விடுதலைப் புலிகள் மீதான தடையை தமிழக அரசு ஆதரிப்பது நியாயமற்றது: நாம் தமிழர் கட்சி

43

சிங்கள பெளத்த இனவாத அரசின் தமிழின அழிப்பை தடுத்து நிறுத்த ஆயுதமேந்திப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது மத்திய அரசு விதித்துள்ள தடையை நீட்டிக்க தமிழக அரசு ஆதரவு தெரிவித்துள்ளது தமிழர் நலனுக்கு எதிரான நியாயமற்ற நடவடிக்கையாகும்.

சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்துள்ள மத்திய அரசு, அதற்காக கொடுக்கும் ஒரே விளக்கம் என்னவெனில், தமிழகத்தையும் இணைத்து அகண்ட தமிழீழம் அமைப்பதே விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நோக்கம் என்பதே. இது விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு அல்ல, மத்திய அரசே கண்டுபிடித்துக்கொண்ட பொய்யான காரணமாகும். தமிழீழம் என்பது இலங்கையில் வாழும் அனைத்துத் தமிழர்களுக்கும் உரிய தேசம் என்றுதான் விடுதலைப் புலிகள் பிரகடனம் செய்தனர். இதனை தமிழ்நாட்டையும் சேர்த்து அனைத்துத் தமிழர்களுக்குமானது தமிழீழம் என்று மத்திய அரசின் கற்பனை. அந்த அதீத கற்பனையையே காரணமாக்கி விடுதலைப் புலிகளை தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவித்தது.

எனவே மத்திய அரசு கூறியுள்ள காரணம் அடிப்படையற்றது, உண்மைக்குப் புறம்பானது.

தங்கள் தாயகத்தை மீட்கவும், சுதந்திரமாக தமிழர்கள் வாழவும் விடுதலையைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு வந்த பின்னர் தோன்றியதுதான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம். அது இலங்கைத் தமிழர்களின் பிள்ளைகளால் உருவாக்கப்பட்ட இயக்கம். அந்த இயக்கத்தை அழித்து தமிழர்களை அடிமைப்படுத்தவே இந்திய மத்திய அரசின் ஆதரவுடன் தமிழர்கள் மீது இன அழிப்புப் போரை ராஜபக்ச அரசு தொடுத்தது. ஒன்றே முக்கால் இலட்சம் தமிழர்களை கொன்றொழித்தது. விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழித்தொழித்துவிட்டதாகவும் அறிவித்தது.

இன்றைக்கு அந்த இயக்கத்தின் பாதுகாப்பு இல்லாத நிலையில், தமிழர்களின் தாயகமான தமிழீழத்தின் மீது சிங்கள பெளத்த இனவெறி அரசு அடக்குமுறையை ஏவி, தமிழினத்தை முற்றிலுமாக அழித்து வருகிறது. கடத்தல், கற்பழிப்பு, கொலை, தமிழரின் நிலங்கள் பறிப்பு, சிங்கள குடியேற்றம், இராணுவ மயமாக்கல் என்று தமிழர்களின் தாயக மண்ணை எல்லா விதத்திலும் சூறையாடி வருகிறது இலங்கை அரசு. விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் இப்படி நடக்குமா? அன்றைக்கு போர் நடந்தது அதனால் ஈழத் தமிழர்கள் அகதிகளாக தமிழ்நாட்டிற்கு வந்தார்கள். இன்றுதான் அங்கு போர் நடக்கவில்லையே, அப்படி இருந்தும் தமிழர்கள் அகதிகளாக வருகின்றனரே ஏன்? காரணம் சிங்கள பெளத்த இனவாத அரசு கட்டவிழித்துவிட்டுவரும் அரச பயங்கரவாதம். தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்திய அரசும் கண்மூடித்தனமாக ஆதரிக்கிறது.

தமிழர்களுக்கு இருந்த ஒரே பாதுகாப்பும் இந்திய அரசின் ஆதரவுடன் அழிக்கப்பட்டதால் இன்றைக்கு இந்தியாவின் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தல் ஏற்படும் அளவிற்கு சீனா அங்கு அழுத்தமாக காலை ஊன்றிவிட்டது. இந்தியாவின் பாதுகாப்பிற்காகவே இலங்கை அரசு நடத்திய போருக்கு உதவியதாக கூறிய அந்த இராஜதந்திரம் என்ன ஆனது? இந்தியாவின் பாதுகாப்பிற்கே உலை வைத்துவிட்டது.

