பன்னாட்டு நிறுவனங்கள் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்குத் தரப்படுவது வேலை வாய்ப்பா? அல்லது கொத்தடிமைக்கான வாய்ப்பா? – சீமான் கேள்வி

11

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் இயங்கிவரும் பன்னாட்டு நிறுவனமான ‘சாம்சங்’ தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் 8 மணி நேர வேலை, ஊதிய உயர்வு, தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளைக் கேட்டு, கடந்த ஒரு வார காலமாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அவர்களின் கோரிக்கையை சாம்சங் நிர்வாகம் ஏற்க மறுப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.

சாம்சங் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி, தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளைப் பெற்றுத்தர வேண்டிய தமிழ்நாடு அரசு, அதனைச் செய்யத்தவறியதுடன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கச்சென்ற சாம்சங் தொழிலாளர்களை காவல்துறையை ஏவி கைது செய்ததுடன், அவர்களின் குடும்பத்தினரை மிரட்டுவதென்பது எதேச்சதிகாரத்தின் உச்சமாகும். உரிமைக்காகப் போராடும் நம்முடைய தொழிலாளர்களின் பக்கம் நிற்காமல், பன்னாட்டுத் தனியார் பெருநிறுவனத்திற்கு ஆதரவாக நின்று, அதன் தொழிலாளர் விரோதப்போக்கிற்கு திமுக அரசு துணைபோவது வெட்கக்கேடானது.

பல்லாயிரம் கோடிகள் அந்நிய முதலீடு, பல இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு என்று பொய் விளம்பரம் செய்யும் திமுக அரசு, பன்னாட்டு நிறுவனங்களில் பணி புரியும் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? தாராளமான நிலம், தடையற்ற மின்சாரம், வேண்டிய அளவு நீர், பல கோடி வரிச் சலுகை என்று வாரி வழங்கி பன்னாட்டு நிறுவனங்களிடம் ஒப்பந்தம்போடும் திமுக அரசு, நம் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று எவ்வித ஒப்பந்தமும் இதுவரை போடாதது ஏன்? நிரந்தரப் பணி, முறையான ஊதியம், உரியப் பணிநேரம் என்று இவற்றில் எது ஒன்றையும் தர மறுத்து, பன்னாட்டு நிறுவனங்கள் தமிழர்களுக்குத் தருவது வேலை வாய்ப்பா? அல்லது கொத்தடிமைக்கான வாய்ப்பா? தொழிலாளர்கள் தங்களின் உரிமைக்காக ஒன்றுபட்டுப் போராட அமைக்கப்படுவதுதான் தொழிற்சங்கம். ஆனால், அத்தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையைக்கூட பன்னாட்டு நிறுவனங்கள் அனுமதிப்பதில்லை என்பதையெல்லாம் தமிழ்நாடு அரசால் எப்படி வேடிக்கை பார்க்க முடிகிறது? இதுதான் அந்நிய முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாட்டினை வளப்படுத்தும் திராவிட மாடல் அரசின் சாதனையா? என்ற கேள்வியும் எழுகிறது.

ஆகவே, தமிழ்நாடு அரசு காஞ்சிபுரம் ‘சாம்சங்’ தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் கோரும் அறப்போராட்டத்தை அடக்கி ஒடுக்குவதைக் கைவிட்டு, கைது செய்யப்பட்ட தொழிலாளர்கள் அனைவரையும் எவ்வித வழக்கும் பதியாமல் உடனடியாக விடுவிக்க வேண்டும். அதோடு, ‘சாம்சங்’ நிறுவனத்திடம் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி, தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றித்தர வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசினை இவ்வறிக்கையின் வாயிலாக வலியுறுத்துகிறேன்.

https://x.com/Seeman4TN/status/1835886310013227079?t=6kfUrPviDk2VniJbW9OFGA&s=19

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதானி ஓட்டுநர் தம்பி பாதகுமார் மரணத்திற்கு காரணமான காவல்துறையினர் மீது கொலைவழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திபுதுக்கோட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2024!