பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற இந்திய அளவிலான கபடி போட்டியில் புள்ளிகள் முறையாக வழங்கப்படவில்லை என நடுவர்களிடம் முறையிட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த கபடி வீராங்கனைகளைப் போட்டி நடுவரே கடுமையாகத் தாக்கியிருப்பது பெரும் அதிர்ச்சியும், மிகுந்த சீற்றத்தையும் ஏற்படுத்துகிறது. கபடி விதிகளைக் கூறி நியாயம் கேட்ட தமிழ்நாட்டுப் பிள்ளைகள் மீது கொடுந்தாக்குதல் நடத்தியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.
ஏற்கனவே, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற இந்திய அளவிலான கபடி போட்டியில் புள்ளிகள் முறையாக வழங்கப்படவில்லை என நடுவர்களிடம் முறையிட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த கபடி வீரர்கள் மீது வடநாட்டு வீரர்கள் கடுமையாகத் தாக்குதல் நடத்தியதோடு, தமிழ்நாட்டிற்குத் திரும்பிச்செல்லுங்கள் என்றுகூறி அவமதித்திருந்தனர்.
அதனை அப்போதே நான் கடுமையாகக் கண்டித்ததோடு, தமிழ்நாடு அரசு அது குறித்து உரிய விசாரணை நடத்தி, தாக்குதல் தொடுத்தவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தேன். தமிழ்நாட்டு கபடி வீரர்கள் மீதான அத்தாக்குதலை திமுக அரசு அலட்சியம் செய்ததன் விளைவே தற்போது மீண்டும் ஒரு தாக்குதல் நம் பிள்ளைகள் மீது நிகழ்த்தப்பட்டுள்ளது.
விளையாட்டில் கூட உரிமையைக் கேட்க முடியாதபடி தமிழ்நாட்டுப் பிள்ளைகள் அடித்து விரட்டப்படுவார்கள் எனில் எங்கே இருக்கிறது ஒருமைப்பாடு? எப்படி வரும் நாட்டுப்பற்று? இந்திய ஒற்றுமை, தேசபக்தி பன்முகத்தன்மை, இறையாண்மை என்றெல்லாம் பாடமெடுப்பவர்கள் இப்போது வாய் திறப்பார்களா?
தமிழ்நாட்டு கபடி வீராங்கனைகள் மீது நடத்தப்பட்ட கொடுந்தாக்குதலுக்கு தமிழ்நாடு அரசு, இப்போதாவது தமது கடும் கண்டனத்தைப் பதிவு செய்வதுடன், உரிய விசாரணை நடத்தித் தாக்குதல் நடத்தியவர் மீது சட்டப்படி தண்டனை பெற்றுத்தர விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
https://x.com/Seeman4TN/status/1882757197018575260
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி