முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

பழனி ஆயக்குடியில் கிராம நிர்வாக அலுவலரைக் கொலை செய்ய முயன்ற…

0

பழனி ஆயக்குடியில் கிராம நிர்வாக அலுவலரைக் கொலை செய்ய முயன்ற திமுக மணற்கொள்ளையர்களை விரைந்து கைது செய்ய வேண்டும்!

@CMOTamilnadu @mkstalin

திண்டுக்கல் மாவட்டம் ஆயக்குடியில் மணல் கடத்தலைத் தடுக்கச் சென்ற கிராம நிர்வாக அலுவலரை மணற்கொள்ளையர்கள் பார உந்தினை ஏற்றி படுகொலை செய்ய முயன்ற நிகழ்வு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டில் நேர்மையான அரசு அதிகாரிகளின் உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என்பது சட்டம் ஒழுங்கு முற்றாகச் சீரழிந்துள்ளதையே காட்டுகிறது.

பழனி அருகே ஆயக்குடி பொன்னிமலைசித்தன் கரடு பகுதியில் மணல் கடத்தப்படுவதாகப் பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில், கிராம நிர்வாக அலுவலர் கருப்புசாமி மற்றும் அவரது உதவியாளர் மகுடிஸ்வரன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்ததில் திமுக நிர்வாகிகள் சக்திவேல், பாஸ்கர் ஆகியோர் கட்டுப்பாட்டில் பார உந்தில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவது உறுதியானது. இதனையடுத்து, மணல் கடத்தலில் ஈடுபட்ட திமுகவினரை ஆயக்குடி காவல்நிலையத்தில் ஒப்படைக்க அழைத்துவந்தபோது, கிராம நிர்வாக அலுவலர், அவரது உதவியாளர் மற்றும் இரு காவலர்கள் என நான்கு பேர் மீதும் மணற் கொள்ளையர்கள் பாரவுந்திணை ஏற்றியும், அவர்களது இருசக்கர வாகனத்தின் மீது மணலை கொட்டியும் படுகொலை செய்ய முயன்றுள்ளது திமுக ஆட்சியில் மணற்கொள்ளையர்கள் எந்த அளவிற்கு அச்சமின்றி சுதந்திரமாகச் செயல்படுகின்றனர் என்பதற்குத் தக்கச் சான்றாகும்.

கடந்த ஏப்ரல் மாதம் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்ஸிஸ் மணற்கொள்ளையைத் தடுத்ததற்காக அவரது அலுவலகத்திலேயே மணற்கொள்ளையர்களால் பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அக்கொடூர நிகழ்வின் வடு மறைவதற்குள், கடந்த மே மாதம் திருச்சி மாவட்டம் துறையூரில் செம்மண் கொள்ளையைத் தடுத்து நிறுத்தியதற்காக வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் மீது திமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்றத்தலைவர் மகேசுவரன் மற்றும் தனபால், மணிகண்டன், கந்தசாமி உள்ளிட்ட நால்வர் கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். இவ்விரு நிகழ்வையும் கடுமையாகக் கண்டித்து மணற் கொள்ளையர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரியும், தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கட்டுக்கடங்காமல் நடைபெறும் மணற்கொள்ளையைத் தடுக்கக்கோரியும் நான் அறிக்கை வெளியிட்டு வலியுறுத்தியிருந்தேன். ஆனால், அதன் பிறகும் மணல் கடத்தலை தடுக்க எவ்வித முயற்சியும் செய்யாமல், மணற்கொள்ளையில் ஈடுபடும் தனது கட்சியினருக்கு ஆதரவாக திமுக அரசு செயல்பட்டதன் விளைவே தற்போது பழனி அருகே ஆயக்குடியில் மணல் கடத்தலை தடுக்கச் சென்ற கிராம நிர்வாக அலுவலரைக் கொலை செய்ய முயற்சிக்கும் அளவிற்கு மணற் கொள்ளையர்களுக்குத் துணிச்சலைத் தந்துள்ளது.

ஆளுங்கட்சி என்ற திமிரிலும், அதிகார மமதையிலும் திமுகவினர் தொடர்ச்சியாக அரசு அதிகாரிகளையும், பொதுமக்களையும் மிரட்டி, அச்சுறுத்தி, தாக்குவதற்குப் பெயர்தான் திராவிட மாடலா? இதுவரை அவர்கள் ஏன் கைது செய்யப்படவில்லை? திமுக அரசு இக்கொடுமைகளைத் தொடர்ந்து அனுமதிப்பதேன்? இத்தகைய சமூக விரோதச் செயல்களுக்குக் காவல்துறையைத் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்களே முழுமையான பொறுப்பேற்க வேண்டும்.

தமிழ்நாட்டில் அடுத்தடுத்து நேர்மையாகக் கடமையாற்றும் அரசு அதிகாரிகள் தாக்கப்படுவதும், படுகொலை செய்யப்படுவதும் அரசு ஊழியர்களிடையேயும், பொதுமக்களிடத்திலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்காப்புக்காக அரசு ஊழியர்கள் துப்பாக்கி கேட்டு போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது மிகுந்த மனவேதனை அளிக்கிறது.

ஆகவே, திமுக அரசு இனியாவது மணல் கடத்தலில் ஈடுபட்டுள்ள சமூக விரோதிகளுக்குத் துணைபோவதைக் கைவிட்டு, மணற்கொள்ளையைத் தடுத்து நிறுத்த கடும் நடவடிக்கை எடுப்பதோடு, நேர்மையாகச் செயல்படும் அரசு அதிகாரிகளுக்கு உரியப் பாதுகாப்பினை வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். பழனி ஆயக்குடியில் கிராம நிர்வாக அலுவலரைக் கொலை செய்ய முயன்ற திமுகவினரை விரைந்து கைது செய்து சிறையிலடைக்க வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசினை கேட்டுக்கொள்கிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திமனித மனத்தில் நல்ல, துணிவு மிக்க, உயர்ந்த சிந்தனைகளையே பயிரிடுங்கள்;…
அடுத்த செய்திவேலூர் மத்திய சிறை வளாகத்தில் மூடப்பட்டுள்ள பள்ளிவாசலை இசுலாமிய சிறைவாசிகள்…