பன்னாட்டு சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி! விலையைக் குறைப்பதற்குப் பதிலாக, எரிகாற்று உருளை மற்றும் வாகன எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளது கொடுங்கோன்மை! – சீமான் கடும் கண்டனம்

12

பன்னாட்டு சந்தையில் மசகு எண்ணெய் விலை நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மிகப்பெரிய வீழ்ச்சியடைந்து, பீப்பாய் 61.59 அமெரிக்க டாலராக குறைந்துள்ள நிலையில், அதற்கேற்ப வாகன எரிபொருள் விலையைக் குறைப்பதற்குப் பதிலாக, எரிபொருள் மீதான கலால்வரியை இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு உயர்த்தியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. அதுமட்டுமின்றி வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிகாற்று உருளை விலையை 50 ரூபாய் உயர்த்தியுள்ளது சிறிதும் மனச்சான்றற்ற கொடுஞ்செயலாகும்.

மசகு எண்ணெய் விலை உயரும்போது எரிபொருள் விலையை உயர்த்துவதில் ஆர்வங்காட்டும் எரிஎண்ணெய் நிறுவனங்கள், விலை குறையும்போது எரிபொருள் விலையைக் குறைக்க ஒருபோதும் முனைப்பு காட்டுவதில்லை. இதனைக் கண்காணித்து, முறைப்படுத்த வேண்டிய இந்திய ஒன்றிய அரசு, வெறுமனே தேர்தல் நேரங்களில் மட்டும் விலையை உயர்த்தாமல் கட்டுப்படுத்திவிட்டு, மற்ற நேரங்களில் எண்ணெய் நிறுவனங்கள் பகல்கொள்ளையடிப்பதைக் கைகட்டி வேடிக்கை பார்ப்பது ஏற்க முடியாத கொடுஞ்செயலாகும்.

அதைவிடவும் பெருங்கொடுமை, மசகு எண்ணெய் விலைச்சரிவுக்கு ஏற்ப எரிபொருள் விலையைக் குறைக்க தவறியதோடு, தற்போது கலால் வரியை லிட்டருக்கு 2 ரூபாய் கூடுதலாக உயர்த்தி நாட்டு மக்களை பாஜக அரசு வாட்டி வதைப்பது கொடுங்கோன்மையாகும்.

இந்திய ஒன்றிய அரசின் கையிலிருந்த வாகன எரிபொருள் விலை நிர்ணய அதிகாரத்தை தனியார் எரிஎண்ணெய் நிறுவனங்களுக்குத் தாரைவார்க்கும் வகையில், கடந்த 2010ஆம் ஆண்டு சூன் மாதம் பெட்ரோல் விலை நிர்ணய உரிமையை காங்கிரசு அரசும், 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் டீசல் விலை நிர்ணய உரிமையை பாஜக அரசும் மொத்தமாகக் கையளித்ததன் விளைவே தற்போது மக்கள் சந்திக்கும் துயரங்களுக்கு அடிப்படை காரணமாகும்.

1200 ரூபாய் அளவிற்கு விற்ற சமையல் எரிகாற்று உருளையின் விலை கடந்த நாடாளுமன்றத்தேர்தலை முன்னிட்டுதான் 1000 ரூபாய்க்கு கீழாக குறைக்கப்பட்டது. தற்போது அதனை மீண்டும் 1000 ரூபாய் அளவிற்கு உயர்த்தும் முயற்சியில் பாஜக அரசு ஈடுபட்டுள்ளது இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தையும் மாதந்தோறும் பாதிக்கும் அறமற்ற செயலாகும்.

இத்தகு நெருக்கடியான நேரத்தில் கடந்த 2021 சட்டமன்றத்தேர்தலின்போது எரிகாற்று உருளைக்கு ரூபாய் 100 மானியம் வழங்குவோம் என்று கொடுத்த தேர்தல் வாக்குறுதியை, ஆட்சி முடியும் ஓராண்டே மீதமிருக்கும் நிலையில் தற்போதாவது திமுக அரசு நிறைவேற்றி பெண்களின் துயர்துடைக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

ஆகவே, இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு எரிபொருள் மீதான கலால் வரியை உயர்த்தும் கொடும் முடிவைக் கைவிட்டு, மசகு எண்ணெய் விலைச்சரிவுக்கு ஏற்ப எரிபொருள் விலையைக் குறைத்து நாட்டு மக்களுக்குச் சுமையைக் குறைக்க வேண்டுமன கோருகிறேன். அதோடு, சமையல் எரிகாற்று உருளையின் விலையை 50 ரூபாய் உயர்த்தும் முடிவையும் உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமெனவும், எரிபொருள் விலை நிர்ணய அதிகாரத்தை மீண்டும் இந்திய ஒன்றிய அரசே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.

https://x.com/Seeman4TN/status/1909512370008768971

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்தி‘சொல் தமிழா சொல்’ மாபெரும் பேச்சுப்போட்டி: சீமான் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்பு!
அடுத்த செய்திCrude Oil Price Plunge in International Market: Instead of Reducing Prices, Increasing the Price of Gas Cylinders and Fuel is a Tyranny! – Seeman