பாடல்களால் ரசிகர்களின் இதயங்களைத் தாலாட்டிய குரலரசியின் மறைவு தமிழ் இசையுலகிற்கே ஏற்பட்ட பேரிழப்பு!

237

பழம்பெரும் பின்னணி பாடகி அம்மா வாணி ஜெயராம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். மல்லிகை என் மன்னன் மயங்கும் எனக் கேட்போரின் மனம் மயக்கி, நித்தம் நித்தம் நெல்லு சோற்றால் இசைப்பசியாற்றி, என்னுள்ளில் எங்கோ ஏங்கும் ஜீவனால் உள்ளத்து உணர்வுகளை உருக வைத்து, ஏழு சுரங்களுக்குள் எத்தனை பாடல் என்று தான் பாடிய அத்தனை பாடல்களாலும் ரசிகர்களின் இதயங்களைத் தாலாட்டிய குரலரசியின் மறைவு தமிழ் இசையுலகிற்கே ஏற்பட்ட பேரிழப்பாகும்.

அவரது இசைத்திறமைக்கான அங்கீகாரம் உரிய காலத்தில் கிடைக்கவில்லை என்பது ஏமாற்றமும், சோகமுமாகும். இந்திய ஒன்றிய அரசினால் மிக கால தாமதமாக, அண்மையில் அறிவிக்கப்பட்ட பத்மபூசண் விருதினை பெறாமலேயே அவரது இன்னுயிர் பிரிந்துவிட்டது மிகுந்த வேதனை அளிக்கிறது. அம்மாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசு உரிய நீதி விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொணர வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன்.

அம்மா வாணி ஜெயராம் அவர்களின் மறைவால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், உலகெங்கும் வாழும் அவரது ரசிகர் பெருமக்களுக்கும் எனது ஆறுதலை தெரிவித்துத் துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அம்மா வாணி ஜெயராம் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!