திருமூர்த்தி அணையிலிருந்து பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத்திற்குத் தேவையான நீரினை உடனடியாகத் திறந்துவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

8

மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்து, மேற்கு நோக்கி ஓடி, கேரள கடற்கரையில் கலந்து வீணாகி வந்த மழைநீரைத் தேக்கி பாசனத்திற்குப் பயன்படுத்த பெருந்தலைவர் காமராசர் அவர்களால் 1958இல் தொடங்கப்பட்ட பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டம் 1960ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. இத்திட்டத்தின்படி பெரியாற்றுப் படுகையைச் சேர்ந்த ஆனமலையாறு, சோலையாறு, பரம்பிக்குளம் மற்றும் ஆழியாறு ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்ள தமிழ்நாட்டிற்கும், கேரளத்திற்கும் ஒப்பந்தமாகி தமிழகத்திற்கு 30 டிஎம்சி நீரும் கேரளத்திற்கு 20 டிஎம்சி நீரும் ஒதுக்கப்பட்டது.

10 அணைகள், 6 முக்கியச் சுரங்கங்கள், 7 நீர்ப்பாசன கால்வாய்கள் மற்றும் 4 மின் உற்பத்தி நிலையங்களை உள்ளடக்கிய பெருந்திட்டமான பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தை 2 ஆண்டுகளில் செயல்படுத்திய பெருந்தலைவரின் பெருமுயற்சியால் வறண்டு கிடந்த கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களின் 4.25 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் இன்றுவரை பாசனவசதியைப் பெற்று வருகின்றன. ஆனால் ஐம்பதாண்டுகால திராவிடக் கட்சிகளின் ஊழல் நிறைந்த ஆட்சியில் பாசன நீர்வழித்தடங்கள் முறையாகப் புனரமைக்கப்படாத காரணத்தால் பரம்பிகுளம் அணைக்கான நீர்வரத்து வெகுவாகக் குறைந்தது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை இறுதி வாரத்தில் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனப்பகுதிகளுக்கு தண்ணீர் திறக்கப்படும் நிலையில், நடப்பாண்டில் திமுக அரசின் மெத்தனத்தால் ஆகஸ்ட் இரண்டாவது வாரம் தொடங்கியும் இதுவரை நீர் திறக்கப்படவில்லை. முக்கியக் கால்வாய்களான சமமட்ட கால்வாய், சர்க்கார்பதி கால்வாய் ஆகியவற்றின் பராமரிப்பு பணியை திமுக அரசு விரைந்து முடிக்காததே தண்ணீர் திறக்கப்படாததற்கு முக்கிய காரணம் என வேளாண் பெருங்குடி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் நடப்பாண்டில் நல்ல மழை பெய்து அணைகளில் போதிய அளவில் நீர் நிரம்பியும் அரசின் அலட்சியத்தால் வேளாண்மை பொய்த்துப்போகுமோ என்று விவசாயிகள் அச்சத்தில் தவித்து வருகின்றனர்.

ஆனால், எதிர்க்கட்சிகள் பொய் கூறுவதாகவும், விரைவில் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனப் பகுதிகளுக்கு நீர் திறக்கப்படும் என்றும் திமுக அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ஐயா சாமிநாதன் அவர்கள் அறிவித்து ஒரு வாரத்திற்கு மேலாகியும் இதுவரை உரியப் பாசன நீர் திறக்கப்படாதது ஏன்? பாசன கால்வாய் மராமத்து பணிகளைக்கூட உரிய காலத்தில் முடிக்க முடியாத அரசிற்குப் பெயர்தான் திராவிட மாடல் அரசா? என்ற கேள்வியும் எழுகிறது.

ஆகவே, வேளாண் பெருங்குடி மக்களின் வேதனையைப் போக்கும் வகையில் திருமூர்த்தி அணையிலிருந்து பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனப்பகுதிகளுக்குத் தேவையான நீரினை உடனடியாகத் திறந்துவிட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன்.

https://x.com/Seeman4TN/status/1821900419569782867

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஉலக பழங்குடியினர் நாள் – 2024: சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்!
அடுத்த செய்திஆயிரம் ரூபாய் அரசுக்கு ஃபார்முலா4 மகிழுந்து பந்தயம் அவசியம்தானா? – சீமான் கேள்வி