முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

கற்றணைத் தூறும் அறிவு என்றான் வள்ளுவப் பெரும்பாட்டன்! அறிவொன்றே தெய்வம்…

0

கற்றணைத் தூறும் அறிவு என்றான் வள்ளுவப் பெரும்பாட்டன்!

அறிவொன்றே தெய்வம் என்றான் பாட்டன் பாரதி!

'புனிதமுற்று மக்கள் புது வாழ்வு வேண்டில்
புத்தகசாலை வேண்டும் நாட்டில் யாண்டும்' என்றான் தாத்தா பாவேந்தர் பாரதிதாசன்!

ஒரு புத்தகத்தைத் திறக்கும்போது உலகினை நோக்கிய ஒரு சாளரத்தை திறக்கிறோம் என்றார் சிந்தனை சிற்பி ஐயா சிங்கார வேலர்!

மனிதனின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு புத்தகம் என்றார் ஆல்பிரட் ஐன்ஸ்டின்!

புரட்சிப்பாதையில் கைத்துப்பாக்கிகளைவிட பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே என்றார் புரட்சியாளர் லெனின்!

உலகின் மிகப்பெரிய தனிமனித நூலகத்தை உருவாக்கிய அறிவாசான் அண்ணல் அம்பேத்கர் நூலகம் அருகில் குடியிருப்பதையே வழக்கமாகி கொண்ட பெருந்தகை!

புத்தகங்கள் என்பது தொட்டுப் பார்த்தால் வெறும் காகிதம்; தொடர்ந்து படித்தால் அதுவே பேராயுதம்!

தலைகுனிந்து படித்தவன் உலகில் தலைநிமிர்ந்து நிற்கிறார்!

முகத்தைச் சீர் செய்ய கண்ணாடி;
அகத்தைச் சீர் செய்ய புத்தகம்!

சிந்தனையின் சாளரங்களும், கதவுகளும்
புத்தகங்களால்தான் திறக்கப்படுகின்றன!

அவ்வகையில் பரந்து விரிந்து கிடக்கும் அறிவுக்களஞ்சியமாக நம் கண்முன்னே காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு நேரில் சென்று கிடைத்தற்கரிய புத்தகங்களை வாங்கி வந்தேன்.

மக்களாட்சி பாதையில்
தடம் மாறா தமிழ்த்தேசிய அரசியல் களத்தில் கருத்தியல் யுத்தம்தான் மிக மிக இன்றியமையாதது.

அறிவை விரிவாக்கு என்பதே நம்முடைய கொள்கை முழக்கத்தின் முதல் வரி!
எனவே, என்னருந் தமிழிளந்தலைமுறை பிள்ளைகள் சுவாசிப்பதைப் போல வாசிப்பதை வழக்கமாகி கொள்ள வேண்டும். அதற்கு ஆகப்பெரும் வாய்ப்பாக தற்போது சென்னையில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சி அமைந்துள்ளது .

எனவே வருகின்ற 12.01.2025 வரை நடைபெறவிருக்கும் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு என்னரும் தம்பி-தங்கைகள் ஒவ்வொருவரும் அவசியம் சென்று,
பூக்களில் தாவி தாவி
தேன் தேடும் தேனீக்கள் போல அறிவுச்செறிவூட்டும் நல்ல புத்தகங்களைத் தேடி தேடி வாங்கி சேகரித்து வாசித்து, தர்க்க வாதத்தில் தலைசிறந்தவர்களாகத் தங்களை வளர்த்துக்கொள்ள வேண்டுமென அன்புடன் அறிவுறுத்துகிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஅன்புத்தம்பி எழுத்தாளர் பாலமுரளிவர்மன் அவர்கள் தொகுத்துள்ள தமிழ்த்தேசியம் ஏன்? எதற்கு?…
அடுத்த செய்தி‘தமிழ்த்தேசியம் ஏன்? எதற்கு? எப்படி?’ – நூல் வெளியீட்டு விழா!