உண்மையும் எதார்த்த நிலையும் இவ்வாறிக்க, இன்னமும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீட்டிக்க வேண்டும் என்று பழைய வன்மத்துடன் மத்திய அரசு கூறுவதும் அதனை தமிழக அரசு ஆதரிப்பதும் அர்த்தமற்ற நடவடிக்கையாகும். 2009ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பரப்புரை செய்த இன்றைய முதல்வர், தமிழீழம் அமைவதே இலங்கைத் தமிழர்களுக்கு ஒரே பாதுகாப்பு என்று கூறினாரே. தேவைப்பட்டால் இந்திய இராணுவத்தையே அனுப்பி அதனை நிறைவேற்றுவேன் என்றும் கூறினாரே. அதே இலக்கை எட்டுவதற்காகத்தானே பல்லாயிரக்கணக்கான இளம் வீரர்களையும், வீராங்கனைகளையும் தியாகம் செய்து விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம். அப்படிப்பட்ட ஒரு இயக்கத்தை தடை செய்வது என்பது தமிழர்களை அவமானப்படுத்தும் செயல் அல்லவா? தமிழர்களை ஒடுக்கிவரும் ராஜபக்ச அரசுக்கு ஆதரவான நடவடிக்கையல்லவா? ஒரே நேரத்தில் தமிழினத்தின் விடுதலைக்காகவும், அதனை ஒடுக்கும் நடவடிக்கைக்கும் ஆதரவளிப்பது இரட்டை நிலையல்லவா?

தமிழீழத்தின் மூன்றில் ஒரு பகுதி – அதாவது 8,000 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பு இன்று சிங்கள இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் இருக்கிறது என்று அந்நாட்டு நாடாளுமன்றத்திலேயே ஆதாரப்பூர்வமாக தமிழர் உறுப்பினர் குற்றம் சாட்டியுள்ளாரே? அங்கு வாழ்ந்த தமிழர்களின் கதியென்ன? 90 ஆயிரம் விதவைகளுடன், வாழ வழியின்றியும், எதிர்காலம் இருண்டும் ஈழத் தமிழினம் நொண்டியடித்துக்கொண்டிருக்கிறது. இதற்கு மேலும் அங்கு தமிழின அழிப்பு தொடர வேண்டும் என்பதுதான் மத்திய காங்கிரஸ் அரசின் நிலைப்பாடு. அதனால்தான் அது இலங்கை அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்டும் காணாததுபோல் இருக்கிறது. தமிழக அரசின் நிலையும் அதுதானா? அவர்களின் நல்வாழ்விலும் எதிர்காலத்திலும் அக்கறையற்றதா தமிழக அரசு?

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான இந்தத் தடையின் காரணமாகவே இலங்கைத் தமிழர்கள் அனைவரும் பயங்கரவாதிகளாக பார்க்கப்படுகின்றனர். உயிரைக் காப்பாற்றிக்கொள்ளவும், எதிர்காலத்தை தேடிக்கொள்ளவும் எந்த நாட்டிற்கு அகதிகளாகச் சென்றாலும் அவர்கள் பயங்கரவாதிகள் என்று கூறி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். கடல் மூலம் பெரும்பாடுபட்டு இராமேஸ்வரம் கரைக்கு வந்த ஈழத் தமிழர் குடும்பம் ஒன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறது. ஈழத் தமிழச்சியின் கருவில் இருக்கும் குழந்தையைக் கூட பயங்கரவாதியாகவே பார்க்கப்படுகிறது. அதனால்தான் இங்கும் சிறப்பு முகாம்கள் இன்றும் இருக்கின்றன. இந்த அவல நிலை ஒழிய வேண்டுமானால் விடுதலைப் புலிகளின் மீதான தடை அகற்றப்பட வேண்டும்.

இலங்கைத் தீவைப் பொறுத்தவரை தமிழர்களின் பாதுகாப்பு என்பது, அவர்களின் விடுதலைக்காக அளப்பரிய தியாகம் செய்துப் போராடிவந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் மட்டுமே உறுதி செய்ய முடியும் என்கிற உண்மையை உணர்ந்து, புலிகள் மீதான தடையை விலக்கிக்கொள்ளுமாறு மத்திய அரசை தமிழக அரசு வற்புறுத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.

முந்தைய செய்திகூடங்குளம் போராட்டத்தை தூண்டுவது அந்நிய சக்திகளா? பிரதமர் கூற்றுக்கு கண்டனம்: நாம் தமிழர் கட்சி
அடுத்த செய்திதிருநெல்வே​லி அரசு சித்தவைத்தி​ய மருத்துவமனை​யின் அங்கீகாரத்​தை அரசு ரத்து செய்ததை கண்டித்து உண்ணாவிரதம் இருந்து வரும் முதலாம் ஆண்டு மாணவர்களை நாம் தமிழர் கட்சி ஆதரவு – நிழற்படங்கள் இணைப்பு!!