எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்திற்குள் காவல்துறையின் அத்துமீறிய சோதனை அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை! – சீமான் கடும் கண்டனம்

24

செங்கல்பட்டு மாவட்டம், பொத்தேரியில் அமைந்துள்ள எஸ்,ஆர்,எம், பல்கலைக்கழக வளாகத்திற்குள் இன்று (31.08.2024) அதிகாலை ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினரைக் குவித்து திமுக அரசு அத்துமீறி சோதனை நடத்தியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.

கல்வி வளாகத்திற்குள் ஆயிரக்கணக்கான காவல்துறையினரைக் குவித்து, சோதனை நடத்துவதென்பது படிக்கும் மாணவர்களிடம், பெற்றோர்களிடம் தேவையற்ற பதற்றத்தையும், பயத்தையும் ஏற்படுத்தி அவர்களைக் கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கும் கொடுஞ்செயலாகும்.

தமிழ்நாட்டில் கட்டுக்கடங்காத போதைப்பொருள் விற்பனையைத் தடுக்கத் திறனற்ற திமுக அரசு, கஞ்சா பயன்படுத்துவோரை பிடித்ததாகக் கூறி தொடர்ச்சியாக அரசின் தவறுகளை விமர்சிப்போர் மீதும், மாற்று அரசியல் கருத்துடையோர் மீதும் பொய் வழக்கு புனைந்து கைது செய்து வருகிறது. அத்தகைய தரம் தாழ்ந்த அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியே எஸ்.ஆர்.எம் கல்வி வளாகத்திற்குள் தற்போது நடத்தப்பட்டுள்ள சோதனையுமாகும்.

சென்னையில் குறிப்பிட்ட ஒரு கல்லூரி மாணவர்கள் மட்டும்தான் கஞ்சா பயன்படுத்துகின்றனரா? மற்ற கல்லூரி வளாகங்களில் பயன்படுத்தவில்லையா? இதுவரை அங்கெல்லாம் சோதனை நடத்தாதது ஏன்? குறிப்பாக ஆளுங்கட்சியினர் நடத்தும் கல்லூரிகளில் ஒருமுறை கூட இதுபோன்ற சோதனைகள் நடத்தப்பட்டதே இல்லையே ஏன்? கஞ்சாவை மாணவர்கள் என்ன சொந்தமாக விளைவித்தா பயன்படுத்துகிறார்கள்? போதைப்பொருள் பயன்படுத்தியதாக கற்கும் மாணவர்களை அத்துமீறி கைது செய்துள்ள காவல்துறை, அங்கு விற்றவர்கள் எத்தனை பேரை இதுவரை கைது செய்துள்ளது..?

போதைப்பொருளை வாங்கிப் பயன்படுத்துவோருக்கு அரசு கடும் தண்டனை அளிக்கிறது. ஆனால், பல்லாயிரம் கிலோ கஞ்சாவை உள்நுழைய விட்டு, விற்பனையைத் தடுக்கத்தவறிய ஆட்சியாளர்களுக்கு என்ன தண்டனையளிப்பது? யார் தண்டனை அளிப்பது?

மாணவர்கள் மீது இத்தனை அக்கறை கொண்டு அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான காவல்துறையைக் குவித்து சோதனைபுரியும் திமுக அரசு, டாஸ்மாக்கில் சீருடையுடன் மது வாங்கி குடித்துச் சீரழியும் பள்ளிக் கல்லூரி மாணவர்கள் மீது அக்கறைகொண்டு மதுக்கடைகளை மூட மறுப்பது ஏன்? கஞ்சா மட்டும்தான் போதைப்பொருளா? தமிழ்நாடு அரசின் டாஸ்மாக்கில் விற்கப்படும் மது திராவிட மாடல் புனிதத் தீர்த்தமா என்ன?

தலைநகர் சென்னையில் கஞ்சா புழங்குவதாகக் கூறப்படும் அனைத்து கல்லூரி வளாகங்களிலும் ஒரே நேரத்தில் இதுபோன்ற சோதனைகள் நடத்தப்பட்டிருந்தால், உண்மையிலே மாணவர்கள் மீது அக்கறை கொண்டு அரசு நடவடிக்கை எடுக்கிறது என்பதை நம்பலாம். ஆனால், குறிப்பிட்ட ஒரு கல்லூரியை மட்டும் குறிவைத்து அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகத் தொடுக்கப்படும், திமுக அரசின் இத்தகைய அதிகார அத்துமீறல்கள் யாவும் பல்கலைக்கழகத்தின் நற்பெயரைக் கெடுக்கவும், அதன் நிர்வாகத்தலைமையை மிரட்டவும் பயன்படுத்தப்படும் மலிவான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையேயாகும்.

இந்தியா மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளின் மாணவ மாணவியர் தமிழ்நாட்டிற்குத் தேடி வந்து படிக்கின்ற, உலகப்புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் திமுக அரசு மேற்கொண்ட இத்தகைய அத்துமீறல்களால் புதிதாக மாணவர்கள் இனி எப்படி சேர முன்வருவார்கள்? ஏற்கனவே அங்குப் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களின் மனநிலை இதனால் சிதையாதா? எப்போது காவல்துறையினர் வருவார்களோ என்று ஒவ்வொரு நாளும் பதற்றத்திலேயே இருக்க மாட்டார்களா? இனி அவர்களால் கல்வியை நிம்மதியாக எப்படி தொடர முடியும்?

ஆகவே, மாணவர்கள் கல்வியைப் பாதிக்கும் இதுபோன்ற அரசியல் அடக்குமுறைகளைக் கைவிட்டு, உண்மையிலேயே போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தி இளைய தலைமுறையைக் காக்க வேண்டுமென்ற அக்கறை திமுக அரசிற்கு இருக்குமாயின், கிலோ கணக்கில் போதைப்பொருட்களைக் கடத்துவோர் மீதும், விற்போர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

முந்தைய செய்திநிலவுரிமையை காக்க போராடும் ஏகனாபுரம் மக்கள் மீது பொய் வழக்கு புனைவதை திமுக அரசு கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திதூத்துக்குடியில் தனியார் உரத் தொழிற்சாலையில் இருந்து அம்மோனியா நச்சுப்புகைக் கசிவு: கடும் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசை சீமான் வலியுறுத்தல்!