முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

ஈரோடு மாவட்டம், சென்னிமலையின், செ.மேலப்பாளையம் எனும் சிற்றூரில் எளிய நெசவாளர்…

0

ஈரோடு மாவட்டம், சென்னிமலையின், செ.மேலப்பாளையம் எனும் சிற்றூரில் எளிய நெசவாளர் குடும்பத்தில் பிறந்து, அடிமைப்பட்டுக்கிடந்த தாய் நாட்டின் விடுதலைக்காகப் போராடி உயிர்நீத்த போராளி!

விடுதலை உணர்ச்சியைத் தட்டி எழுப்பும் எழுச்சிமிக்க நாட்டுப்பற்றுப் பாடல்களை வீதியெங்கும் பாடி விடுதலை வீரர்களை அணிதிரட்டிய கொள்கையாளர்!

1932ம் ஆண்டு சனவரி 10ஆம் நாளன்று நாடெங்கும் நடைபெற்ற மாபெரும் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட முனைந்த போராளிகளை ஆங்கிலேய அரசு கைது செய்த நிலையில், ஆங்கிலேயரின் ஒடுக்குமுறைகளை ஊடறுத்து, தமிழ்நாட்டின் திருப்பூரில் நடைபெற்ற பேரணியில் இந்தியத் தேசியக் கொடியை ஏந்தி விடுதலை முழக்கமிட்ட தீரர்!

ஆங்கிலேய காவல்துறையினர் தடியடி நடத்தி போராட்டத்தைக் கலைக்க முயன்றபோதும், உயிர்போகும் அளவுக்கு கொடுந்தாக்குதல் தொடுத்தபோதும் ஏந்திய கொடியை தரையில் தாழவிடாது தன் இறுதிமூச்சு வரை உயர்த்திப் பிடித்த மாவீரர்!

இந்திய விடுதலை வரலாற்றில் 'கொடிகாத்த குமரன்' என்று போற்றப்பட்ட நமது ஐயா நா.குமாரசாமி (எ) திருப்பூர் குமரன் அவர்களின் 120ஆம் ஆண்டு பிறந்தநாளில் பெருமிதத்தோடு நம் புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்!

ஐயா பிறந்து, வாழ்ந்த ஊரான சென்னிமலையில் அவரது நினைவு மண்டபம் கட்ட வேண்டும் என்கிற மக்களின் நெடுநாள் கோரிக்கை, இந்திய நாடு விடுதலைப்பெற்று 75 ஆண்டுகளைக் கடந்துவிட்டபோதிலும், தேசியக் கட்சிகளும், திராவிடக் கட்சிகளும் தமிழ்நாட்டை ஆண்டுவிட்டபோதிலும், இன்றுவரையிலும் நிறைவேற்றப்படாமலேயே இருப்பது வரலாற்றுப் பெருந்துயரம்!

@CMOTamilnadu @mkstalin

எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக இக்கோரிக்கையை ஏற்று சென்னிமலையில் திருப்பூர் குமரன் நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என இவ்வறிக்கையின் வாயிலாக வலியுறுத்துகிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஎன் உயிருக்கினிய நாம் தமிழர் உறவுகளுக்கு அன்பு வணக்கம்! தமிழ்நாடு…
அடுத்த செய்திசிலம்புச்செல்வர் மா.பொ.சிவஞானம் அவர்களின் 29ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி சீமான் மலர்வணக்கம்!