இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் – சீமான் செய்தியாளர் சந்திப்பு

91

30-12-2022 | ஐயா நம்மாழ்வார் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு – சீமான் செய்தியாளர் சந்திப்பு

இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 30-12-2022 வெள்ளிக்கிழமை, காலை 11 மணியளவில், நாம் தமிழர் கட்சித் தலைமை அலுவலகத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இயற்கை வேளாண் பேரறிஞர் நமது ஐயா நம்மாழ்வார் அவர்களின் 9 ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று 30-12-2022 தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் நாட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்வு சுற்றுச்சூழல் பாசறை சார்பாக திருப்பெரும்புதூர் முடிச்சூரில் நடைபெற்றது.

நிகழ்வின் நிறைவாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சீமான், “இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் அவர்கள், எங்களுடைய தமிழ் மறையோன் வள்ளுவப் பெருமகனார் ‘உழவாண்மை’ பற்றி பகுத்து, வகுத்துத் தந்தருளுய மறைமொழிக்கேற்ப வாழ்ந்த மகான். ‘உழவுக்கும் உண்டு வரலாறு’, ‘விதைகளே பேராயுதம்’ என்று போதித்தத் தமிழ்ப் பேரினத்தினுடைய அறிவாசான் எங்களின் பெரிய தகப்பன் நம்மாழ்வார் அவர்களுடைய நினைவைப் போற்றுகிற நாள் இன்று. ஏன் எங்களுக்கு அவர் பெரிய தகப்பன் என்றால், என்னைப் பெற்று, என்னை நேசித்ததால், என்னைப் பெற்றவன் எனக்குத் தகப்பன். என் மண்ணைப் பெற்று, இந்த மண்ணைப் பேரன்புக்கொண்டு நேசித்ததால் அவர் எங்களுக்குப் பெரிய தகப்பன்.

 

வேளாண்மை என்பதே இயற்கை தான். ஆனால், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு வெடிக்காத வெடி மருந்துகளை எல்லாம், வேதி உரங்களாக மாற்றி, ஒரு வர்த்தக விரிவாக்கத்திற்கு அதைப் பயன்படுத்திவிட்டார்கள். ‘பசுமைப் புரட்சி’ என்பதை நாம் விவசாயம் என்று நினைத்துக்கொண்டு இருந்தோம். ஆனால் அது வியாபாரம் என்பது பிறகு தான் புரிய வந்தது என்று அவரே கூறியது போல, எண்ணற்ற பல செய்திகளை இந்த நாட்டிற்கும், மக்களுக்கும், குறிப்பாக உழவர் குடிகளுக்கும், வருங்காலத் தலைமுறையினருக்கும் போதித்த ஒரு பேராசான் நம்முடைய அப்பா நாமாழ்வார் அவர்கள்.

 

உலகிற்கு அறிவைக் கடன் கொடுத்த இனமடா தமிழர்கள் என்கிற திமிரோடும், பெருமிதத்தோடும் நாம் வலம் வர வேண்டும் என்று எங்களைப் போன்ற பிள்ளைகளுக்கு உணர்வூட்டி உசுப்பியவர் எங்களின் பெரிய தகப்பன். இன்றைக்கு விதை சேமிப்பு, பாரம்பரிய நெல் மீட்பு, பாரம்பரிய விதைகள் மீட்பு, நாட்டு மாடு, நாட்டுக்கோழி வளர்ப்பு என்று இதன் மீதெல்லாம் இன்று மக்கள் ஆர்வம் கொண்டுளனர் என்பதற்கும், பல லட்சம் சம்பளம் வாங்கிக்கொண்டு மென்பொருள் நிறுவனங்களில் வேலை செய்துக்கொண்டிருந்தப் பிள்ளைகள் பலர் அந்த வேலையை விட்டுவிட்டு, இயற்கை வேளாண்மை செய்ய தாய்நிலத்தை நோக்கித் திரும்பியிருப்பதற்குக் காரணமும் நம்முடைய அப்பா நம்மாழ்வார் அவர்களே.

 

தமிழ்ச்சமூகத்தின் உழவர் குடிகள் மத்தியில் வேளாண்மைப் பற்றி ஒரு பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது என்றால், அதற்குக் காரணம் நம்முடைய அப்பா தான். இன்றைக்குக் கடைகளில் இயற்கை உணவு என்றும், மரச்செக்கு எண்ணெய் என்றும் எழுதியிருக்கிறது என்றால், அதற்கு வித்திட்டவரும் அவர் தான். ‘மஞ்சள்’ காப்புரிமையை நாம் இழந்துவிட்டோம். ஆனால், வேப்பமரத்தின் காப்புரிமை நம்மிடத்திலே இன்று இருக்கிறது என்றால், அதைப் பெற்று தந்தப் போராட்டக்காரன் எங்களின் பெரிய தகப்பன் நம்மாழ்வார் அவர்கள் தான். அவருக்கு நாம் தமிழர் பிள்ளைகள் நாங்கள் பெருமிதத்தோடும், திமிரோடும் எங்களின் புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறோம். “நஞ்சில்லா உணவு; அதுவே நம் கனவு” என்று போதித்த எங்கள் பெரிய தகப்பனின் வழியில் நின்று, இயற்கை வேளாண்மையை மீட்டெடுத்து, நச்சு உரங்களை எங்கள் நிலத்தில் கொட்டவிடாது, நீர், நிலம், காற்று நஞ்சாகாமல் காப்போம் என்று உறுதியேற்பது தான் எங்கள் அப்பாவின் நினைவு நாளில் நாங்கள் அவருக்குச் செலுத்தும் உண்மையான புகழ் வணக்கமாக இருக்கும். அந்த உறுதியை நாம் தமிழர் பிள்ளைகள் இந்நாளில் ஏற்கிறோம்” என்று தெரிவித்தார்.

முந்தைய செய்திசாதியின் பெயரால் நடைபெறும் தீண்டாமைக் கொடுமைகள் திராவிடக் கட்சிகளின் தோல்வி! – சீமான் கண்டனம்
அடுத்த செய்திகாஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி -உறுப்பினர் சேர்க்கை முகாம்