளவேட்டையர்களுக்கானக் காட்டாட்சியா?
– செந்தமிழன் #சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
#நாம்தமிழர்கட்சி