சிவகங்கை மாவட்டத்தில் அடுத்தடுத்த இரு பள்ளிக்குழந்தைகள் மர்மமான முறையில் மரணம்; உரிய நீதிவிசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொணர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

21

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் உள்ள ஜெஸ்ரில் தனியார் பள்ளியில் பயின்றுவந்த மாணவன் அஸ்வத் உடலில் படுகாயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த கொடுநிகழ்வும், அதேபோன்று சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகேயுள்ள ஆண்டிச்சியூரணியில் உள்ள புனித பெனடிக் பெண்கள் தங்கும் விடுதியில் ஒன்பதாம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த கொடுநிகழ்வும் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

ஏதுமறியா பிஞ்சு குழந்தைகளின் மரணங்கள் நெஞ்சை கனக்கச்செய்கிறது. அண்மைக்காலமாக தமிழ்நாட்டு கல்விக்கூடங்கள் கொலைக்களமாக மாறிநிற்பது வன்மையான கண்டனத்துக்குரியது.

திமுக ஆட்சியில் பொதுவெளியில் போதைப்பொருட்கள் புழக்கம் கட்டுக்கடங்காது அதிகரித்த நிலையில், பள்ளிச்செல்லும் குழந்தைகளும் டாஸ்மாக் மது உள்ளிட்ட போதைப்பொருட்கள் பயன்படுத்தும் கொடுமைகளும் அவ்வப்போது வெளியே தெரிய வருகின்றன. அதேபோன்று திமுக ஆட்சியில் பொதுவெளியில் பாலியல் வன்கொடுமைகள் அதிகரிக்கத் தொடங்கி, பள்ளிச்சிறுமிகள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாக்கப்படும் பெருந்துயரங்களும் அதிகளவில் நடக்கின்றன. அவற்றின் நீட்சியாக திமுக ஆட்சியில் பொதுவெளியில் அதிகரிக்க தொடங்கிய படுகொலைகளும், மர்ம மரணங்களும் தற்போது, பள்ளி வளாகத்தில் மாணவ மாணவியருக்கும் நேர்வதுதான் அக்கொடுமைகளின் உச்சமாகும்.

மக்களைக் காக்க வேண்டிய காவல் நிலையங்களே மக்களைக் கொல்லும் கொலைக்களங்களாக மாறிநிற்கிறது. நீதியைப் பெற்றுத்தர வேண்டிய அரசோ கொலை செய்யப்பட்ட குடும்பத்தினரிடம் கொல்லப்பட்ட உயிருக்கு பேரம் பேசுகிறது. அதன்விளைவுதான் நாட்டின் வருங்கால தூண்களாக மாணவச்செல்வங்கள் அடுத்தடுத்து மர்மமான முறையில் மரணிக்கும் பெருந்துயரங்கள் தமிழ்நாட்டில் நாளுக்குநாள் அதிகரிக்க காரணமாகும். தீய திராவிட மாடல் ஆட்சியில் ஒட்டுமொத்த சமூகமே குற்றச்சமூகமாக மாறிநிற்பதன் வெளிப்பாடே தொடர்ந்து நடைபெறும் பள்ளிக்குழந்தைகளின் மர்ம மரணங்களாகும்.

மாணவன் அஸ்வத் உடலில் படுகாயங்கள் இருப்பதும், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுவதும், குழந்தைகளின் மரணங்கள் மீதான சந்தேகத்தை அதிகரிக்கிறது.

ஆகவே, சிவகங்கை மாவட்டத்தில் அடுத்தடுத்த நாட்களில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள இரு குழந்தைகளின் மரணங்களுக்கான உண்மையான காரணம் குறித்து விரைவான நீதிவிசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொணர வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

பெற்றெடுத்து பேணி வளர்த்த குழந்தைகளை இழந்துவாடும் பெற்றொருக்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, எளிதில் ஆற்றமுடியாத பெருந்துயரில் பங்கெடுக்கின்றேன்.

https://x.com/Seeman4TN/status/1940631191935504489

– செந்தமிழன் #சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
#நாம்தமிழர்கட்சி

முந்தைய செய்திதிருவொற்றியூரில் தேங்கிய மழைநீரில் கசிந்த மின்சாரம் தாக்கி அன்புமகன் நவ்பில் உயிரிழக்கக்காரணமான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திநியூஸ் தமிழ் தொலைக்காட்சியின் செய்தியாளர் சிலம்பரசன் தாக்குதல்: நடப்பது மக்களாட்சியா? வளவேட்டையர்களுக்கானக் காட்டாட்சியா? – சீமான் கேள்வி