தமிழ்நாடு அரசு மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் ! – சீமான் வலியுறுத்தல்

4

தமிழ்நாடு அரசு மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் ! – சீமான் வலியுறுத்தல்

தமிழ்நாடு அரசு நடத்துகின்ற மதுக்கடைகள் 24 மணி நேரமும் இயங்குவதாக உயர்நீதிமன்றமே கண்டிக்கும் அளவிற்கு நிலைமை மோசமாகியுள்ளது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை கொண்டுவருவோம் என்று கடந்த காலங்களில் கூறிய திமுக, தற்போது 24 மணி நேரமும் மதுவிற்பனையில் ஈடுபட்டு வருவது வெட்கக்கேடானது.

மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கொன்றில் மதுக்கடைகள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணிவரை மட்டுமே திறந்திருக்கும் என்று அரசு அறிவித்திருந்த போதிலும் உண்மையில் தமிழ்நாட்டில் மதுவிற்பனை 24 மணிநேரமும் நடைபெறுவதாக கூறப்பட்ட குற்றச்சாட்டை தமிழ்நாடு மறுக்காதது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

மதுவிற்பனையில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக உள்ளது என்று நீதிபதிகளே குற்றம் கூறும் அளவிற்கு தமிழ்நாட்டில் பேரவலம் நிகழ்கிறது.
மாணவர்களுக்கு மது விற்பனை செய்யப்படாமல் தடுப்பதற்கு அரசு என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது என்ற நீதிமன்றத்தின் கேள்விக்கும் தமிழ்நாடு அரசிடம் உரிய பதில் இல்லை என்பதுதான் பெருங்கொடுமை.

அதுமட்டுமின்றி டாஸ்மாக் பார்கள் இரவு 10 மணிக்கே மூடப்படுவதால் அதன் பிறகு குடிப்பவர்கள் பொது இடங்களிலும், சாலையோரங்களிலும் அமர்ந்து குடிப்பதாகவும் அதனை தடுத்து பொதுமக்கள் நலன்காக்க பார்களை 24 மணிநேரமும் திறந்து வைக்க வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள மற்றுமொரு வழக்கொன்றும் அதிர்ச்சியை அளிக்கிறது. இவ்வழக்கானது தமிழ்நாட்டில் மீண்டும் மதுக்கடைகளையும் பார்களையும் 24 மணிநேரமும் இயங்கச் செய்வதற்கு டாஸ்மாக் பாரினை ஏலம் எடுத்துள்ள ஆளுங்கட்சியினரின் மறைமுக
சூழ்ச்சியேயாகும்.

பள்ளிக் கல்லூரிகளில் மாணவர்களும், மாணவியர்களும் சீருடையுடன் குடித்துவிட்டு போதையில் தள்ளாடும் காணொளிகள் அவ்வப்போது வெளியாகி தமிழ்நாடு எந்த அளவுக்கு சீரழிந்துக்கொண்டிருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது.
ஆனால், இளைய தலைமுறை அழிந்தாலும், தமிழ்க் குடும்பங்கள் சிதைந்தாலும் பரவாயில்லை அரசின் வருவாய் மட்டுமே முக்கியம் என்று திமுக அரசு நினைப்பது அண்ணா அவர்கள் கூறியதுபோல் தொழுநோயாளியின் கையில் வழியும் வெண்ணையே அன்றி வேறில்லை.

கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலின்போது ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவோம் என்று அறிவித்த திமுக அரசு, தற்போது அதுகுறித்து வாய்திறவாமல் இருப்பது மக்கள் நலத்தின் மீது எவ்வித அக்கறையும் அரசிற்கு இல்லை என்பதையே வெளிப்படுத்துகிறது.

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் குட்கா விற்பனை நடைபெறு குறித்து சட்டப்பேரவைவரை போராடிய திமுக அரசு, தமது ஆட்சிக்காலத்தில் நடைபெறும் பல்லாயிரக்கணக்கான கிலோ கஞ்சா விற்பனையை இதுவரை தடுக்க முடியவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கஞ்சா விற்பனையின் தலைநகரமாக தமிழ்நாடு மாறிநிற்பதுதான் பெருங்கொடுமை. குட்கா, கஞ்சா போன்றவை போதைப்பொருட்கள் என்று தெரிந்த அரசுக்கு, டாஸ்மாக்கில் விற்கப்படுவது போதைப்பொருளாக தெரியாமல் புனித தீர்த்தமாக தெரிவது ஏன் என்ற கேள்விக்கும் இன்றுவரை பதிலில்லை.

ஆகவே, திமுக அரசு மக்கள் நலத்தில் இனியாவது மதுக்கடைகளையோ பார்களையோ 24 மணிநேரமும் இயங்கச்செய்யும் முயற்சியை கைவிட்டு, மக்களின்மீது அக்கறைகொண்டு உடனடியாக மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

முந்தைய செய்திமதுராந்தகம் தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு
அடுத்த செய்திஒருங்கிணைந்த சேலம் மாவட்ட மகளிர் பாசறையின் பாரம்பரிய பொங்கல் விழா